தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம்

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் துறையான பெருந்தோட்டத்துறையின் தொழிலாளர்கள் இன்று தங்களது வாழ்வியல் போராட்டத்திற்காக மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தினை மேற் கொள்கிறார்கள்.

பல்லாண்டு காலமாக தேயிலை தோட்ட மக்களோடு பழகிய அனுபவம் மற்றும் யுனிசெப் நிறுவனத்திற்காக தோட்டங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குறைவளர்ச்சிக்கான காரணத்தை அறியும் செயற்திட்டம் போன்றவற்றில் பங்கு பற்றியதால் அவர்களது வறுமை பற்றிய வலியை நான் அறிவேன்.  இவை பற்றிய சில தகவல்கள்



* இலங்கை தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்களிப்பை வழங்குபவர்கள் தோட்ட தொழிலாளர்களே.

*  இவர்களது தற்போதைய நாளாந்த வருமானம் ரூபாய் 290.00. இத்தொகை ஒரு நாள் வருமானமாக இருந்தாலும் 290 X 30 = 8700 ரூபாயை மாதாந்த வருமானமாக இவர்கள் பெறுகிறார்கள் என எண்ண வேண்டாம். இவர்களுக்கு வேலை இருப்பது மாதாந்தம் 15-23 நாட்கள். சில நேரம் மாதத்திற்கு 27-28 நாட்கள் வேலை கிடைக்கும். அதிலும் கிடைக்கும் வேலை நாட்களில் 75 வீதமான நாட்கள் வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களது தினக்கூலி ரூபாய் 220.00 மாத்திரமே. சராசரியாக ஒரு தொழிலாளி 7500.00 ரூபாவை விட குறைந்த அளவே மாதாந்த சம்பளமாக பெறுகிறார். இந்த தொகை தற்போதயை நாட்டு சூழலில் தேவைகளை நிவர்த்தி செய்ய நிச்சயமாக போதுமானதாக இல்லை.

* இவர்கள் தற்போது கேட்கும் ரூபாய் 500.00 என்பது மிகவும் சாதாரணமே. இப்போதெல்லாம் எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் ரூபாய் 500க்கு குறைவான தொகையை சம்பளமாக பெறுபவர்கள் (நிலையான வேலையாட்கள்) இல்லை எனலாம்.

*  இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக 200 வருடங்கள் இருக்கும் இவர்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படியே இருப்பது. நான் யுனிசெப்போடு இணைந்து பணியாற்றிய போது தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் குறை வளர்ச்சிக்கு பிரதான காரணமாக நாங்கள் கண்டறிந்தது குழந்தைகளுக்கு தகுந்த போசாக்கான உணவுகள் கிடைக்காமையாகும். இது அவர்களது கல்வியிலும் தாக்கம் செலுத்துகிறது (இது பற்றிய விரிவான பதிவுவொன்றை பின்னர் இடவுள்ளேன்).

* தோட்டத்துறை பற்றி அறியாத பலர் நினைத்து கொண்டிருப்பதை போல இவர்கள் இப்போது போராடுவது அரசுக்கெதிராக அல்ல. இவர்களது போராட்டம். தோட்ட முதலாளிமார்களோடு தான்.

* இலங்கையில் உள்ள ஏனைய மக்கள், என்றுமே இந்த தோட்ட தொழிலாளர்களை ஒரு ஏளனக்கண்ணோடு தான் பார்க்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை. பொதுவாக பார்க்குமிடத்து இலங்கை ஊடகங்களில் இந்த வாழ்வுக்கான போராட்டம் பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிறியளவிலே இருப்பது கண்கூடு.

* சொகுசு அறையில் இருக்கும் தோட்ட துரைமார்களுக்கு மாத சம்பளம் ஐம்தாயிரத்திற்கும் மேல். மேலும் ஏனைய அனைத்து வசதிகளும் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அதே தோட்டத்தில் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களுக்கு வெறும் 200 ரூபாய் நாளந்த சம்பளம். அதுவும் எந்த நாளும் கிடைப்பதில்லை.


இப்போது தொழிலாளர்களது போராட்டத்தினால் இலங்கை பொருளாதாரத்திற்கு பல பில்லியன்கள் நஷ்டம் என கூறும் தோட்ட துரைமார் சம்மேளனம். அவர்களது வாழ்வுக்கும், வருமானத்துக்கும் அடிப்படையாக விளங்கும் தொழிலாளர்கள் ப்ற்றி இனியாவது சிந்திப்பார்களா?


இந்த போராட்டம் பற்றி எழுத காரணமாக இருந்த பதிவாளர் சந்ருக்கும், இந்த கட்டுரைக்கு ஊக்கத்தை வழங்கிய பிரபல மூத்த பதிவர் வந்தியதேவனுக்கும் எனது நன்றிகள்

பி.கு - ஊடகங்களில் இப்பொழுது இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நான் குறிப்பிட்டது போல் முக்கியத்துவம் கொடுக்காதது சில ஊடகங்கள் மாத்திரமே. 


இந்த போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊடகங்கள் பின்னிற்பது அவர்களுக்கு பலத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. தேசிய பத்திரிக்கைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளில் வரும் இந்த போராட்டம் பற்றிய செய்திகள் இந்த தொழிலாளர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

அவர்களது போராட்டம் வெற்றி பெற பிரார்த்திப்போம்.


12 Responses
  1. ARV Loshan Says:

    தேவையான கட்டுரை.. எதிர்பார்த்த அத்தனை கருத்துக்கள்,விளக்கங்களும் இருக்கின்றன.

    //இலங்கையில் உள்ள ஏனைய மக்கள், என்றுமே இந்த தோட்ட தொழிலாளர்களை ஒரு ஏளனக்கண்ணோடு தான் பார்க்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை. பொதுவாக பார்க்குமிடத்து இலங்கை ஊடகங்களில் இந்த வாழ்வுக்கான போராட்டம் பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிறியளவிலே இருப்பது கண்கூடு.
    //

    முன்பு என்று திருத்துங்கள் யோகா..

    இப்போது எல்லோருமே தோட்டத் தொழிலாளர்கள் என்ற கடின உழைப்பாளிகளின் அருமை உணர்ந்துள்ளார்கள்.

    எல்லாப் பத்திரிகைகளுமே இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நான் அவதானித்து வருகிறேன்.

    வெற்றியில் எங்களால் முடிந்தளவு செய்திகள மூலமான அழுத்தத்தையும் அரசியல்வாதிகளூடான தொடர்புகளின் மூலமும் ஏதாவது செய்ய முயற்சிக்கிறோம். எங்கள் செய்திகளைக் கேட்டாலே தெரியும்.

    இன்று காலை, மதியம் கேட்டீர்களா?

    அரசாங்கம் இன்னும் இறுக்கமான நடவடிக்கையை முதலாளிமாருக்கு எதிராக எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு..

    ஆனால் மற்றுமொரு பாவப்பட்ட இனம்.. :( தமிழர் என்றாலே இது தான் தலை விதியோ??


  2. சட்டங்கள் எதுவும் இம்மக்களின் நலன் கருதி இயற்றப்படவில்லையா?

    வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இம்மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை உபயோகம் செய்ய முடியாதா?

    மலையக அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவம் இயங்குகின்றதா?


  3. ARV Loshan Says:

    ஆதிரை said...
    சட்டங்கள் எதுவும் இம்மக்களின் நலன் கருதி இயற்றப்படவில்லையா?

    வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இம்மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை உபயோகம் செய்ய முடியாதா?

    மலையக அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவம் இயங்குகின்றதா?//

    ஒரு மண்ணும் செய்ய முடியாது.. எல்லாம் முதலாளிமாரின் காசு செய்யும் வேலை..


  4. Unknown Says:

    அந்த மக்களை சிந்திக்க விடாமலேயே வாழச் செய்துவிட்டார்கள். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் இவர்களுக்கு ஆதரவு வழங்குவது போல் தெரிந்தாலும் அவர்கள் அதை சுயலாபத்திற்காகவே, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிகளுக்காகவே செய்கிறார்கள்.
    நல்ல பதிவு...


  5. Admin Says:

    இன்றைய விலை அதிகரிப்புக்கும். வாழ்க்கைச் செலவுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதில்லை. இன்று வேறு பிரதேசங்களிலே இருக்கும் ஒரு கூலித் தொழிலாளி பெறும் குறைந்த பட்ச சம்பளம் என்ன தோட்டத்தொளிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பல மடங்காகும். இலங்கையின் தேசிய உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கும் இவர்களை தோட்டத்துரைமாரும் , அரசும் ஏன் கருத்தில் எடுப்பதில்லை. என்பது புரியவில்லை. மலையக அரசியல்வாதிகள் கூட ஏன் என்றும் பார்ப்பதில்லை என்றே தோன்றுகின்றது.


    இன்று மலையக தொட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் எத்தனை பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். வீர வசனம் பேசிக்கொண்டிருக்கும் அரசியல்; வாதிகள் கண்ணிலே இவர்கள் படும் அவலங்கள் தெரிவதில்லையா?. இந்த அரசியல்வாதிகள் தோட்டத்தொளிலார்களாலே வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதனை மறந்து விட்டார்கள் போலும்.


    //தோட்டத்துறை பற்றி அறியாத பலர் நினைத்து கொண்டிருப்பதை போல இவர்கள் இப்போது போராடுவது அரசுக்கெதிராக அல்ல. இவர்களது போராட்டம். தோட்ட முதலாளிமார்களோடு தான்.//


    உண்மைதான் எதை எதையோ எல்லாம் சாதித்துவிட்டோம் என்று சொல்லும் அரசு இதில் மட்டும் ஏன் சரியான தீர்வுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. பிரதேசங்களின் அபிவிருததியிலே முன்முரமாக ஈடுபடும் அரசு இதிலும் கவனம் செலுத்தலாம் அல்லவா.


    //இலங்கையில் உள்ள ஏனைய மக்கள், என்றுமே இந்த தோட்ட தொழிலாளர்களை ஒரு ஏளனக்கண்ணோடு தான் பார்க்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.//


    உண்மைதான் எதற்காக இந்த ஏளனக்கண்கொண்டு பார்க்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை பிரதேச வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற சிந்தனை வரவேண்டும்.


    உங்கள் இடுகைக்கு நன்றிகள்.. தொடருங்கள்


  6. யோ மக்களாக போராட்டம் நடத்தினால் தான் எதுவும் சாத்தியப்படும், அண்மையில் கூட நான் நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை என பல இடங்களுக்குச் சென்றுவந்தேன் முன்னர் போல் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்களைக் காணக்கிடைக்கவில்லை. அவர்களிடம் வினவியபோது வேறு வேலைகளுக்காக ஏனைய இடங்களுக்குச் செல்வதாக குறிப்பிட்டார்கள். இவர்களைப்போல் தான் ஹோட்டல்களில் வேலை செய்யும் இளைஞர்களும் முதலாளிமார்களால் சுரண்டப்படுகின்றார்கள்.


  7. // LOSHAN said...
    தேவையான கட்டுரை.. எதிர்பார்த்த அத்தனை கருத்துக்கள்,விளக்கங்களும் இருக்கின்றன.

    //இலங்கையில் உள்ள ஏனைய மக்கள், என்றுமே இந்த தோட்ட தொழிலாளர்களை ஒரு ஏளனக்கண்ணோடு தான் பார்க்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை. பொதுவாக பார்க்குமிடத்து இலங்கை ஊடகங்களில் இந்த வாழ்வுக்கான போராட்டம் பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிறியளவிலே இருப்பது கண்கூடு.


    முன்பு என்று திருத்துங்கள் யோகா..//

    ஊடகங்கள் பற்றி போட்டு விட்டேன்

    //இப்போது எல்லோருமே தோட்டத் தொழிலாளர்கள் என்ற கடின உழைப்பாளிகளின் அருமை உணர்ந்துள்ளார்கள்.//

    ஓரளவுக்கு ஏற்று கொள்ளுகிறேன்

    //எல்லாப் பத்திரிகைகளுமே இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நான் அவதானித்து வருகிறேன்.//

    தமிழ் தேசிய பத்திரிகைகள் மட்டுமே ஆதரவு தருகின்றன

    //வெற்றியில் எங்களால் முடிந்தளவு செய்திகள மூலமான அழுத்தத்தையும் அரசியல்வாதிகளூடான தொடர்புகளின் மூலமும் ஏதாவது செய்ய முயற்சிக்கிறோம். எங்கள் செய்திகளைக் கேட்டாலே தெரியும்.

    இன்று காலை, மதியம் கேட்டீர்களா?//


    வெற்றி மற்றும் சூரியன் செய்திகளில் அழுத்தங்கள் வழங்கப்படுவது உண்மைதான்


    //அரசாங்கம் இன்னும் இறுக்கமான நடவடிக்கையை முதலாளிமாருக்கு எதிராக எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு..

    ஆனால் மற்றுமொரு பாவப்பட்ட இனம்.. :( தமிழர் என்றாலே இது தான் தலை விதியோ??//

    தமிழர் மட்டுமல்ல பெருந்தோட்ட துறையில் தொழிலாளர்களாக ஏராளமான சிங்கள மக்களும்
    பணிபுரிகிறார்கள்


  8. // ஆதிரை said...
    சட்டங்கள் எதுவும் இம்மக்களின் நலன் கருதி இயற்றப்படவில்லையா?

    வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இம்மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை உபயோகம் செய்ய முடியாதா?

    மலையக அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவம் இயங்குகின்றதா?//

    இங்கு பல கட்சிகள் இதை வைத்து அரசியல் இலாபமீட்டுவதை குறியாக உள்ளனர். உங்களது கேள்விக்கு பின்னூட்டத்தில் லோஷன் பதிலளித்துள்ளார்.


  9. LOSHAN said...
    ஆதிரை said...
    சட்டங்கள் எதுவும் இம்மக்களின் நலன் கருதி இயற்றப்படவில்லையா?

    வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இம்மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை உபயோகம் செய்ய முடியாதா?

    மலையக அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவம் இயங்குகின்றதா?//

    ஒரு மண்ணும் செய்ய முடியாது.. எல்லாம் முதலாளிமாரின் காசு செய்யும் வேலை.//

    உண்மைதான் லோஷன் உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்


  10. கனககோபி said...
    அந்த மக்களை சிந்திக்க விடாமலேயே வாழச் செய்துவிட்டார்கள். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் இவர்களுக்கு ஆதரவு வழங்குவது போல் தெரிந்தாலும் அவர்கள் அதை சுயலாபத்திற்காகவே, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிகளுக்காகவே செய்கிறார்கள்.
    நல்ல பதிவு//

    நன்றி கனக கோபி ஆனால் இந்த முறை மக்கள் ஓரளவுக்கு சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என யோசிப்போம்


  11. சந்ரு said...

    உண்மைதான் எதற்காக இந்த ஏளனக்கண்கொண்டு பார்க்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை பிரதேச வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற சிந்தனை வரவேண்டும்.


    உங்கள் இடுகைக்கு நன்றிகள்.. தொடருங்கள்//

    வருகைக்கு நன்றி இந்த பதிவு எழுத நீங்களும் வந்தியும் தான் காரணம். நீங்களும் மலையகம் பற்றிய பதிவு போடுவதாக சொன்னீர்களே, அதை எதிர்பார்த்திருக்கிறேன்.


  12. வந்தியத்தேவன் said...
    யோ மக்களாக போராட்டம் நடத்தினால் தான் எதுவும் சாத்தியப்படும், அண்மையில் கூட நான் நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை என பல இடங்களுக்குச் சென்றுவந்தேன் முன்னர் போல் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்களைக் காணக்கிடைக்கவில்லை. அவர்களிடம் வினவியபோது வேறு வேலைகளுக்காக ஏனைய இடங்களுக்குச் செல்வதாக குறிப்பிட்டார்கள். இவர்களைப்போல் தான் ஹோட்டல்களில் வேலை செய்யும் இளைஞர்களும் முதலாளிமார்களால் சுரண்டப்படுகின்றார்கள்////

    நன்றி வந்தி. இங்கு மக்கள் போராட முடியாதபடி முதலாளித்துவத்தால் நசுக்கப்பட்டு இருக்கிறது. தேயிலை தோட்டங்களை விட்டு வேறு வேலை தேடி போக இன்னொரு காரணம் மேற்படிப்பு படித்தவர் தொழிலாளியின் பிள்ளைகளுக்கு தோட்ட உத்தியோகத்தர்கள் போன்ற தொழில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது ஆகும். சில இடங்களில் அவ்வாறு வழங்கப்பட்டாலும் அது எண்ணிக்கை என பார்க்கும் போது ரொம்பவே குறைவு ஆகும்.

    இந்த பதிவு எழுது தூண்டிய உங்களுக்கு நன்றிகள்