“சராசரி நான்”


சாலையோர விபத்துகளை
ஒரு கணப்பொழுதுகளில்
சலனமின்றிக் கடக்கின்றேன்.......


செய்திகளில் தெறிக்கும்
இரத்தம் பார்த்தும்
சாப்பாட்டை தொடர்கிறேன்........


கையேந்தும் பிச்சைக்காரனை
சில்லறை இருந்தும்
பாராமல் நடக்கிறேன் .......


அருகிலிருந்தவன் தடுக்கிய
சத்தம் கேட்டும்
நாவல்களில் மூழ்குகிறேன்......


சாலையை கடக்க முடியாத
குருடனை மறந்து 
என் வழியில் நடக்கிறேன்.....


இருந்தும்..............................


நறுக்கப்பட்ட விரலில்
சொட்டிய இரு துளி இரத்திற்காய்
துடி துடிக்கும்
சராசரி நான்....................




இது எனது தோழியொருத்தி எனது வலைப்பதிவில் இடுகையிட தந்த கவிதை. இந்த கவிதையை பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள். 







யுனிஸ் கான் - சுய அறிக்ககை



முழுப் பெயர் - யுனிஸ் கான் (இம்ரான் கான் மாதிரி பேரெடுக்க ஆசைதான். ம்ம்ம்ம்)


செல்லப்பெயர் - யூனுஸ் கான்  (இத தான்யா உண்மையான பேர். சொல்ல மாட்டேங்குறாங்க)


முழு நேர தொழில் - WWE பற்றி பேட்டி கொடுத்தல் (நான் WWE மாதிரி இல்லீங்க, நல்லவன்)

பகுதி நேர தொழில் - தலைமை பதவி (அதுக்கும் இப்ப போட்டி வந்திடுச்சுண்ணா)


பிடித்த ஷொட்  - சுவீப் ஷொட் (எப்படி போட்டாலும் கில்லி மாதிரி அடிப்போமில்ல)


பிடிக்காத ஷொட்  - ரிவர்ஸ் சுவீப் ஷொட் (முக்கியமான நேரத்தில அடிச்சி அவுட்  ஆகிடுவோமுல்ல)


ரொம்ப சந்தோஷபட்டது - 20-20 இறுதி போட்டி வெற்றியில் (அப்ரிடி காப்பாத்திட்டான்)


ரொம்ப துக்கப்பட்டது - பாப் வுல்மர் மரணம் (என்ன ஆளாக்கினவரு)

பிடித்த பாடல்  - ஆடுங்கடா என்ன சுத்தி (அதுக்கு நான் ஒழுங்கா ஆடணுமே)



பிடிக்காத பாடல்  - எங்கிட்ட மோதாதே (சொகீப் மாலிக், அப்ரிடி எல்லாம் பாடுறானுங்க)

முணுமுணுப்பது - அப்ரிடி தலமையில் தோத்துடனும்! (2 மெட்ச் வெற்றி. ர்ர்ர்)



எதிரி  - யாருமே இல்ல (நான் யாரு கூடவும் சண்டைக்கு போக மாட்டேன்)


எதிரி (மனதில்) - அப்ரிடி (தலைவர் பதவி கிடைச்சதும் பொறுப்பா விளையாடுறான்)


நண்பன் - மொஹம்மட் யுசுப் (நல்ல வேளை ICL போனான்)


எரிச்சல் - இலங்கையில் தோல்வியுற்றது (காணுற நேரமெல்லாம் அடிச்சானுங்க)


சாதனை - எந்த கஷ்டம் வந்தாலும் சிரிப்பது (அதுக்குனு அழுக வந்தா சிரிப்பியானு கேக்க கூடாது)


பொறாமை -  என்னத்த சொல்லுறது (இன்னும் ஏதாவது செஞ்சி பேமசாகனும்)


வேதனை - தரவரிசையில கீழே இறங்கியது (நானா எங்க இறங்குனேன், அவங்கதான்)


அவசரத்தில போட்ட பதிவு, பிடிக்காட்டி திட்டுங்க, பின்னூட்டத்தில்



பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்

சுபானுவிடம் நான் சொந்த செலவில் சூனியம் வைத்து பின் அவர் என்னை அழைத்த தொடர் பதிவு.எனக்கு பிடித்தவற்றை எழுத வாய்ப்பு கொடுத்த சுபானுவுக்கு நன்றி..

பாசமான உறவுகள் பிடிக்கும்
பள்ளிநாட்கள் அசை போட பிடிக்கும்
நண்பரோடு நள்ளிரவு வரை அரட்டை பிடிக்கும்
என்னேரமும் சண்டை போடும் பாசமான தோழி பிடிக்கும்
பள்ளி காலத்தில் விளையாண்ட கிரிக்கட் பிடிக்கும்

சைட் அடித்த காலம்  பிடிக்கும்
சைட் அடிப்பதை ரசிக்கும் பெண்கள் பிடிக்கும்
சண்டைக்கு வரும் தோழிகள் பிடிக்கும்
உயிர் கொடுக்கும் தோழர்கள் பிடிக்கும்

ஆசிரியரிடம் வாங்கிய திட்டுகள் பிடிக்கும்
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்

ஏ.ஆர் ரகுமான் பிடிக்கும்
இரவில் ஹெட் போனில் பாட்டு கேட்டு நடக்க பிடிக்கும்
அதுவும் ரகுமானின் மெலடி கேட்டு நடக்க ரொம்ப பிடிக்கும்
கிட்டார்  பிடிக்கும்
கிட்டாரில் இளையராஜா பாடல் இசைப்பதை கேட்க பிடிக்கும்
அதை அமைதியாக கண்மூடி ரசிக்க பிடிக்கும்

ரஜனி படத்தில் வேகம் பிடிக்கும்
கமல் படத்தை ரசிக்க பிடிக்கும்
சூர்யாவின் 6 பெக் பிடிக்கும்
மணிரத்தினம் படம் பார்க்க பிடிக்கும் 
அன்பே சிவம் மீண்டும் பார்க்க பிடிக்கும்
இளைய நிலா பாடல் பிடிக்கும்

தாய் மொழி தமிழ் பிடிக்கும்
எங்கள் முன் பீட்டர் விடும் பெண்கள் பிடிக்கும்
அழகாக தமிழ் பேசுபவர்கள்  பிடிக்கும்
என் நண்பன் சுரேசின் கையெழுத்து  பிடிக்கும்

என்நேரமும் தோழியோடு சண்டை போட பிடிக்கும்
அவளோடு கோபித்து கதைக்காத பொழுதுகள் பிடிக்கும்
மீண்டும் சமாதானம் பேசும் SMS கள் பிடிக்கும்
இனி சண்டை வேண்டாம் என சொல்ல பிடிக்கும்
அடுத்த நாள் மீண்டும் சண்டை போட பிடிக்கும்

சின்ன வயதில் இழந்த உறவுகளை மீட்ட பிடிக்கும்
முதன் முதலில் வாங்கிய பைக் பிடிக்கும்
நடுராத்திரியில் எழுப்பி பிறந்த நாளுக்கு வாழ்த்த பிடிக்கும்
எழுத  பிடிக்கும் இலக்கங்கள் ரொம்ப பிடிக்கும்
அதனால் கணித பாடம் என்றும்  பிடிக்கும்

என் நாடு இலங்கை பிடிக்கும்
அதிலும் நுவரெலியா அதிகம் பிடிக்கும்
நுவரெலியா குளிர்  பிடிக்கும்
நுவரெலியா மழையில் நனைந்து விளையாட பிடிக்கும்

காதலிப்பவர்கள்  பிடிக்கும்
காதலிக்கப்பட பிடிக்கும்
காதல் வர்ணிப்புகள் பிடிக்கும்
காதல் திருமணம் ரொம்ப பிடிக்கும்

மலையேற  பிடிக்கும்
அதுவும் நண்பர்களோடு போக பிடிக்கும்
நீண்ட தூர பயணத்தில் தூங்க பிடிக்கும்
இடையிடையே வெளியே எட்டிப் பார்க்க பிடிக்கும்




அம்மாவிடம் திட்டு வாங்கி காலையில் தூங்க  பிடிக்கும்
குட்டி தூக்கம் பிடிக்கும்
பைக்கில் ஹெல்மட் இல்லாமல் போக பிடிக்கும்
அதிவேகமாக பைக் ஓட்ட  பிடிக்கும்


இணைத்தில் உலவ  பிடிக்கும் 
பதிவுலகம் ரொம்ப பிடிக்கும் 
கணனி  பிடிக்கும் 
மிஸ் கால் வரும் தொலைபேசி  பிடிக்கும் 


அரவிந்த ஹீக் ஷொட் பிடிக்கும் 
சனத் பேட்டிங் பிடிக்கும் 
முரளியின் பந்து வீசுகையில் அவரது முகம் பிடிக்கும் 
தூக்கம் விழித்து கிரிக்கட் பார்க்க பிடிக்கும் 

இன்னும் ரொம்ப விடயங்கள்  பிடிக்கும் 


இந்த தொடர் பதிவில் யாரையாவது மாட்டிவிட பிடிக்கும்
இப்போதைக்கு கனககோபி, சகா கார்க்கி, மன்னார் அமுதனை அழைக்கவும் பிடிக்கும்


நூடுல்ஸ்

இந்த வாரம் யாழ்தேவி நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்ததால் அதிக பதிவுகள் எழுதியிருப்பதால் நூடுல்ஸ் எழுத நாட்கள் எடுத்து விட்டது.

======================================================================
இன்று காலை செய்திதாளில் இந்திய கிரிக்கட் அணி பயிற்றுவிப்பாளர் ”சிறப்பாக கிரிக்கட் விளையாட செக்ஸ் உதவுகிறதாக” கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சும்மாவே யுவராஜ் போன்ற வீரர்களின் பேர் மைதானத்திற்கு வெளியே கெட்டு போயுள்ளது. (ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி பெற்றதற்கு முதல் நாளிரவு. யுவராஜ், ரைனா போன்ற வீரர்கள் மொடல்களோடு சுற்றியதை ஆதாரத்தோடு இந்திய செய்தி சேனல்கள் ஒப்பித்திருந்தன.) இப்படி பயிற்றுவிப்பாளரே கூறினால் இனி அவ்வளவுதான்.

======================================================================

வேட்டைக்காரன் பாடல்கள் கேட்டேன், வழமையான விஜய் பாடல்கள் போன்றேிருந்தன. முதன் முதலில் கேட்கும் போது (First Impression) சில பாடல்கள் மனதை கவரும். அந்த வகையில் பாடல்கள் இல்லை எனதான் கூற வேண்டும். ”அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, மோதி பாரு வீடு போய் சேர மாட்ட” போன்ற கபிலனால் இளைய தளபதிக்காகவே எழுதும் பாடல்களை கோண்டிருக்கின்றன. கபிலன் எழுதிய இதே போன்ற இன்னொரு பாடலும் படத்தில் உண்டு. கில்லி பாடல்கள் முதலில் என்னை கவரவில்லை, ஆனாலும் படத்தை பார்த்த பின் பாடல்கள் நன்றாக ஹிட் ஆகின. அந்த வகையில் தான் இதுவும் சேர்கிறதா பார்ப்போம்.  பாடல்கள் பற்றிய சகா கார்க்கியின் கலக்கல் விமர்சனத்தை இங்கு வாசிக்கவும்

======================================================================

பிரகாசமான வானொலியில் தொலைபேசியில் ஒருத்தருக்கு கதைத்து தாங்கள் யாரென்று கூறாமல் அவரை பேச விட்டு கிண்டலடிக்கிறார்கள். இப்போ கொஞ்சம் மேலே சென்று அவரது தொழிலை, அவருக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என எல்லாம் கிண்டலடிகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவரின் மனம் நோகும் என அவர்கள் அறிந்திருக்கவில்லையா? இதே போன்றொரு நிகழ்ச்சி முன்னர் வேறொரு வானொலியில் ”ஒலித்து வைத்த ஒலிவாங்கி” என ஒலித்தது. அது இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரை புண்படுத்தவில்லை என நினைக்கிறேன்.

======================================================================

ஆங்கிலம் என்று கூறியவுடன் சென்ற வாரம் விஜய் டீவியில் இடம்பெற்ற நீயா? நானா? நினைவுக்கு வந்தது. ஆங்கிலம் பேச கஷ்டபடுபவர்களும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களும் கலந்து கொண்டனர். அங்கு பேசிய ஒரு பெண் லைசன்ஸ் இல்லாமல் போய் போலிசிடம் மாட்டிக் கொண்டால் ஆங்கிலத்தில் பேசி தப்பித்துக் கொள்ளலாம் என கூறியதற்கு நிகழ்ச்சி அறிவிப்பாளர் கோபிநாத் ”அரிவாளுடன் போறவரையும் தான் போலீஸ் விட்டுவிடும், உங்களையும் அதே போல் விட்டு விடும். ஆகவே நீங்கள் ஆங்கிலத்தை அரிவாள் போன் று பயமுறுத்தி தவறு செய்யவே பாவிக்கிறீர்கள்” என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஆங்கிலம் பேசும் பக்கமுள்ள ஒருபெண் "ORACLE என்பதை பலர் ஒராக்கிள் என்கின்றனர். இது போன்றவை கேட்க கடினமாக இருக்கிறது.இது ஆரக்கிள் என வரவேண்டும்.” என்றார். எங்களுக்கெல்லாம் இலங்கையில் அதை ஒராக்கிள் என்றுதானே சொல்லி கொடுக்கின்றனர். மறுநாள் எனது கணனி ஆசிரியரை தொடர்பு கொண்டு கெட்ட போது அது ஒராக்கிள் என தான் உச்சரிக்க வேண்டும் என கூறினார். அப்போது அந்த பெண் கூறியது பிமையா?

======================================================================

மனிதனின் சிறந்த நண்பன் என நாயை கூறுவார்கள். அதை இந்த படம் நிருபிக்கின்றது. அவ்வளவுதான் நோ கொமண்ட்ஸ்




மறக்க முடியாத கிரிக்கட் இனிங்ஸ்



1996 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் உச்ச கட்டம், அரையிறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகள் சந்திக்கின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தித்து அதில் சனத் ஜயசூரியவின் புயல் வேக பேட்டிங்கினால் இந்திய பந்துவீச்சாளர்களை இல்லாமல் செய்து இலங்கை அணி இலகுவாக வென்றது. ஆனாலும் அப்போட்டியில் சச்சின் சதம் ஒன்றை பெற்றும் இந்தியாவால் வெல்ல முடியவில்லை.

சனத், களுவித்தாரண என்னும் போர்மில் இருக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி மற்றும் ஏற்கனவே இந்தியாவை வென்ற நம்பிக்கையுடன் இலங்கையும் ஏற்கனவே தோற்றாலும் இம்முறை பழிக்குப்பழி வாங்குவோம் மேலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சச்சின் இருக்கும் அசகாய போர்மில் வெல்லலாம் என்கிற நம்பிக்கையில் இந்திய அணியும் 120,000 என்கிற மாபெரும் ரசிகர்கள் முன்னால் கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நம்பிக்யுடன் போட்டியிட தயாராகின. டாசில் வென்ற இந்திய தலைவர் அசாருதீன் இலங்கை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால் அவர்களை தோற்கடிப்பது கடினம் என இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

முதல் ஓவரில் சனத் களுவித்தாரண இருவரும் ஆட்டமிளந்துவிட்டனர் போட்டி இந்தியா வசமாகியது. அப்போது தான் துடுப்பெடுத்தாட இறங்கினார் அரவிந்த டீ சில்வா. துரதிஷ்ட வசமாக நின்று ஆடும் குருசிங்கவும் ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்தார். அந்த இக்கட்டான நிலமையில் இந்தியா போட்டியை இந்தியா வசமிருந்து அழகான, நேர்த்தியான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை பக்கம் பறித்தெடுத்தார் அரவிந்த. சிறி நாத், பிரசாத், கும்ப்ளே என எல்லா பந்து வீச்சாளர்களது பந்தையும் எல்லைக் கோட்டுக்கு அடித்து விரட்டினார். போட்டியின் பின் சிறிநாத் ஒரு பேட்டியில் “அந்த நிமிடத்தில் அரவிந்தவுக்கு எங்கு பந்து வீசுவது என தெரியவில்லை. அவ்வளவு அழகாக ஆடினார்” என கூறினார்.

இவ்வளவுக்கும் ஜயசூரிய போன்று 30 யார் வட்டத்துக்கு வெளியே பந்தை தூக்கியெல்லாம் போடவில்லை எல்லாம் நேர்த்தியான கிரிக்கட் ஷொட்கள். 47 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்று கும்ளேயின் பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்த போது, போட்டி இலங்கைக்கு சாதகமாக மாறியிருந்தது. இவ் ஓட்டங்களில் அவர் 14 பௌண்டரிகளை பெற்றிருந்தார்.

இந்த ஆட்டம் தான் எனக்கு கிரிக்கட்டில் மிகவும் பிடித்த இனிங்ஸ். அதற்கு காரணம் அரவிந்த துடுப்பெடுத்தாட வந்த போது ஓட்டங்கள் இல்லாமல் இரண்டு முக்கிய விக்கட்டுகளை இழந்து தத்தளித்த கொண்டிருந்தது குருசிங்கவும் 1 ஓட்டத்தோடு ஆட்டமிளந்தார். முழு Pressure இலங்கை அணி மீது இருந்த போது அடித்து ஆடிய விதம் மிக அருமை. என்னை பொறுத்த வரையில் இது தான் அரவிந்த விளையாடிய மிக சிறந்த இனிங்ஸ் (இறுதிப்போட்டியில் முழு அணியினரும் நன்றாக விளையாடினர். அரவிந்த சதத்தை பெற்றாலும் குருசிங்க, ரணதுங்க அவருக்கு ஆதரவாக துடுப்பெடுதாடினார்)


அரைச்சதம் தாண்டிவிட்டேன்..


அரைச்சதம் அடைந்து விட்டேன். ஆம் இது எனது ஐம்பதாவது பதிவு. 2008 மார்ச் மாதமளவில் பதிவுலகிற்கு வந்த நான் 2009 செப்டெம்பர் மாதம் தான் அரைச்சதம் தான் கடந்திருக்கிறேன். ஆரம்பத்தில் மிக மெதுவாக தட்டி தட்டி ஒவ்வொரு ஓட்டமாக எடுத்த நான் இலங்கை பதிவர் சந்திப்பிற்கு பின் கொஞ்சம் வேகமாக அடித்து ஆடுகிறேன்.

சென்ற வருடம் நான் போட்ட பதிவுகள் வெறும் 9 மாத்திரமே ஆகும், இந்த வருடம் ஜுலை வரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 13 ஆகும். ஆனால் அதற்கு பிறகு தான் என்னுடைய இனிங்ஸ் வேகமாக தொடங்கியது. இந்த பதிவு இந்த இரண்டு மாதங்களில் நான் போடும் 28வது பதிவு.  இலங்கை பதிவர் சந்திப்பு காரணமாக தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதற்கு காரணம் சந்திப்பிற்கு முன் எனக்கு எழுத ஆசை ஆனால் எனது பதிவு வாசிக்கப்படுகிறதா என தெரியாது, காரணம் பின்னூட்டம் அதிகம் கிடைக்காது. பொலோயர்கள் 4 அல்லது 5 மட்டுமே. ஆனால் அதற்கு பிறகு கிரமமாக பின்னூட்டம், பொலோயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதன் பின்னரே நான் எழுதியதை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்தேன். மேலும் இப்போது பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க இன்னுமொரு காரணம் வந்தியின் ”கொஞ்ச நேரம் பொன்னான நேரம்... ” என்கிற பதிவு. இதன்படி ஆணிபிடுங்கிக் கொண்டு இடையிடையே கிடைக்கும் கொஞ்ச கொஞ்ச நேரங்களில் எழுதி சேமித்து வைத்து கொண்ட முழுமையானதும் அதை பதிவிடுகிறேன்.

இன்னுமொரு விடயம் நான் தனியாக வசித்து வருகிறேன். எனது ஓய்வு நேரத்தை அநேகமாக தொ(ல்)லைகாட்சி அல்லது கணனியில்தான் போக்குகிறேன், ஆகவே பதிவிட எனக்கு கிடைக்கும் நேரம் ஒப்பீட்டளவில் அதிகம். ஒரு வகையில் இப்பதிவுலகம் எனது தனிமையை போக்கும் துணையாகவும் இருந்து வருகிறது.

பதிவுலகம் ஏராளமான நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள் நாட்டிலும் கடல் கடந்தும் பல நட்புகள் எனது தளத்துக்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. நானும் 50 பதிவுகள் அதுவும் இந்த வருடத்திலே எழுதுவேன் என நினைத்திருக்கவில்லை. அதுவும் யாழ்தேவி திரட்டி நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்த காலத்திலேயே எனது 50வது பதிவு எழுதக்கிடைத்ததும் அதிஷ்டம்தான்

எனது 50 பதிவுகளுக்கு ஆதரவு தந்த பதிவுலக நட்புகளே! தொடர்ந்து எனக்கு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.


2070 ஆம் வருடத்தில் ஒரு தந்தை எழுதுவது..

எனக்கு வந்த ஒரு ஈமெயிலில்
  2070 ஆம் ஆண்டு ஒரு தந்தை 
  எழுதும் கடிதத்தை பார்த்தேன் 
  மிகவும் அருமையாக இருந்தது
  அதை எனக்கு புரிந்த விதத்தில் 
  தமிழ் படுத்தியிருக்கிறேன்,  
  பிடித்திருந்தால் பின்னூட்டமும் 
  ஓட்டும் போடுங்க தலைவா"









இது
 2070 ஆம் ஆண்டு


நான் 50 வயதை எட்டி சற்று நாளாகின்றது , ஆனாலும் என் தோற்றம் கிட்ட தட்ட ஒரு 85 வயதானவரை போல இருக்கின்றது... நான் சிறுநீரக (கிட்னி) வருத்தத்தால் ரொம்பவே அவதிபடுகிறேன். அதற்கு காரணம் நான் தேவையான அளவு சுத்தமான நீரை அருந்தாமை ஆகும். இன்னும் அதிக காலம் நான் உயிர் வாழ மாட்டேன் என கவலையாய் இருக்கிறது. ஆனாலும் நான் இந்த சமூகத்திலேயே ரொம்ப வயதானவன் என்கிற பெருமையோடு சாகப் போகிறேன் என்னும் சந்தோஷமும் என்னுள் இருக்கிறது.

எனக்கு என் 5 வயது காலகட்டம் நன்றாகவே நினைவு இருக்கின்றது, அப்போதைய உலகம் ரொம்பவே வித்தியாசமானதும் கூட... பசுமையான நாட்கள் அவை.. அதிகளவில் பூங்காக்களும், பூங்காக்கள் நிறைய மரங்களும் இருந்தன. அழகான மலர் தோட்டங்களை எல்லா வீடுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த நாட்களில் நான் அரை மணித்தியாலங்கள் எல்லாம் குளித்திருக்கிறேன். ஆனால் இப்போ குளிப்பதற்கு பதிலாக எண்ணை மற்றும் டவல் மூலமாக தானே எங்கள் தோலை சுத்த படுத்தி கொள்கிறோம்...


அந்த காலங்களில் பெண்களின் தலையில் அழகான கூந்தல் இருந்தது, இப்போ தண்ணீர் கொண்டு சுத்த படுத்த முடியாததால் தலையை வழித்து கொண்டு மொட்டை தலை கொண்டவர்களாக அல்லவா இருக்கின்றோம். அந்த நாட்களில் என் தந்தை அவரது காரை குழாய் நீரை கொண்டு கழுவுவது வழக்கம், இதை என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான், "நீரை இப்படி எல்லாம் வீணாக்குவார்களா?" என என்னிடம் கேட்கிறான்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது அந்த காலத்தில் "நீரை சேமிப்போம்" என சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என எராளமான இடங்களில் விளம்பர படுத்தப்பட்டு இருந்தது, ஆனால் அப்போது தண்ணீர் என்பது அழிய கூடிய ஒன்றாக நங்கள் நினைக்கவில்லை. அதனால் அதனை பாதுகாக்காமல் விட்டு விட்டோம். அதனால் இப்போது ஆறுகள், ஓடைகள், குளங்கள், வாவிகள், நிலத்தடி தண்ணீர் எல்லாமே வறண்டு போய் விட்டது அல்லது அழிக்க பட்டு விட்டது.

உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்து விட்டது, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது, இப்போதெல்லாம் உப்பிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் தொழில் சாலைகள் தான் அதிகமானோருக்கு வேலை தரும் முக்கிய நிறுவனங்களாக இருக்கிறன்றன, இவற்றிலும் அதிகமானோர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக குடிக்கும் நீரையே பெற்று கொள்கின்றனர்.

துப்பாக்கி முனையில் தண்ணீரை பறித்து கொண்டு போவது இப்போதெல்லாம் ரொம்பவே சகஜமாகி போய் விட்டது, உணவு என்பது 80% செயற்கை முறையானதாகவே இருக்கின்றது, முன்னெல்லாம் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் என கருதபட்டது, அனால் இப்போது எனக்கு 1/2 கிளாஸ் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. நங்கள் இப்போதெல்லாம் பாவித்து வீசி எறியும் உடைகளையே பாவிக்கின்றோம், இது குப்பைகளை அதிகரித்து விட்டது.

குப்பை தொட்டிகள் போல் மலசலகூட கழிவுகளும் தொட்டிகளுக்கே போகும் மாதிரி தான் செய்து உள்ளோம், எனேன்றால் நீரால் கழிவுகளை அகற்றும் நிலையில் நாமில்லை, அந்தளவுக்கு நீரை வீணாக்க முடியாது.

இப்போதைய மக்களின் வெளிப்புற தோற்றம் ரொம்பவே விகாரமடைந்து காணப்டுகின்றது, வயது போனவரை போன்ற தோற்றம், தோல் தடிப்படைதல், விகாரமான தோற்றம் என்பன மிகவுமே சாதரணமான விஷயங்களாகி போய் விட்டன, அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகவே தோலை தாக்குவதால் தோல் புற்றுநோய் என்பது மிகவும் சாதாரணமாகி போய் விட்டது. இன்று இறப்பு வீதம் அதிகரிக்கமைக்கு காரணம் சிறுநீரக பாதிப்பு ஆகும்.

தோல் கலங்களின் இறப்பால் இருபது வயதானவர்கள் எல்லாம் நாற்பது வயதானவரை போல தென்படுகின்றனர். சகல விஞ்ஞானிகள் நீருக்கு பதிலாக உபயோகபடுத்த கூடிய வேறு வழிமுறைகளை கண்டறிய இரவு பகல் பாராமல் போராடுகின்றனர் ஆனாலும் என்ன செய்ய தண்ணீர் என்பதுசெயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருளாகவே இன்னும் இருக்கின்றது.



மரங்கள் மற்றும் மற்றைய தாவரங்கள் குறைவடைந்ததால் ஒட்சிசன் கூட இப்போ ரொம்பவும் குறைந்து உள்ளது, இதன் காரணமாக அடுத்துவரும் சந்ததியினர் புத்தி வளர்ச்சி குறைவடைய எராளமான வாய்ப்புகள் உள்ளன.

மனிதனின் இயல்பு நிலை மாற்றம் அடைய தொடங்கி விட்டது, விகார நிலை அடைய தொடங்கி பிறக்கும் குழந்தைகள் எல்லாம் விகாரமாகி எதோ ஒரு குறையுடன் அல்லது அவயவங்களில் ஏதாவது பிரச்சினைகளுடனும் பிறக்கின்றன.

அரசாங்கத்திற்கு நாங்கள் சுவாசிக்கும் வரி கட்டுகிறோம், ஒரு நாளைக்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்சிசனின் அளவு 137 m3 ஆகும். இந்த வரியை கட்டாதவர்களை அரசாங்கம் விசேட சுவாசிக்கும் பிரிவிலிருந்து வெளியேற்றி சாதாரண காற்றை சுவாசிக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றது, இங்கு மனிதனுக்கு சூரிய சக்தியில் மூலம் சுவாசிக்க காற்று வழங்க படுகிறது, இந்த பிரதேசத்தில் உள்ள காற்று மிகவும் தரமானதாக இல்லாவிட்டலும், உயிர் வாழ போதுமானதாக இருக்கும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் 35 வருடங்களாகும்.

இன்னும் மிக சில நாடுகளில் பசும் புல் வெளிகள், காடுகள், ஆறுகள் இருக்கின்றன அவை ஆயுதம் தரித்த ராணுவங்களால் பாதுகாக்க படுகின்றன. தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறி விட்டது, இப்போதைக்கு தங்கம், வைரங்களை விட தண்ணீரே மிகவும் விலை உயர்ந்த பொருள் ஆகும். நான் வாழும் பிரதேசத்தில் எங்ககேயும் ஒரு மரத்தை தானும் காண இயலாது, காரணம் இங்கு பெய்யும் அமில மழை.

இதற்கெல்லாம் காரணம் நங்கள் இயற்கையை பாதுகாக்காமல் விட்டதும் , அணு சக்தி பிரயோகமுமே ஆகும், நாங்கள் இயற்கையை பாதுகாக்க சொல்லி எராளமாக எச்சரிக்க பட்டோம், ஆனாலும் நங்கள் யாருமே அதை பற்றி சிந்திக்கவில்லை, என் மகன் என் காலத்தை பற்றி கேட்கும் போது பசும் புல் வெளிகள், மலர்களின் அழகு, மழை, நீச்சல், ஆறுகளிலும் குளங்களிலும் உள்ள மீன்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு நீரை குடிக்கும் வசதி, மனிதர்கள் எவளவு சுக தேகியாக வாழ்ந்தார்கள் என எல்லாம் கூறினேன்

அடுத்து என்மகன் கேட்டான் ஒரு கேள்வி. "இப்போ ஏன் அப்பா அப்படி தண்ணீர் இல்லை?" என்கிற அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் என் தொண்டையிலுள்ள உள்ள தண்ணீர் வற்றி விட்டது, ...

காரணம் தண்ணீரை வீணாக்கி இயற்கையை அழித்து, இப்போதைய இந்த தண்ணீர் இல்லா பிரச்சினைக்கு மூலக்காரணமான சந்ததியை சேர்ந்தவன் என்ற முறையில், பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன். 



நாங்கள் செய்த தப்புக்கு எங்கள் பிள்ளைகள் பெரிய விலையை கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மனிதனின் வாழ் நாள் குறைந்ததுக்கு நானும் காரணம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும்

இதை வாசிப்பதால் யாராவது ஒரு நிமிடம் இயற்கையை அழிப்பதில் நமக்கும் பங்கு உண்டு என நினைத்தால் என் பதிவுக்கு அர்த்தம் உள்ளது என நினைக்கிறேன்..... 



இது ஒரு மீள்பதிவு நட்சத்திர வாரத்தில் அதிகம் பதிவுகள் போட வேண்டி இருப்பதால் ஏற்கனவே எழுதப்பட்ட இந்த பதிவை மீள கொஞ்சம் திருத்தத்துடன் பதிவிடுகிறேன். கடந்த முறை அதிகம் பேர் வாசிக்க வில்லை என நினைக்கிறேன்.


ஆதிரைக்கு எலி பிரச்சினையிலிருந்து தப்ப யோசனைகள்

இலங்கையின் பிரபல பதிவர் ஆதிரை அவர்களுக்கு எலியினால் பல தொல்லைகள் ஏற்பட்டுள்ளன என பதிவுலக சக்கரவர்த்தி லோஷன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இலங்கை பதிவுலகில் பல அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அகில உலக சகலகலா பதிவர் வந்தியின் தலைமையில் இலங்கை பதிவர்கள் ஒன்று கூடி ஆதிரையின் எலிப்பிரச்சினையை தீர்க்க எந்த வகையில் பதிவர்கள் உதவலாம் என ஆராய்ந்ததன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகனை நான் பதிவிடுகிறேன். இந்த முறைகளில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி ஆதிரை அவர்கள் பதிவுலகிற்கு மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.

* முதலாவது முடிவு விஜய் ரசிகர் பதிவர் சதீஷ் முன்வைத்த யோசனை “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலை சத்தமாக போட்டு ஆடவும் அப்ப அந்த இசைக்கு எலியும் அவரோடு ஆடும். அப்போது விஜய் பிரபு தேவாவை அழைப்பது போல் ”வாங்கண்ணா” என அழைத்து எலி கிட்ட வரும் போது அதை கொல்லலாம்.

* அனானிகளால் தாக்கப்பட்டு மீண்ட பதிவர் சந்ரு தெரிவித்த யோசனை ஆதிரை அவரது அறையை யாராவது ஒரு அனானிக்கு அல்லது அவரது எதிரி ஒருத்தருக்கு குறுகிய கால வாடகைக்கு விடலாம். பின்னர் வாடகையிருப்பாளரை எலி தாக்கி ஓய்ந்த பின் அறையை மீள பெற்றுக் கொள்ளலாம். இந்த யோசனை பயன் தந்தால் ஆதிரை அறையை விற்பதும் ஒரு சிறந்த வழி என மேலும் தெரிவித்த சந்ரு அறையை இலவசாக விற்கதாக இருந்தால் எலியோடு வாழ தான் தயார் என்பதையும் தெரிவித்தார்.

* சங்க தலைவரும் தீவிர கமல் ரசிகருமான வந்தி அவர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் அமெரிக்காவில் பிரபல மேக்கப் மேன் ஒருவரை வரவழைத்து அவர் மூலமாக தினமும் ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால் பூனை இருப்பதை கண்டு எலிகள் ஓடிவிடும் என்பதை தெரிவித்தார். மேலும் இந்த முறையில் உள்ள நல்ல விடயம் இந்த முறையை பாவித்தால் ஆதிரைக்கு பூனை வாங்க தேவையில்லை என்பதால் பூனை தொல்லையும் இல்லை என்ற மேலதிக தகவலும் வழங்கினார்.

* இன்னொரு பிரபல பதிவர் புல்லட் தனக்கு நன்றாக குறி பார்த்து சுட தெரியுமென்றும் தான் ஆதிரையின் வீட்டிலுள்ள எலிகளை சுட்டு வீழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

* ஊஞ்சலில் ஆடும் பதிவர் சுபானு அவர்கள் ஆதிரைக்கு சீக்கிரமே ஒரு திருமணம் செய்து வைத்தால் பின்னர் ஆதிரையின் துணைவியார் இந்த எலிகளை கவனித்து கொள்வதாகவும், இந்த யோசனைக்கு ஆதிரை சம்மதிக்கும் பட்சத்தில் அவருக்கு தேவையான பெண்ணை தனது திருமண தளத்தில் தேர்ந்தெடுக்கலாமெனவும் கூறினார்.

* எலிகள் இனவிருத்தியை தடை பண்ணி விட்டால் அந்த எலிகளால் இனபெருக்க முடியாமல் எலிகள் தானா குறைந்து விடும் எனவும் ஆசிய எலிகளை இவ்வகையான சத்திரசிகிச்சை மூலமாக தான் ஏற்கவே பரிசோதித்து இருப்பதாகவும், அதனால் தான் முன் வந்து ஆதிரை வீட்டிலுள்ள எலிகளை இந்த சத்திரசிகிச்சை செய்வதாகவும் பம்மல் பதிவர் கனககோபி தெரிவித்தார்.

* மேலும் இறுதியாக ஆதிரயைின் பிரச்சினை வேறு எந்த பதிவருக்கும் வரகூடாது, வந்தால் இலங்கை பதிவர்கள் சார்பில் அதனை தீர்த்து வைக்க பதிவர் சந்ரு தலைமையில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. அது சம்பந்தப்பட்ட தகவல்களை சந்ரு அவரது பதிவில் அறிவிப்பார் எனினும், எனக்கு அந்த சங்கத்தின் பொருளாளர் பதவி கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இன்னும் பல யோசனைகள் இருந்தாலும் இவற்றின் மூலமாகவே இலகுவாக ஆதிரையின் எலிப் பிரச்சினை தீர்த்து வைக்கலாம் என வந்தி தெரிவித்து கொண்டதன் காரணமாக எங்களது கூட்டத்தினை அத்துடன் கலைத்து விட்டோம்.

* பிற்குறிப்பு - வேறு யாருக்காவது எலிப்பிரச்சினை வந்து அதற்கு இந்த முறையில் தீர்வு காண எங்களது சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்து கொள்கிறோம் அவ்வாறு இல்லாத பட்சத்தில் சொ.செ.சூ சட்டம் 452ன் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்டும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்..


மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்போம்

எங்களில் அனேகமானோர் (சில நேரங்களில் நானும் தான்) மாற்றுக்கருத்துகளை விரும்புவதில்லை. “நாம் கூறியது தான் சரி”, “என்னுடைய நிலைப்பாடு தான் சரி” என்கிற நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். மாற்றுக்கருத்து கொண்டவர்களை மாற்றானாகவே பார்த்து பழகிவிட்டோம்.

இப்படி மாற்றானாக பார்த்து பார்த்து அவர்களது சகல கருத்துக்கள், நிலைப்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க தொடங்கி விடுகிறோம். இது விரும்பதகாததாகும். இதையே நம் முன்னோர்கள் “வேண்டாத மருமகள் கைபட்டால் தப்பு, கால் பட்டாலும் தப்பு” என்றார்கள்.

எதிரியிடமும் நல்ல விடயங்களை எடுத்து கொள்ளாலாம் தவறில்லை, ஆனால் நாங்களோ எதிர்கருத்துள்ளவர்களை எதிரிகளாக உருவகப்படுத்திக் கொண்டு அவர்கள் எது செய்தாலும் பிழையே என வாதிடுகிறோம். நான் என்னை பொறுத்த வரையில் அடுத்தவர் கருத்துகளை அதிகமாக மதிப்பவன். சில நேரங்களில் அவை எனக்கு பிழையாக தெரிந்தாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வேன் காரணம் எனக்கு பிழையாக தெரிந்த விடயம் அந்த அன்பருக்கு சரியாக தெரியும். இறுதியில் நான் சம்பந்தப்பட்ட விடயத்தில் எனது கருத்தை அவருக்கு தெரிவித்து விடுவேன்.

ஆனால் சிலர் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்கிற நிலையை விட்டு வரமாட்டார்கள். எதிலுமே நமது கருத்தை தவிர்ந்து இன்னொரு கருத்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சுருங்க கூறின் வாழ்த்துவதையே சரியான விமர்சனமாக கொள்வார்கள்.

 உதாரணமாக நான் சிறு வயது தொடக்கம் ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். இதனால் இப்போதும் இளையராஜா பாடலை விரும்புபவர்கள். எல்லாரும் என்னை இளையராஜா பாடல்களின் எதிரியாகவே பார்க்கிறார்கள். எனக்கு இளையராஜா பாடல்களும் பிடிக்கும். அதை விட இசைப்புயல் பாடல்கள் பிடிக்கும். இவ் இரண்டுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். காரணம் இங்கு “கமல் ரசிகன் என்றால் அவன் ரஜனி படத்துக்கு எதிரி”, “விஜய் படம் பார்க்கிறவன் அஜித் படத்துக்கு எதிரி” என்கிற ரீதியில் தான் இருக்கிறார்கள். (இந்த விடயத்தை கூற சினிமா தேவையா என நீங்கள் கேட்கலாம் என்ன செய்ய தமிழர்களின் சகல விடயங்களும் சினிமாவை வைத்தே எடை போடப்படுகின்ற நிலையில்தான் நாங்கள் இருக்கின்றோம். நேற்று விஜய் டீவியில் பாபாஜி குகைக்கு போவதை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட “நடந்தது என்ன?” நிகழ்ச்சியையும் “சூப்பர் ஸ்டார் சென்ற குகை” என்றே விளம்பரப்படுத்தினர்). எனக்கு ரஜனியும் பிடிக்கும் கமலும் பிடிக்கும், விஜய்யும் பிடிக்கும்

அவரவர்களுக்கென்று சொந்த கருத்து, சொந்த எண்ணங்கள் உண்டு. அவரவர்க்கென்று சுயமாக எதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என மா(ற்)றுவோம். எதிர்கருத்துடையவன் எல்லாம் எதிரியல்ல, நம்மை போல சிந்திப்பவன் எல்லாம் நண்பனுமல்ல என நம்மையும் சுற்றி உள்ளவரையும் மா(ற்)றுவோம்.

இந்த பதிவு சம்பந்தமாக மாற்றுக்கருத்துககள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


யாழ்தேவிக்கு எனது நன்றிகள்



யாழ்தேவி திரட்டியில் இணைந்து ஒரு மாதமே முடிந்துள்ள நிலையில் என்னை இந்தவார நட்சத்திர பதிவாளராக யாழ்தேவி அறிவித்துள்ளது. இது எனக்கு மிக்க சந்தோஷத்தை அளிக்கின்றது, நானெல்லாம் சும்மா நேரத்தை போக்க பதிவெழுத வந்தவன் என்கிற ரீதியில் தான் என்னை நோக்குகிறேன். இந்நிலையில் என்னை நட்சத்திர பதிவாளராக்கியது சந்தோஷமே என்றாலும் இந்த வாரம் கட்டாயம் அதிகம் பதிவுகள் எழுத வேண்டுமென்பது தான் கொஞ்சம் கடினமாயிருக்கிறது.

எவ்வாறாயினும் எனக்கு என் உணர்வுகளை சகலருக்கும் வெளிக்காட்ட ஒரு களமாக இந்த வாரத்தை உபயோகிக்கலாம் என்பது மகிழ்ச்சியான விடயமே.  நேற்று திங்கள் எங்களுக்கு விஷேட விடுமுறை நாளாகையால் காலை எனது மின்னஞ்சலை காலை திறந்து வந்த மடல்களை பார்த்துவிட்டு நண்பர்களோடு முழு நாளையும் வெளியே களித்துவிட்டு வந்ததால் மீண்டும் மின்னஞ்சல்களை பார்க்க இயலாமல் போய்விட்டது. எனக்கு நேற்று இரவு 10 மணியளவில் தான் இந்த வார நட்சத்திர பதிவர் நான் என்ற விடயம் தான் தெரியும். ஆகையால் நட்சத்திர வாரத்தில் முதல் பதிவை இன்று செவ்வாய் கிழமையே போடுகிறேன்.

நான் இலங்கை பதிவர் சந்திப்பிற்கு போன பின்பே யாழ்தேவி என்கிற ஒரு திரட்டி இலங்கையில் இருக்கின்ற விடயம் தெரியவந்தது. அடுத்த நாளே யாழ்தேவியில் இணைந்தேன். எனது பக்கத்துக்கு வருவோர்களின் எண்ணிக்கையை யாழ்தேவி அதிகரித்துள்ளது என்பதை கடந்த வாரமே சொல்லியிருந்தேன்.

மீண்டும் என்னை நட்சத்திர பதிவராக்கிய யாழ்தேவி திரட்டிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மேலும் புலத்திருக்கும் இலங்கை பதிவர் தங்க முகுந்தனுக்கும் எனது நன்றிகள். என்னை நட்சத்திர பதிவராக ஆக்கிய விடயம் தெரியவந்து நேற்று இரவே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். என்னால் அவரோடு பேச இயலவில்லை காரணம் அசதி காரணமாக நேற்று நேரத்துடன் தூங்கி விட்டேன். பின்னர் குறுஞ்செய்தியிலும் எனது பதிவிலும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். நன்றி தங்க முகுந்தன் அவர்களே!


ஹர்பஜன் சிங் - சுய அறிக்கை



முழுப் பெயர் - ஹர்பஜன் சிங்


செல்லப்பெயர் - பாஜி (சாப்பிடுற பஜ்ஜி இல்லீங்க, பாஜி)


முழு நேர தொழில் - ரவுடி, டான்ஸ் போட்டி (நானும் ரவுடிதான்  நானும் ரவுடிதான்..)


பகுதி நேர தொழில் - கிரிக்கட் (அங்கயும் முழு நேர தொழிலை காட்டுவேன்)

ரொம்ப சந்தோஷபட்டது - சைமண்ட்ஸ்க்கு தண்டனை (என்னா மாதிரி நடிச்சேன்)



பிடித்த பாடல் (முன்பு) - என்னம்மா கண்ணு சௌக்கியமா? (எதிர்பாட்டு படிக்கிறது சிறிசாந்த்)

பிடித்த பாடல் (தற்போது) - ஆண்டவன பார்க்கனும் (கேப்டன் பதவி கேட்கணும்)



முணுமுணுப்பது - கமரா காரன் தப்பிச்சிட்டான்! (மாட்டாதடா மவனே!)

எதிரி (வெளிப்படையாக) - சைமண்ட்ஸ், சிறிசாந்த் (என்னை பார்த்த சும்மா அதிருது இல்ல)

எதிரி (மனதில்) - தோனி (தலைவர் பதவி கேக்குறேன், கண்டுக மாட்டேன்கிறாங்க)

நண்பன் - யுவராஜ் சிங் (என்னை போலவே சண்டைக்காரன்)

எரிச்சல் - லைசன்ஸ் இல்லாம காரோட்டி புடிச்சிட்டானுங்க ( லைசனா முக்கியம், ஹம்மர் இல்ல)

சாதனை - கோபம் வந்தால் அடிச்சிடுறது (பொய் சொல்லி தப்பிச்சிடுவேன்)

கடுப்பு - யுவராஜ் பிரீத்தி ஜிந்தாவை கட்டிபிடிச்சிட்டான் ( எங்க IPL  டீமிலயும் இருக்குதே...)

பொறாமை -  ஜீனியர் தோனிக்கு எவ்வளவு விளம்பரம் (இன்னும் ஏதாவது செஞ்சி பேமசாகனும்)

வேதனை - அடிக்கடி தண்டனை கொடுத்துடுறாங்க (அந்த சட்டத்தை எழுதுனவன் மாட்டட்டும்)

 இந்த பதிவை பார்த்திட்டு இந்திய ரசிகர்கள்அல்லது ஹர்பஜன் என்னை அடிக்க வந்தால், நான் அவர்களை அன்றூ சைமண்ட்சிடம் மாட்டிவிடுவேன் என கூறிக்கொள்கிறேன்.





புதன் நூடுல்ஸ்

திங்கள்தான் இதை எழுதுவோம் என இருந்தேன், ஆனாலும் நிலாமதி அக்கா தேவதையை அனுப்பி வைத்ததாலும் கார்க்கி பாவா அழகு, கடவுள், பணம், காதல் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நண்பர் மருதமூரான் பள்ளி காலத்துக்கு அழைத்து சென்றதாலும் இன்று தான் எழுத கிடைத்தது.

---------------------------------------------------
---------------------------------------------------
இலங்கை இந்தியா அணிகளுக்கிடையில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இலங்கை அணி ரசிகனான எனக்கு சற்று கவலைதான் (கவலையில் போட்டி முடிந்த பின் பரிசளிப்பை பார்க்கவில்லை, தூங்கி விட்டேன்). ஆனாலும் இரண்டாவதாக பிரேமதாச மைதானத்தில் துடுப்பெடுத்தாடும் அணிகள் 200 ஓட்டங்களை நெருங்குவதே கடினமான விடயமாக கருதுகையில், இலக்கை விரட்டி போட்டிக்கு விறு விறுப்பை கொடுத்த இலங்கை வீரர்கள் பாராட்டுக்குறியவர்கள். இந்திய அணி வெற்றி பெற்றாலும் 44 ஒவர் வரை வெற்றி இரு அணிக்கு இடையிலும் மாறி மாறி பென்டுலம் ஆடியது,

பெங்களுரில் கமராமேனை அடித்து பெருமை சேர்த்த ஹர்பஜன் இன்னும் விட்டிருந்தால் மைதானத்தில் இலங்கை வீரர்களை அடித்து வீழ்தியிருப்பார். ஹர்பஜன், இசாந்த் சர்மா, நேஹ்ரா, பதான் போன்றோர் விளையாடும் வரையில் ICC யால் வழங்கப்படும் கண்ணியமான அணி என்ற விருது இந்தியாவுக்கு கிடைக்காது. இவ்வளவுககும் சச்சின், டிராவிட் போன்ற கண்ணியமான வீரர்கள் அந்த அணியில் தான் இருக்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

இலங்கை தோற்றது கவலையாக இருந்தாலும், ஆனானப்பட்ட ரோஜர் பெடரரே யு எஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் தோற்றுதானே விட்டார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன். இது உங்களுக்கு தெரிந்த செய்தி தான் ஆகவே இத்தொடர் பற்றிய வேறு சில தகவல்கள்.

இத்தொடரை நேரில் சென்று ரசித்தவர்கள் 721,059 பேர் இது சென்ற வருட 720,227 பேர் என்னும் எண்ணிக்கையை விட சற்று அதிகம். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சாதனை வரவு 61,554 மேலும் ஒரு வாரத்துக்கான அதிகளவு பார்வையாளர் சாதனை வரவான 423,427 என்னும் எண்ணிக்கையும் இத்தொடரிலே அமைந்தது (நீ என்ன கேப்டனா புள்ளி விபரம் சொல்லுறியே என கேட்க கூடாது)

ரபேல் நடால் ரோஜர் பெடரர் என இரு நட்சத்திரங்களும் இம்முறை கவிழ்ந்து விட்டன. (வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு). சென்ற வாரம் நான் ரிக்கி பொன்டிங்கை கலாய்த்து தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை உசுப்பி விட்டதால் சிங்கம் நேற்று அடித்து நொறுக்கி ஒரு சதத்தை பெற்று அவுஸ்திரேலியாவை வெற்றி பெற செய்து விட்டது. (சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்)
---------------------------------------------------
---------------------------------------------------

பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா?

தினமும் சில வானொலிகளில் காலையில் இன்றைய பலன்கள் பற்றி கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. சிலருக்கு இவற்றில் நம்பிக்கை இருந்தாலும் என்னை போல் பல பேர் காலையில் இதை கேட்பதில் ஆர்வமில்லை. (இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விடுவேன்). வானொலி போன்ற அறிவியல் ஊடகங்களில் ஜாதகம் போன்ற விடயங்கள் கதைப்பதை தவிர்த்து அறிவியல் சம்பந்தமான பல விடயங்களை செய்யலாமே?

உபரி தகவல் - இதே வானொலி வார இறுதியில் ஜோதிடம் சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியையும் செய்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

ஸ்ருதிஹாசனின் இசையில் உன்னைபோல் ஒருவன் பாடல்கள் கேட்டேன் பிரமாதம் என கூற முடியாவிட்டாலும், பரவாயில்லை எனலாம். அடுத்தடுத்த ஆலபங்களில் இன்னும் அதிகமாக பிரகாசிப்பார் என நினைப்போம். சில நேரம் படம் வந்த பின் பாடல்கள் ஹிட் ஆகலாம். சில பாடல்கள் படங்களில் பார்த்த பின் மனதை விட்டு அகலாதவை.

---------------------------------------------------
---------------------------------------------------
தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினைகள் பற்றி சந்ரு, வந்தியத்தேவன், கனககோபி போன்றோர் தங்களது பதிவுகளில் எழுதியமைக்கு நன்றி. வாழ்வுக்காக போராடும் இந்த மக்கள் தொடர்பாக பதிவர்கள் சிந்தித்தது அவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கும் என்பது ஐயமில்லை

---------------------------------------------------
---------------------------------------------------
யாழ்தேவி திரட்டியின் இந்த வார நட்சத்திர பதிவர் வந்தியத்தேவனுக்கு யோ வாய்ஸ் சார்பில் வாழ்த்துக்கள். சென்ற வார நட்சத்திர பதிவர் தங்க முகுந்தனுக்கும் வாழ்த்துக்கள். (சும்மா விட முடியுமா ரெண்டு பேரையும்  தொடர் பதிவுகளில் மாட்டி விட்டுருக்கோமில்ல).
யாழ்தேவி திரடை்டியில் இணைந்த பின் எனது தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன்.
---------------------------------------------------
---------------------------------------------------
என் காதலியின் படத்தை கீழே போட்டிருக்கிறென். பார்த்தவர்கள் எங்களின் ஜோடி பொருத்தத்தை பின்னூட்டவும்.



பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)


பதிவுலக நண்பரான மருதமூரான் அழைத்த தொடர் விளையாட்டுக்கு வந்திருக்கிறேன். எனது பாடசாலை காலத்தை மீட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்த கௌரவ.மருதமூரான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

மற்றையவர்களை போல அல்லாமல் நான் பாலர் வகுப்பு எனப்படும் ஆண்டு 01 தொடக்கம் உயர்தரம் வரை படித்தது ஒரே பாடசாலையிலாகும். அது நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி. எனது பாடசாலை காலமானது எல்லாருடையதையும் போன்று மிகவும் இனிமையானது. அடுத்த மாதம் இக்கல்லூரியின் 150வது வருட நிறைவைக் கொண்டாட இருக்கின்றோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
முதலாம் ஆண்டில் எங்களுக்கு படிப்பித்த ஆசிரியை நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது காலமாகிவிட்டார். அவரது பெயர் நினைவுக்கு வரவில்லை. இரண்டாம் ஆண்டில் எங்களுக்கு மஸ்ஸினா என்ற ஆசிரியர் படிப்பித்தார், அடுத்த வருடம் ருக்மணி என்ற ஆசிரியையும் படிப்பித்தார்.
நான்காம் ஆண்டில் எனக்கு ஜெயமலர் என்ற அருட்சகோதரி வகுப்பாசிரியரானார். அவரது வகுப்பில் படித்த நாட்கள் எனது வாழ்க்கையில் நான் மறக்க இயலாத நாட்கள். அன்பு ஒன்றே எங்கள் சிஸ்டரின் ஆயுதம். யாரையும் அதட்டி கூட பேச மாட்டார். அனைத்து மாணவர்களையும் ”ராசா” என தான் கூப்பிடுவார். மேலும் இந்த வகுப்பில்தான் நான் முதன் முதலில் முதல்நிலை மாணவராக தெரிவு செய்யப்பட்டேன். எங்க சிஸ்டரிடம் நான் வாங்கிய முதலாம் நிலையை பாடசாலையை விட்டு அகலும் வரை ஒரே ஒரு முறை தவிர்ந்து யாருக்கும் விட்டு கொடுக்கவில்லை. நான் உயர்தரம் படிக்கும் வரை என்னை ராசா என்று மட்டுமே அழைத்த எங்கட சிஸ்டர் வடக்கு பக்கம் படிப்பித்து கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டேன். நான் மீண்டும் பார்க்க ஆசைப்படும் நபர்களில் ஒருவர்.
சுந்தரலிங்கம் ஆசிரியரின் கண்டிப்பான வழிகாட்டுதலில் ஆண்டு 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து ஆண்டு 6ல் பலீலா என்ற முஸ்லிம் ஆசிரியையிடம் பயின்றேன். என்னை சொந்த தம்பி போன்று கவனித்தவர் இந்த ஆசிரியை. அடுத்த வருடம் ஆசிரியர் சுகுமாரனிடம் படித்தேன். மிகவும் அசிங்கமாக இருந்த எனது கையெழுத்தை மாற்றியமைத்தவர் இவர்தான். அடுத்த வருடம் ஆசிரியர் வென்சலாஸ் எனது வகுப்பாசிரியர்.
ஆண்டு 9,10, 11 என மூன்று வருடமும் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் கணிதபாட ஆசிரியர் உசைர் ஆவார். ஏற்கனவே எனது விருப்ப பாடமாக இருந்த கணிதத்தை இன்னும் இனிக்க வைத்தவர் இவராவர். கணிதம் என்றாலே ஓதுங்கும் மற்றைய மாணவர்களையும் கணிதபாடம் மேல் விருப்பமடைய வைத்தது இவரது வெற்றியாகும்.
மேலும் இந்த காலத்தில் நான் படித்த அகிலாண்டேஸ்வரி டீச்சர், யோகராஜா சேர், ஈஸ்வரன் சேர், பென்ஜமின் சேர், உலகநாதன் சேர், சோமா டீச்சர், பெரேரா டீச்சர், விஜயகோண் சேர், அத்தப்பத்து டீச்சர், ராஜலட்சுமி டீச்சர், மலர் டீச்சர் போன்றோரும் என்னை செம்மையாக்கியிருக்கிறார்கள்.
எனது அதிபர் பொனிபஸ் சேர் கண்டிப்பு, மற்றும் அன்பு இரண்டையும் மாணவர் மேல் காட்டுபவர். முன்னாள் அதிபராக இருந்த மறைந்த செல்வநாயகம் (வீரையா மாஸ்டர்) சேரும் மிகவும் அன்பான மனிதர். கிரிக்கட் சொல்லிக் கொடுத்த கீர்த்தி சேர் மற்றும் பென்ஜமின் சேர் ஆகிய இருவரும் தான் நான் இப்போது இப்படி கிரிக்கட்டில்ஆர்வமாய் இருப்பதற்கான காரணம்.
மேலதிக வகுப்பு ஆசிரியை விமலினி டீச்சர் கண்டிப்புக்கு பெயர் போனவர். இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். மற்றும் மேரி டீச்சர் வீட்டில் இலவசமாக எனக்கும் இன்னும் 3 மாணவர்களுக்கும் விஞ்ஞானம் கற்பித்தார்.
உயர்தர வகுப்புகளில் படிப்பித்தவர்கள் மகேஸ்வரி டீச்சர்கள் (பௌதீக ஆசிரியரும் மகேஸ்வரி, தாவரவியல் ஆசிரியரும் மகேஸ்வரி) மற்றும் தேவகி டீச்சர் ஆவார்.
இவ்வளவுதான் எனது ஆசிரியர்கள் பற்றி, கல்லூரி காதல் கதைகளை பற்றி நான் இங்கு சொன்னால் அது வேறு பிரச்சினைகளை தரலாம் ஆகவே அது பற்றி இங்கு கதைக்க வில்லை. நான் கல்லூரயில் ரொம்ப நல்ல மாணவன் (அட சத்தியமா சொல்லுறேங்க, நம்புங்க) அதனால் அடிகள் திட்டுகள் வாங்கியது குறைவு. பாடசாலை அனுபவம் பற்றி எழுதினால் இந்த பதிவு கிலோ மீற்றர் அளவுக்கு நீண்டு விடும், ஆகவே அதை இன்னொரு பதிவில் இடுகிறேன்.
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது.
01. தங்க முகுந்தன் (தொடர் பதிவுக்கு மருத மூரான் அழைக்கவில்லை என கவலை பட்டீங்கதானே? இப்ப மாட்டிகிட்டீங்க)
02.கனககோபி (ரொம்ப எல்லாத்தையும் கலாய்க்கும் நீங்க ஒரு சீரியஸ் பதிவு போடுங்க
03.சதீஷ்  ( சினிமா கதை சொல்லுற மாதிரி உங்கட பாடசாலை கதை சொல்லுங்க)

1. உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.




காதல் - அழகு - கடவுள் - பணம்

இந்த வாரம் தொடர் வாரம் என நினைக்கிறேன். நேற்று நிலாமதி அக்காவின் தேவதையிடம் 10 வரங்கள் பற்றிய தொடர் பதிவு எழுதி முடிந்த பின்னர், சாளரம் கார்க்கியிடமிருந்து காதல், அழகு, கடவுள், பணம் பற்றிய இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு வந்தது. 

இன்று மீண்டும் மருதமூரானிடமிருந்து கல்லூரி வாழ்க்கை பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு. இவ் அழைப்புக்கள் பதிவுலக நட்புகள் மூலமாக வருகிறத என்பதை எண்ணிப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் அநேகமான இந்த நட்புகள் எழுத்துகள் மூலமாக அறிமுகமானவை. முகமறியாதவை.


01. அழகு 

 அவரவர் பார்வையை பொறுத்து வேறுபடும் ஒரு விடயமாகும். எனக்கு அழகாக தெரியும் ஒன்று உங்களுக்கு அழகாக தெரியாது,  சிலருக்கு முகம் அழகு, சிலருக்கு செயல் அழகு, சிலருக்கு பேச்சு அழகு, சிலருக்கு உள்ளம் அழகு என ஒவ்வவொரு மனிதனிடமும் ஒவ்வொரு விதமான அழகுண்டு.

02. காதல்
நான் ”காதல் காதல் காதல், காதல இல்லாவிடின் சாதல்” என கூறுபவனில்லை, ஆனாலும் காதல் என்பதுவாழ்க்கையின் இன்பான நிகழ்வு. வைரமுத்துவின் 

” நீ விரும்பும் அவனோ அவளோ 
 உன்னை விரும்பினாலும் விரும்பாவிடினும்
காதலித்துப்பார்
சொர்க்கம் நரகம்
இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம்
காதலித்துப்பார்”

என்ற கவிதை வரிகள் காதல் பற்றி அருமையான விளக்கத்தை கொடுக்கிறது.

03. கடவுள்
நான் கடவுளை நம்புகிறவன், ஆனாலும் ரொம்பவே கடவுளிடம் நெருங்கி இருப்பவனல்ல. அன்பே சிவம், சிவமே அன்பு என்பது தான் கடவுள் பற்றிய எனது எண்ணம்.

04.பணம்
நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்லுற படி அளவோடு இருக்கும் பணம் எங்களை காப்பாற்றும் அளவுக்கு மீறி இருக்கும் பணத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என நம்புகிறவன், அதனால் தான் ரொம்ப பணம் சம்பாதிக்கவில்லை 
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!


1) சந்ரு (உங்கள் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன்)
2) மரூதமூரான் (என்னை மாட்டிவிட்டீங்க தானே இப்ப அனுபவியுங்க)
3) வந்தி (நட்சத்திர பதிவருக்கு எனது காணிக்கை)
4) நிலாமதி அக்கா (கதை சொல்லும் நீங்கள் கருத்தை சொல்லுங்கள்
5) சப்ராஸ் அபூபக்கர் (நோன்பு முடிய பதிவுலகத்துக்கு வர இருப்பவர், வந்த பின் தொடரவும்)
என்னை அழைத்த கார்க்கி பாவாவுக்கு நன்றி



தேவதையிடம் பத்து வரங்கள்.


தேவதையிடம் பத்து வரங்கள்.


இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் என நிலாமதி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.. 

எனக்கு தேவதை அப்படி தோன்றினால் நான் கேட்கும் வரங்களை காரணத்தோடு கேட்கிறேன்.

01. எனது கல்லூரி காலம் மீண்டும் அதே சுற்று சூழலோடு (Environment) வேண்டும்.
 எனது பள்ளிக்காலம் மறக்க இயலாதது. கவலை என்றால் கிலோ என்ன விலை என கேட்போம். அந்த வாழ்க்கை, அந்த நண்பர்கள், அந்த வகுப்பறைகள், அந்த சண்டைகள், அந்த சமாதானங்கள், அந்த கிரிக்கட் போட்டிகள், ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகள், திட்டுகள் இவை அனைத்தும் மீள கிடைத்து அந்த வாழ்க்கை மீண்டும் வாழ கிடைத்தால், இந்த உலகத்திலே என்னை விட சந்தோஷமான மனிதன் யாருமே இருக்க முடியாது. ( I love my college life)

02. தெரிந்தோ தெரியாமலோ நான் யாருடைய மனதை புண்படுத்தி விட்டால் அதை பின்னோக்கி (Undo) சென்று இல்லாமல் செய்து விட வேண்டும்.
சில நேரங்களில் நாங்கள் எங்களை அறியாமல் ஏதாவது ஒரு வழியில் மற்றையவர்களை புண்படுத்தி விடுவோம், சில நேரங்களில் தெரிந்தே புண்படுத்தி விடுவோம். இவற்றை மீண்டும் பின்னோக்கி சென்று அதை சரி செய்திட கூடிய வகையில் (கணணியில் உள்ள ”அன்டூ”  வசதியை போன்றைய) ஒரு வசதி வேண்டும்.

03. என் தாத்தா மீண்டு வர வேண்டும்.
நான் சிறிய வயதில் என் தாத்தா மடியில் உட்கார்ந்து கதை கேட்பது வழக்கம். நான் விரும்பிய அனைத்தையும் எனக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்தது மட்டுமன்றி, எனக்கு வாழ்க்கை ஏட்டு படிப்பில் மட்டுமில்லை அனுபவ படிப்பிலும் நிறைய படிக்க வேண்டும் என்றுணர்த்திய என் தாத்தா உயிருடன் மீண்டு வர வேண்டும்.

04. ஹெட் போனில் பாட்டு கேட்டபடி இரவில் நீண்ட தூரம் நடக்க வேண்டும்.
ஹெட் போனில் மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டே நீண்ட தூரம் நடக்க பிடிக்கும். எனது ஊரில் இருந்த போது நான் இவ்வாறு செய்திருக்கிறேன். இப்போ முடியவில்லை. மீண்டும் அந்த வாழ்க்கை வேண்டும்.

05. என் நண்பர்களது ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும்.
என்னை சூழ உள்ள நண்பர்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற கேட்பேன்.  இது கொஞ்சம் பேராசைதான் ஆனாலும் எனது இனிமையான நண்பர்கள் வாழ்க்கையில் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள என்னால் உதவ முடிந்தால், சந்தோஷமே!

06. ஒரே ஒரு சகோதரி கேட்பேன்.
ஏறத்தாழ என்னோடு படித்த தோழர்கள் அனைவருக்கும் சகோதரிகள் உண்டு. எனக்கு அப்படி ஒரு அக்கா அல்லது ஒரு தங்கை இல்லை என்ற குறை சிறு வயதில் ரொம்பவே இருந்தது. அப்படி இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம். அப்படி ஒரு சகோதரி கேட்பேன்.

07. பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் கிட்டார் இசை கேட்ப வேண்டும்.
எனது பாடசாலை காலத்தில் ஒரு சீனியர் எங்களது விடுதியில் இரவில் மொட்டை மாடியில் கிட்டார் இசைத்து ”இளைய நிலா பொழிகிறது” பாடலை பாட அன்று முதல் நான் கிட்டார் என்ற வாத்தியத்தின் அடிமையாகி விட்டேன். ஆனால் இன்று வரை அதை கற்க வசதியேற்படவில்லை.  கிட்டார் கற்று இரவில் தனிமையில் இசைக்க தேவதையிடம் வரம் கேட்பேன்.

08. இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒருநாள் தலைவராக வேண்டும்.
நான் விரும்பும் இலங்கை கிரிக்கட் அணியை ஒரு நாள் வழி நடத்த வேண்டும். நான் செய்ய விரும்பிய மாற்றங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். சனத் ஜயசூரியவுடன் மறு புறத்தில் நான் துடுபெடுத்தாட வேண்டும்.

09. 500 ரூபாய் சம்பளத்திற்கு போராடும் தோட்ட தொழிலாளர்களது நாள் சம்பளம் 1500.00 ரூபாயாக உயர வேண்டும்.
மழை வெயில் என பாராது கடினமாக உழைத்தும் அதற்கு தகுந்த பலனை பெறாத இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக குறைந்தது 1500.00 ரூபாய் கிடைக்க வேண்டும் என கேட்பேன்

10.ஏ. ஆர் ரகுமானை ஒரு முறையாவது நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாட வேண்டும். 
கடைசியாக என் விருப்ப இசையமைப்பாளரான ஏ. ஆர் ரகுமானை சந்தித்து, ஒரு மணி நேரம் அவர் என்னுடன் மட்டும் பேசி கொண்டிருக்க வேண்டும் என கேட்பேன். மற்றும் அவரை ”வெள்ளை பூக்கள்” பாடலை பாட சொல்லி கேட்க வேண்டும்.  

இந்த வரங்கள் எல்லாமே ஆசைகள் மட்டுமே.... நிலாமதி அக்கா கேட்டுக் கொண்டபடி 10 வரங்களை கேட்டு விட்டேன் பார்ப்போம் தேவதை வரம் கொடுக்கிறதா என்று



கதை சொல்லும் படங்கள்

இன்று ஒரு சீரியஸ் பதிவு போடதான் இருந்தேன், ஆனாலும் நேரமின்மை காரணத்தால் படப்பதிவு ஒன்று போடுகிறேன். 

ஆயிரம் கதைகளில் சொல்லுவதை சில நேரங்களில் ஒரு படத்தினால் சொல்லலாம் என்பார்கள். அது உண்மை தான் இந்த படங்கள் சொல்லும் கதைகள் ஏராளம்


01. கண்ணுக்குள் நீரை வைத்து கொண்டு முடி வெட்டுபர் மேல் உள்ள கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் மனதுக்குள் கோபத்தை காட்டும் சிறுமி (நானும் சிறுவனாக இருக்கையில் இப்படிதான், முடி வெட்டுனர் மேல் உள்ள கோபத்தை வீட்டுக்கு வந்தவுடன் தாத்தா மீது காட்டிடுவேன்)


02. இசை கேட்க வயதில்லை என கூறும் சிறுவன்



03. ஊசிக்கு பயந்து கத்தும் சிறுவன் ஒருவனை பார்த்து கேலி செய்யும் மற்றைய சிறுவர்கள், இரண்டாவதாக இருப்பனுக்கு மாத்திரம் அடுத்தது நான் தானே என்ற அச்சம் முகத்தில் தெரிகிறது.


04.கையுறைகளை கைக்கு போட்டு போட்டு போரடித்து விட்டதால் காலுக்கு போட்டு பார்க்க முயற்சிக்கும் சிறுமி.


05. எவ்வளவு காலம் தான் பெரியவர்கள் சிறுவர்களை பயமுறுத்துவர் என பெரியவர்களை பயமுறுத்த முயற்சிக்கும் குழந்தை.



06. பெரிய பெரிய விஞ்ஞானிகள், தத்துவஞானிகள், அரசியலடவாதிகள் எல்லாம் வீதியில் உட்கார்ந்து தான் படித்தார்கள் என அம்மா சொல்லுவாள். அதனால் நானும் வீதயில் உட்கார்ந்து பத்திரிகை படிக்கிறேன்.



07.தோழனுடன் உறங்கும் குழந்தை



08.ரொம்ப குளிரா இருக்கு, நானும் தண்ணீரோடு சேர்ந்து கொஞ்சம் சூடாகிக்கிறேன்.



09. குழந்தை ஹாயாக சாய்ந்திருப்பது நாய்க்கு பிடிக்கலையோ?

10. இந்த கண்ணை கொண்டு தான் நான் உலகை பார்க்கிறேன் என கூறும் குழந்தை..



 இந்த படங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய நண்பிக்கு நன்றிகள். இந்த படங்களை பார்த்து கொஞ்ச நேரமாவது உங்கள் கவலைகளை மறந்து சிரித்தால் போதுமானது. சிரிப்பு என்பது நமக்கு இலவசமாக கிடைக்கும் ஒன்று மட்டுமல்ல நாம் மற்றவர்களுக்கும் இவலசமாக வழங்கும் பரிசுகளில் ஒன்றாகும்