நூடுல்ஸ் (28-10-2009)

சென்ற முறை பதிவர் சந்திப்புக்கு பின்னர் எல்லாரிடமும் அதிகரித்த பதிவுகளின் எண்ணிக்கை இப்போ மீண்டும் குறைந்து விட்டன. திங்கட்கிழமை சந்திப்புக்கு பின்னர் மீண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணலாம்.
=============================================================
இலங்கை கிரிக்கட் அணியின் இந்திய சுற்றுலாவிற்கான அணிவிபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. சென்ற வாரம் உள்ளுர் போட்டியில் சதமடித்து தனது கழகத்துக்கு வெற்றி பெற்று தந்த மஹ்ருப்க்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடதக்கது. சனத் ஜயசூரிய இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிடின் அணியில் அவரது இடம் பறிபோக வாய்ப்புள்ளது. எப்போதும் இந்தியாவோடு சிறப்பாக விளையாடும் சனத் இம்முறையும் சாதிப்பார் என எண்ணலாம்.


அடுத்த முக்கிய மாற்றம் ஒரு நாள் அணிக்குள் மீண்டும் தில்ஹார பெர்ணான்டோ வந்துள்ளது. எனினும் சங்கக்கார இவரை டெஸ்ட் அணிக்குள் சேர்க்க முயற்சித்து பயனளிக்கவில்லையாம். ஒரு முறை சர்வதேச ஒலிபரப்பாளர் போட்டியொன்றில் இவரை உலகத்தில் மிக சிறந்த “ஸ்லோ போல்” வீசும் வேகப்பந்துவீச்சாளர் என கூறியதும் எனது பக்கத்திலிருந்த நண்பன் ஏன் உலகத்திலே மிக சிறந்த நோபோல் வீச்சாளரும் இவரே என கூறியது நினைவுக்கு வருகிறது. இம்முறையாவது மனுஷன் நோபோல் போடாமல் பந்து வீசுவாரா என பார்ப்போம் ?


எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது ரொம்ப குறைவு. அப்போதெல்லாம் வாரத்திற்கு 3,4 நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகும். அப்படி காட்டப்படும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடகி ராணி ஜோசப்பின் பாடல்கள் பார்க்க நேரிடும். அவர் பாடுவதை பார்த்து பார்த்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.  காலப்போக்கில் அவரது பாடல்களை பார்ப்பது குறைந்து போனது. சென்றவாரம் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கவலையடைந்தேன். எங்களை இசையால் மகிழ்வித்த அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


=============================================================


சென்ற வாரம் ஆதவன் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். சூர்யாவிடம் வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் குருவியில் விஜய் பறப்பதை விமர்சித்த அளவுக்கு சூர்யா பறப்பதை யாரும் விமர்சிக்கவில்லை. காரணம் என்ன வென்று தெரியவில்லை


=============================================================


சக பதிவர் டாக்டர் ஜீவராஜின் அவர்களின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2009) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.  எமது பதிவர்கள் சார்பில் ஜீவராஜ், அருணா தம்பதிகளின் திருமணத்திற்கு எமது முற்கூட்டிய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். 


=============================================================


இன்று வெற்றியின் விடியலில் லோஷன் கூறிய கவிதையொன்று கேட்டு சிரித்தேன்.   விடியல் கேட்காதவர்களுக்கு கவிதை இதோ..


நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
 உன் தங்கையை பார்த்தேன்
"அடடா வடை போச்சே"


=============================================================
டிஸ்கி - ஆதவன் படம் பார்ப்பதை விட அயன் படத்தை மீண்டும் பார்க்கலாம்





சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன் விற்பனைகூடமொன்றிற்கு விஜயம் செய்த வினக்சின் தந்தை லினஸ் கட்டை விரலை காமித்து என்ன சொல்ல வருகிறார்?



வலைஞர்கள் - ஊடகவியாலர்கள் சந்திப்பு

வலைஞர்களுக்கு கை கொடுக்கும் “இருக்கிறம்” சஞ்சிகையானது, எதிர்வரும் போயாதினமான இரண்டாம் திகதி திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு பதிவர்களையும் அச்சூடகவியலாளர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைவரும் பங்கு பெறுவோம்.



சென்ற முறை பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கிடையான அறிமுகத்தை ஏற்பபடுத்தியிருந்தது. இம்முறை சந்திப்பில் அடுத்த கட்டத்துக்கு அதை கொண்டு செல்லும் என எதிர்பார்ப்போம்.

நிகழ்வு ஏற்பாடு செய்திருக்கும் தினம் எங்களுக்கு விடுமுறை தினமென்பது மகிழ்ச்சியே. எனினும் ஏற்பாட்டு நேரம் மாலை என்பதுதான் ஒரு சிறிய பிரச்சினை காரணம், தூர இடங்களிலிருந்து வருவோருக்கு மீண்டும் அவர்களது இடத்திற்கு செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த சந்திப்பு எம்மை அச்சு ஊடகங்களுக்கும், அச்சு ஊடகங்களை எமக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்போம்.

திங்கள் நிகழ்வில் சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன்


உங்கள் தோழன்
யோகா


ஆதவன் - பதிவர் பார்வையில்

பார்க்க வேண்டும் என நினைத்திருந்து ஆதவன் படம் பார்த்துவிட்டேன். பதிவர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதியிருப்பதால் நான் விமர்சனம் எழுதாமல் நிறை குறைகளை எழுதுகிறேன்.

நிறைகள்

நகைச்சுவை திலகம் வடிவேல் கதாநாயகனாக நடித்து இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு அடுத்து வெளிவந்திருக்கும் படம் ஆதவன். சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு (ப்ரெண்ஸ் படத்துக்கு பிறகு என நினைக்கிறேன்) இரண்டாம் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கிறது. வடிவேலு கதாநாயகனாக நடித்த படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஸ்ரேயா வாய்ப்பிழந்து போன வரலாறு அறிந்தும் இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். இப்படி ஒருவர் பறக்கும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பது முடியாத காரியம்.  கடைசிகாட்சியில் (எங்களுக்கு) கொட்டாவி வந்தாலும் பறந்தே வெற்றியும் பெறுகிறார். சூர்யா பறக்கும் ரகசியத்தை விஜயகாந்திடமிருந்து கற்றிருக்கிறார்.

பின்னணி இசையில் ணொய் ணொய் என மிரட்டியிருக்கும் ஹாரீஸ் அழகிய தமிழ் வார்த்தைகான ஹசலி பிசிலி, தேக்கோ போன்ற வரிகளை கொண்ட பாடல்களை தந்து படத்தின் வெற்றியில் உதவியிருக்கிறார். (ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல)

படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)

படத்தில் அடுத்தடுத்து வரும் விடயங்களை நாங்களே ஊகிக்க கூடியவாறு கதை எழுதிய ரமேஷ் கண்ணாவும் பாராட்டுக்குறியவரே

குறைகள் 

முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.

படத்திற்கு சீரியசாக வருபவர்களையும் வடிவேலு சிரிக்க வைத்துவிட்டார் என்பதும் ஒரு குறையே.

இது போதும் இதுக்கு மேல என்னால முடியல.....


பெயில் (Fail)



பதிவுகள் போட நேரமில்லை. காரணம் அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு படப்பதிவு. பார்த்திட்டு பிடிச்சிருந்தால பின்னூட்டத்தில சொல்லவும்......


இவங்கள் செய்ய முயற்சித்தது என்னவோ....  நடந்தது என்னவோ.....


























































நூடுல்ஸ் (21-10-2009)

தீபாவளி முடிந்து எல்லாரும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். நான் தீபாவளி முடிந்தது என்று குறிப்பிட்டது எல்லாரும் கொண்டாடி முடித்து விட்டார்கள் என்றல்ல. என்னைப்போல் பலபேர் விடுமுறைக்கு வீடு சென்று வந்துவிட்டார்கள் என்பதைதான். எனக்கு இம்முறை தீபாவளி ஆனந்த தாண்டவம் மற்றும் தசாவதாரம் திரைப்படங்களை பார்த்ததோடு முடிந்துவிட்டது. சுஜாதாவின் ”பிரிவோம் சந்திப்போம்” நாவலை வாசித்திருந்த நான் இந்த படத்தை பார்க்க விரும்பியிருந்தேன் அது கடந்த வாரமே சாத்தியமாயிற்று. கதை வாசித்த போது இருந்த அனுபவம் படம் பார்க்கும் போது இருக்கவில்லை என்பது உண்மைதான். தசாவதாரம் படம் மீண்டும் பார்த்தேன். ஒளிப்பதிவுக்காக எத்தனை முறை படம் பார்த்தாலும் அலுக்காது.


================================================================


இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியினரின் 11 வருட நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத போது முதலில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியதற்கு நன்றிகள். சக்தியின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் சக்தியுடனேயே இருந்தனர் என்பது கண்கூடு.  சக்தி ஆரம்பிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளித்தமைக்கு எனக்கு ஒரு பொக்கட் ரேடியோ பரிசாக கிடைத்தது நன்றாக நினைவிருக்கிறது. அந்த பாடசாலை நாட்களில் அந்த வானொலி பெட்டி 24 மணிநேரமும் எங்களது அறையில் பாடி கொண்டிருந்தது. மீண்டுமொருமுறை சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு உங்களது ஆங்கில பெயர்கள், தமிழ் உச்சரிப்புகள், நிகழ்ச்சியின் தரம் போன்றவற்றை கவனிக்காவிடின் இப்போதிருக்கும் ரசிகர்கள் இன்னும் எதிர்காலத்தில் குறைய இடமிருப்பதையும் கூறிக் கொள்கிறேன்.


================================================================


ருபெல்லா தடுப்பு மருந்து இலங்கையில் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. தடுப்பு மருந்து அளிப்பது நோய் வராமல் தடுக்க என்றிருக்கும் நிலையில் அந்த மருந்தால் உயிர் போவது எவ்வளவு கொடுமையான விடயம். அரச இயந்திரம் ஒழுங்காக தொழிற்பட்டு இந்த பிரச்சினை களையபட வேண்டும். சுகாதார அமைச்சர் கூறியபடி இந்த மருந்துகளை இலங்கைக்கு விற்கும் ’ஸ்ரீராம்’ நிறுவனம் தான் உலக நாடுகள் பலவற்றிற்கு இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த பிரச்சினை எழவில்லையா?


================================================================


சம்பியன்ஸ் லீக் எதிர்பார்த்த வரவேற்பு அடையாமல் போனதற்கு நான் சென்ற வாரம் கூறியபடி ஆடுகளங்களும் ஒரு காரணம் 150 ஓட்டங்களையாவது துரத்தி பிடித்தால்தான் இவ்வகையான கிரிக்கட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் வருவர். ஆனால் இந்த மைதானங்களில் பந்து மேலெழும்பாமல் ஐந்தாம் நாள் டெஸ்ட் ஆடுகளம் போல் இருப்பது ரசிகர்களது எண்ணிக்கையை குறைக்கிறது. மேற்கிந்திய அணிகள் உலக கிரிக்கட்டில் தோற்பதையும் ட்ரினிடாட் அன்ட் டுபேக்கோ அணியினர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் காட்டிய விளைாயட்டையும் பார்க்கும் போது மேற்கிந்திய அணியின் வீழ்ச்சிக்கு பிழையான தெரிவே காரணம் என நினைக்க வேண்டியுள்ளது.


================================================================


சனிக்கிழமை ஆதவன் படம் பார்க்க போக இருந்த நான் வெள்ளியிரவு நண்பர்கள் பலரது மூஞ்சிப்புத்தக ஸ்டேசில் படம் சரியில்லை என்பதை பார்த்து எனது முடிவை மாற்றிக் கொண்டேன். இப்போ நண்பர்கள் சொல்வதை கேட்கும் போது முதல் நாள் கூட்டத்தில் அடிபட்டு விசில்களுக்கு மத்தியில் படத்தை பார்க்க இருந்த நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.


================================================================










இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நரகாசுரனை வதம் செய்த நாளான தீபாவளி திருநாளை கொண்டாட இருக்கும் அனைவருக்கும் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

மலையகத்திலே தீபாவளி என்றால் மது கடைகளுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். இந்த வருட தீபாவளியாவது மதுவற்ற தீபாவளியாக கொண்டாட முயற்சிப்போம். மது அரக்கனிலிருந்தும் விடுதலை பெற்ற நாளாக இந்த நாளை கொண்டாடுவோம். மலையகம் மட்டுமல்ல மற்றைய பக்கங்களுக்கும் இது பொதுவான விடயம்தான்.

அடுத்த விடயம் பட்டாசு போன்றவற்றை வெடிக்கையில் சிறுவர்களை கண்கானித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை தீ விபத்துகளிலிருந்தும் காப்போம்.

அனைத்து பதிவர்களுக்கும், பின்னூட்டுபவர்களுக்கும், பதிவுகளை வாசிக்கும் நண்பர்களுக்கும் எனது தீப திருநாள் வாழ்த்துக்கள்.

தீபாவளி காரணமாக இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நான் பதிவுலகிலிருந்து விடுப்பில் போகிறேன். தீபாவளி பலகாரம் கொடுக்க நினைத்தால் பின்னூட்டத்தில் அதை வழங்கலாம்.


நூடுல்ஸ் (14-10-2009)

வார இறுதியில் தீபாவளி வருவதால் என்னைப்போன்ற பலருக்கு தீபாவளிக்கு என விடுமுறை இல்லை. எனக்கு இப்போவெல்லாம் தீபாவளி என்பது ”இந்திய கொலைக்காட்சிகளில் முதல் முறையாக” வோடே முடிந்துவிடும். சிறுவயதில் தீபாவளி என்றால் புது உடுப்பு உடுத்து, நண்பர்களோடு பட்டாசு வெடித்து அலயவர்கள் வீட்டுக்கு பலகாரம் கொண்டு செல்வது மாலையில் சொந்தங்கள் எல்லாம் இணைந்து அரட்டை அடிப்பது என்றே இருந்தது. இப்போதெல்லாம் எல்லா பண்டிகையும் இந்த கொலைக்காட்சிகளின் முன்னாலேயே முடிந்துவிடுகிறது. நானாவது பரவாயில்லை மாலையில் நண்பர்களோடு அரட்டை அடிப்போம் ஏனென்றால் பல இடங்களிலுள்ள நண்பர்கள் தீபாவளி போன்ற நாட்களில்தான் வீட்டுக்கு வருவதால் அனைவரும் ஒன்று கூடும் தினமாக தீபாவளி இருக்கும். ஆனால் பலரது தீபாவளி முழு நாளுமே கொலைக்காட்சிகளின் முன்னாலேயே முடிந்து விடுவது கொடுமை.

இதிலே சிரிப்பு என்ன வென்றால் நாத்திகம் பேசும் உலக தமிழின தலைவராக தன்னை கூறிக் கொள்ளுபவரின் சொந்த தொலைக்காட்சியில் அவரது கொள்கைக்கு எதிராக தீபாவளி நிகழ்ச்சிகள் இடம் பெறுவது.

கலைஞர் தமிழ்ப்புத்தாண்டு தைமாதம் ஆரம்பிப்பதாக கூறியபின்னரும் மற்றைய தொலைக்காட்சிகள் சித்திரை புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகள் என அறிவிப்பு செய்தபின்னர், வேறு வழியின்றி நம்ம கொலைஞர் கொலைக்காட்சி ”சித்திரை மாத முதலாம் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்” என அறிவித்தது.

கடவுளே இல்லை என கூறும் கட்சியின் கொலைக்காட்சியில் இந்த வருடம் நரகாசுரனை வதம் செய்த பண்டிகைக்கு ”தசாவதாரம்” சிறப்பு திரைப்படம் பார்த்து பண்டிகையை இனிதே கொண்டாடுவோம்.

======================================================================
எங்கெங்கோ நடக்கும் உப்பு சப்பில்லாத போட்டிகளை நேரடியாக காட்டும் நம் தொலைக்காட்சி சம்பியண்ஸ் லீக் போட்டிகளை காட்டாதது வருத்தமாக இருந்தது. இடையிடையே 2,3 போட்டிகளை பார்த்த போது இந்த போட்டிகளும் உப்பு சப்பில்லாதவையாகவே இருந்தன. போட்டி நடக்கும் ஆடுகளங்கள் பாடசாலைக் கிரிக்கட்டுக்கு கூட தகுதியற்றவை என்றே தோன்றியது. முதலாம் ஐபில்லை சிறப்பாக நடாத்திய இந்த குழு ஏன் இம்முறை இந்த மாதிரி ஆடுகளங்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியாது.

======================================================================

ஜேக்கப் ஓரம் இந்தவாரம் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 20-20களில் விளையாடுவாராம். IPL போன்ற பணம் கொழிக்கும் போட்டிகள் கிரிக்கட்டை வளர்ப்பதை விட்டு அதை அழித்துவிடுமோ என பயமாக இருக்கிறது. ”மார்க் டெய்லர்“ போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒதுங்கி REAL CRICKET எனப்படும் டெஸ்ட் போட்டிகளில் விளையான்டனர்,ஆனால் இப்போது நிலை தலைகீழ். முதலில் பிளின்டோப் பின்னர் முரளி இப்போ ஓரம். இப்போது மேற்கிந்திய அணியினர் போன்ற ஒரு அணிதான் எதிர்காலத்தில் டெஸ்ட் விளையாட வேண்டி வருமோ?
======================================================================

இலங்கையில் தமிழ் ஒளிபரப்புகள் பலவுள்ளன என பத்திரிகைகள், இணையங்கள் வாயிலாக அறிந்தாலும் கண்டியில் எமது பகுதியில் பார்க்க கூடியதாக இருப்பது தேசிய தொலைக்காட்சியின் தமிழ் சேவையான ”நேத்ரா” மட்டுமே. அதுவும் மாலையில் நாங்கள் பார்க்கும் போது 3 நெடுந் (அறுவை) தொடர்களோடு நின்றுவிடுகிறது. கொழும்பு தமிழருக்கு மட்டும்தான் இவை ஒளிபரப்பை நடத்துகின்றனவா?


”அன்புள்ள்ள ........................ ” கடிதங்கள்

”அன்புள்ள அம்மா....”, ”அன்புள்ள அப்பா.....”, ”அன்பின் காதலிககு....” என எழுதப்ப(ட்ட)டும் கடிதங்கள் இப்போது எங்கே போய்விட்டன? கடிதம் எழுதும் கலையை நாம் இழந்து விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலையே! இன்று வியாபார ரீதியாக மட்டுமே கடிதம் எழுதப்படுகிறது. மற்றபடி கடிதங்கள் ரொம்ப குறைவு.

நானெல்லாம் சிறிய வயதில் எனது அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி எழுதி பழகியவன். அந்த நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. எனது பாடசாலை காலத்தில் 3 மாதத்திற்கு பிறகு வரும் ஒரு மாத கால விடுமுறையில்தான் வீட்டுக்கு சென்று பெற்றோரோடு இருக்கலாம். மற்றைய காலங்களில் தாத்தா வீட்டில் இருந்தபடி பாடசாலை செல்லும் வாழ்க்கைதான். அந்த காலத்தில் எனது அம்மா அப்பாவோடு நான் தொடர்பு கொண்டது கடிதங்களில்தான். அவற்றில் மறக்க முடியாத ஒரு விடயம் நான் எழுதும் கடிதங்களில் உள்ள எழுத்துப்பிழைகளை எனது தந்தை சிகப்பு பேனையால் திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி வைப்பார். எனது எழுத்து பிழைகளை நான் குறைத்து கொள்ள இதுவும் ஒரு காரணம். அந்த கடிதங்கள் தாங்கி வந்தது வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல. பாசம், கண்டிப்பு போன்றவற்றையும்தான்...

மேலும் வகுப்பில் பல மாணவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதி கொடுத்துள்ளேன். பள்ளி நண்பர்களுக்கு வரும் காதல் கடிதங்களில் மேலே ஏதாவது ஒரு காதல் பாடல் இடம் பெற்றிருக்கும் நாங்களும் அதே போல் எதிர்பாடல் ஒன்று எழுத வேண்டும். இதற்காக பாட்டு புத்தகங்கள் எல்லாம் வாங்கி பாடல் தேடுவோம். இன்றைய மாணவர்களிடம் இந்த மாதிரி கடிதக் காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று கடிதங்கள் அழிந்து போனதற்கு தொலைபேசி பேச்சுக்கள், குறுஞ் செய்திகள், மின்னஞ்சல்கள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் அவை எதுவுமே கடிதம் கொண்டு வந்த உணர்ச்சியை கொண்டு வருமென்று நான் நினைக்கவில்லை. தபால்காரனிடம் கடிதத்தை எதிர் பார்த்து காத்திருப்பது இனிமையான அவஸ்த்தை. அவை வைரமுத்து “காதலித்து பார்” கவிதையில் ”தபால்காரன் தெய்வமாவான்” இன்னொரு கவிதையில் ”காதலர்கள் இல்லா விட்டால் தபால் இலாகா நஷ்டபட்டுவிடும்” எனவும் கூறியிருப்பார், ஆனால் இது இந்த காலத்திற்கு பொருந்தாது. பிரசித்தி பெற்றவர்களது கடிதங்கள் ஏலத்தில் விடப்பட்டதை பார்த்து சின்ன வயதில் ”ஏன் இதை எல்லாம் ஏலம் விடுகிறார்கள்” என யோசித்திருக்கிறேன். ஆனால் இன்று யோசிக்கும் போது கடிதங்கள் எவ்வளவு உணர்வு மயமானவை என தோன்றுகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு தகவல் பரிமாற்றம் உடனுக்குடன் கிடைக்க போகிறது. இதனால் இவர்கள் இழக்க போகும் முக்கிய விடயங்களில் ஒன்று இந்த உணர்வுகளை காட்டும் கடிதப் போக்குவரத்து. எவ்வளவுதான் தொலைபேசியில் நேரில் கதைத்தாலும் எழுதுவதில் காட்டும் உணர்வுகளை எழுத்தில் காட்ட இயலாதென்பதே என் நிலைப்பாடு.

இனியாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதம் எழுதுவோம். அதன் உணர்வுகளை பாதுகாப்போம்.


உன்னை பார்க்க விரும்பவில்லை

உன்னை நான் பார்க்க 
விரும்பவில்லை
மீண்டும் நான் உன்னை 
பார்க்க விரும்பவில்லை
நீ தான் எனக்கு 
முதல் காதலி..
கடைசி காதலியும் கூட..


நீயும் நானும் 
சிரித்து பேசினோம், 
என்னை பற்றி அறிந்தாய்
உனது எல்லமே சொன்னாய் 
ஆனால் என்னை நீ
காதலிப்பதை ஏன்
சொல்லவில்லை...


உன்னை நானும்
என்னை நீயும் காதலித்தது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஆனாலும் நாம்
அதை வெளிப்படுத்தவில்லை..


என் கல்லூரி வாழ்வில்
ஐஸ்வர்யா ராய் கூட
உன்னை விட அழகில்லை
என்றே தோன்றியது..


என் நேரத்தை எல்லாம் 
நீயே பறித்து கொண்டாய்
உன் நேரமெல்லாம் 
எனக்காக
செலவழித்ததும் நானறிவேன்


காதல் கைகூடாததற்கு
என்னென்னமோ 
காரணமிருக்கலாம்
காதலித்த நாமே 
காரணமாயிருந்தது
நமக்கு மட்டுமே


பல வருடம் கழிந்தாலும்
என் மனதில் ஒரு முலையில்
உன் ஞாபகம் 
இருந்து கொண்டேயிருக்கிறது..


”சோகங்கள் எனக்கும்,
நெஞ்சோடு இருக்கு,
சிரிக்காத நாளில்லையே”
பாடல் வரி கேட்கும்
போதெல்லாம் என்னை பற்றிய 
பாட்டோ என
வியந்திருக்கிறேன்.


இன்று இன்னொருவருக்கு 
மனைவியாகிவிட்ட
உன்னை

மீண்டும் நான்  
பார்க்க விரும்பவில்லை



உன் வாழ்க்கை 
நலமாயிருக்க வாழ்த்தும் நான்

மீண்டும் உன்னை 
பார்க்க விரும்பவில்லை






நூடுல்ஸ்

கொஞ்ச நாள் எழுத போராடித்ததால் எழுதவில்லை. ஆனாலும் நண்பர்கள் ஏன் எழுதவில்லை என விசாரித்ததில் நேற்று கொஞ்ச இடை வெளிக்கு பிறகு ஒரு பதிவு எழுதியிருந்தேன். எழுதாவிடினும் பலரது பதிவுகளை வாசித்தும் பின்னூட்டியும் இருந்தேன்.

======================================================================
நான் எழுதிய 2010ல் எழுதப்படும் கடிதம் மற்றைய பல பதிவர்களின் ஆக்கங்களுடன் இம்மாத “இருக்கிறோம்” சஞ்சிகை வந்திருப்பது பதிவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே. எங்களது எழுத்துகள் சஞ்சிகைகளில் வருவதை வரவேற்போம். “இருக்கிறம் ” சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம். எனது ஆக்கம் உங்களது சஞ்சிகையில் வந்தது எனக்கு தெரியாது. பதிவர் வந்தியத்தேவன் சொல்லி தான் தெரியும். அவர் கூறியிருக்காவிட்டால் இப்படி எனது ஆக்கம் ஒரு பத்திரிகையில் வந்திருப்பது கடைசி வரை தெரியாமலிருந்திருக்கலாம். ஆகவே எனது அந்தப்பதிவில் இந்த ஆக்கத்தை பிரசுரிக்கிறோம் என ஒரு பின்னூட்டமாவது இட்டிருக்கலாம். அடுத்த முறை அவ்வாறு செய்வீாகள் என எண்ணுகிறேன். இலங்கையிலிருந்து இந்திய தரத்தில் வரும் “இருக்கிறம்” சஞ்சிகைக்கு எமது ஆதரவை வழங்குவோம். இந்திய தரம் என நான் குறிப்பிட்டது அச்சுத்தரமேயன்றி ஆக்கங்களை பற்றியல்ல. தமிழக அச்சு ஊடகங்கள் (பொதுவாக இலங்கைக்கு வருபவை) சினிமாவை தான் அதிகம் தாங்கி வருகின்றன.


======================================================================


அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி இன்னொரு கிண்ணத்தை சுவீகரித்து விட்டது. கடைசிரை போராடி பாகிஸ்தானை வென்ற அவுஸ்திரேலியா ஆசிய அணிகளை விட அதிகம் கிண்ணத்துக்கு தகுதியானது தான். அரையிருதியில் சதம் கண்ட பொன்டிங் கூறிய ”ஒவ்வொரு பந்துக்கும் மதிப்பளித்து விளையாடியதால் தான் சதம் பெற்றேன்” என்னும் கூற்று கிரிக்கட் விளையாடும் சகலருக்கும் பொருந்தும். 


அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்க உமர் அக்மலுக்கு நடுவர் வழங்கிய பிழையான தீர்ப்பும் ஒரு காரணம். இந்த தீர்ப்பை வழங்கியவர் உலகத்தில் சிறந்த நடுவராக (ஆங்கில ஊடகங்களில்) கூறப்படும் சைமன் டவ்பல். இதே தீர்ப்பை இலங்கை நடுவர்கள் வழங்கியிருந்தால் ஆங்கில வர்ணனையாளர்கள் நிலைமை தலை கீழ். நடுவரை வெகு காட்டமாக விமர்சித்திருப்பார்கள். இந்திய கிரிக்கட் சபை இந்த ஆட்டமிழப்பிற்கு பின்னணியில் இருப்பதாக ஒரு ஊடகத்தில் விமர்சிக்கப்பட்டிருப்பது. இன்னொரு வேடிக்கையான செய்தி.கிரிக்கட் அதிஷ்டத்தில் தங்கியிருப்பது என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டிருக்கிறது.


கிரிக்கட் விருதுகள் ஐசீசீயால் வழங்கப்பட்டிருக்கின்றன.  இதுவும் தமிழக அரசு விருதுகளை போல கேலிக்குறியதாக தான் இருக்கிறது. இது பற்றி ஒரு பதிவு இட இருக்கிறேன்.


======================================================================
ஜெயமான வானொலி துல்லியமான தமிழ் உச்சரிப்புக்கு பெயர் போனது. அவ்வானொலிககு ரசிகர்கள் அதிகரிக்க காரணமும் இதேதான், ஆனால் கடந்த வெள்ளிமாலை ஒரு அறிவிப்பாளினி வேகமாக பேசுகிறேன் என ஏதேதோ சொன்னார். உதாரணமாக பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் என்பதை ”புதிய பம்பலப்பிட்டி, கதிரேசன்“ என கூறினார்.  இதை நிர்வாகம் கவனித்தால் நல்லது. ஏனெனில் மற்றைய ஊடகங்கள் சொற்பிரயோகங்களில் பிழை செய்வதாக விமர்சிப்பவர்கள் ஜெயமான வானொலியை விமர்சிப்பதில்லை, காரணம் அவர்களது அழகான தமிழ் உச்சரிப்பு.


======================================================================

ஏ. ஆர் ரகுமான் ஆஸ்கார் வாங்கிய பாடல் ஒரு அட்டைக்காப்பி என பிரபல பதிவர் அதிஷா கூறியிருக்கிறார். இது நான் எப்பவோ எதிர்பார்த்தது ரகுமான் என்னும் நம்ம கலைஞர் உலகப்புகழ் பெற்றது பலருக்கு பிடிக்கவில்லை.. நம்முடைய மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சினை நம்மவர்கள் சாதிக்க கூடாது, சாதித்தால் ஏதாவது குறுக்கு வழியில் தான் சாதித்திருப்பார்கள் என்ற மனபாவம் தான். கமல் தொடக்கம் ரகுமான் வரை இங்கு இதே நிலைதான். தானும் முன்னேற கூடாது, அடுத்தவரும் முன்னேற கூடாது என்னும் குறுகிய மனப்பான்மை நம்மவர்களிடம் அதிகம்.

இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதை விட சங்கீதம் பற்றி அறிந்த ஒரு பதிவர் அதை மறுத்து எழுதிய பதிவு வின் சுட்டி இங்கே. இரண்டு பதிவையும் வாசித்து பாருங்கள். தயவுசெய்து ஒரு மாபெரும் சாதனை புரிந்த கலைஞனை கேவலப்படுத்த வேண்டாம்.
======================================================================


அம்மா பகவான் பற்றி ஏராளமான சர்ச்சையான கருத்துகள் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இலங்கையின் தேசிய தமிழ்பத்திரிக்கையான வீரகேசரி அதன் இரண்டாம் பக்கத்தில் அம்மா பகவான் பற்றிய கட்டுரையை வெளியிட்டிருப்பது வேதனையான விடயம்.


======================================================================
எவ்வளவு நாள்தான் சினிமா நடிகைகளின் படங்களை போட்டு கொண்டிருப்பது. ஆகவே வேறு ஒரு படம். உலகின் சிக்கலான ரயில் பாதை கீழுள்ள படத்தில்..






ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன்.

கமல் என்னும் மபெரும் கலைஞனின் நடிப்பை பார்த்து வியந்திருக்கும் நான் கமலின் தீவிர விசிறியல்ல, எனினும் கமல் படம் பிடிக்கும். அன்பே சிவம் என்னும் படத்தை கிட்டதட்ட 10,15 தடவை பார்த்திருப்பேன். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை பார்த்து காதல் என்றால் என்ன என தெரியா வயதில் அழுதிருக்கிறேன். அந்த வயதில் வேறு எந்த நடிகராலும் என்னை அழ வைக்கவில்லை என தான் கூற வேண்டும். 


எப்போதும் போல் கூட்டத்தில் முண்டியடித்து கமல் படம் பார்க்க பிடிக்காமல், காரணம் தியேட்டரில் கமல் ரசிகர்கள் விசிலடித்து, சத்தம் போட்டு படத்தை ரசிக்க இயலாமல் செய்து விடுவார்கள் (ஏனெனில் தசாவதாரம் முதல் முறை பார்க்கும் போது காட்சி மட்டுமே விளங்கியது) ஒரு வாரம் தாண்டி தான் கூட்டம் கொஞ்சம் குறைய படம் பார்க்க போனேன். எல்லாரும் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சித்து இருப்பதால் நான் அதை விமர்சிக்க வில்லை எனக்கு படத்தில் தெரிந்த ப்ளஸ், மைனசை பற்றி தான் கூற போகிறேன்.


ப்ளஸ்
* ஒன்றரை மணித்தியாலங்களில் படம் முடிகிறது. ஆனால் படம் இப்போதான் தொடங்கியது என்ற உணர்வு கடைசி வரை இருக்கிறது.. படு வேகத்தோடு போகும் திரைக்கதை.
* வழமையான கமலின் அநாயாசமான நடிப்பு. சும்மா இருந்த இடத்திலிருந்தே தொலைபேசியில் கதைத்து கொண்டு அதற்கேற்ப முகபாவனைகளை மாற்றிக் கொள்ளும் கமலுக்கே உரிய தனிப்பட்ட நடிப்பு.
* கமல் என்னும் மாபெரும் ஆளுமையை மீறி வெளித்தெரிந்த மோகன்லாலின் நடிப்பு. ஓரிரண்டு சந்தர்ப்பங்களை தவிருத்து வழமையாக கமலின் படத்தில் கமலை மீறி யாரும் வெளியே தெரிய மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் தெனாலியில் ரகுமானின் இசை மற்ற படங்களவில் பேசப்படாமை. மோகன்லால் செம ஸ்மார்ட், இந்த போலீஸ் பாத்திரத்தை இதை விட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. 
* ஆரிப் என்னும் பாத்திரத்தில் நடித்தவரின் பாடிலெங்குவேஜ் மற்றும் மிடுக்கான நடிப்பு. 
* படத்தின் பின்னணி இசை அதிபிரமாதம் என்று பல கமல் ரசிகர்களால் விளிக்கப்பட்டமையை நான் ஆதரிக்கவில்லை எனினும் படத்தோடு எங்களை ஒன்றிப்போக வைத்த ஓரு முக்கியமான காரணிகளில் இசையும் ஒன்று. 
* படத்தின் தொகுப்பு மிக அருமை படத்துக்கு தேவையானவற்றை மட்டும் வெளி கொணர்ந்திருந்து.
* ஆங்கில பட தரத்திற்கு வேகமான திரைக்கதை படங்கள் நமது மொழியில் வர இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம் (எனது சொந்த ஆசை).


மைனஸ்
* தீவிரவாதம் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்னும் நிலைப்பாட்டை படம் முழுக்க வெளிக்காட்டிய வசனங்கள். என்னுடன் படம் பார்த்த முஸ்லிம் நண்பர்களுக்கு இது முகசசுளிப்பை ஏற்படுத்தியது உண்மை. விஜயகாந்த் படங்களில் வந்த பாகிஸ்தான்/முஸ்லிம் தீவிரவாதிகளை நான் கமல் என்னும் சிந்தனா சக்தி கொண்ட கலைஞனிடம் எதிர்பார்க்கவில்லை.
* காமன்மேன் என்ற பாத்திரத்தில் நடித்த கமலின் நுனி நாக்கு ஆங்கிலம் அவரை ஒரு Upper Class மனிதனாகவே தெரிகிறது.
* சொந்தக்கருத்துகளை படத்தில் கமல் திணித்திருப்பது. வாக்காளர் பெயர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்னும் அவரது ஆதங்கத்தை படத்தில் காட்டியிருப்பதானது கமலுக்கே ஒரு கரும்புள்ளிதான், வசூல்ராஜாவில் ”ஆள்வார்பேட்டை ஆளுடா” தசாவதாரத்தில் ”உலக நாயகனே” போன்ற பாடல்களை போலவே இவற்றை கமல் தனது படத்துக்குள் திணித்து கொள்வதாக பட்டாலும் இந்த படத்தில் இந்த வசனம் அந்நியமாகவே படுகிறது. சிம்பு, தனுஷ் அளவிற்கு தனக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினையை படத்தில் காட்டுவதை கமலிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
* படத்தின் இறுதியில் முடிவு எங்களால் ஊகிக்க முடிந்தது என்பது கடைசி கட்டத்தில் ஒரு வேகத்தடையே
* தீவிரவாதத்திற்கு முடிவு தீவிர வாதமே என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.




மொத்தத்தில் சில சில குறைகள் இருந்தாலும் உன்னைப்போல் ஒருவன் எம்போன்று ஒருவனே.


UPO is not an Ordinary Film but also not an Extraordinary Film,  ஆனால் ஆங்கில தரத்தில் ஒரு தமிழ் படம்


கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரமாக எழுதிய பதிவு..