இலங்கை பாகிஸ்தான் தொடர் - ஒரு சிறு அலசல்



இலங்கை பாகிஸ்தான் தொடர் முடிய இன்னும் ஒரே ஒரு டுவென்டி டுவென்டி போட்டி மாத்திரமே உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பற்றி ஒரு சிறு அலசல்தான் இந்த பதிவு.




இத்தொடரில் மிக சிறந்த கண்டுபிடிப்பு
இலங்கை அணி
01. அஞ்சலோ மத்தியுஸ்
ஆரம்பத்தில் மஹரூப்பை வெட்டி மத்தியுஸ’க்கு இடம் வழங்கியது எங்களுக்கு பிடிக்காத விடயமாக இருந்தாலும், தனது விளையாட்டு திறமையினால் அவரது தெரிவு சரி என நிரூபித்து விட்டார், இப்போதைய இலங்கை அணியில் எனக்கு பிடித்த இளம் வீரர் இவர்தான். பந்துவீச்சா? துடுப்பாட்டமா? பந்து தடுப்பா? எல்லா விதத்திலும் சும்மா புகுந்து விளையாடுகிறார். இலங்கை அணியின் எதிர்கால தலைவர் ஆக கூடியவர்.

02. ரங்கன ஹேரத்
ஏற்கனவே விளையாடி இருந்தாலும், முரளி இல்லாமல் வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தனித்து இலங்கைக்கு டெஸ்ட் வெற்றியை கொண்டு வந்து தர இயலும் என நிரூபித்து காட்டியவர், முதல் போட்டிக்கு முதல் நாள் தான் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார். வந்தார் வென்றார் என இவரை கூறலாம்.

03. திலின துஷார மிரண்டோ மற்றும் நுவன் குலசேகர
முரளி இல்லாத குறையை எப்படி ஹேரத் நிரப்பினாரோ. அதே போல் சமிந்த வாசின் இடத்தை இவர்கள் நிரப்பினார்கள். எதிர்கால இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பெரும் சேவையை இவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்

இத்தொடரில் மிக சிறந்த கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் அணி

01. மொஹம்மட் ஹமீர்
இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடிய, விளையாட முயன்ற ஒரே வீரராக இவரைத்தான் நான் நினைக்கிறேன். 17 வயது நிரம்பிய இந்த இளம் வீரர் சகல இலங்கை துடுப்பாட்ட வீரர்களையும் தனது பந்து வீச்சில் திணறடித்தார் என கூறலாம். சிறப்பாக கையாண்டால் வசீம் அக்ரம் போல இவரை உருவாக்கலாம். ஆனால் இவர் விளையாடுவது பாகிஸ்தான் அணியில்... நீண்ட காலம் இவரை அணியில் வைத்திருந்தாலே ஆச்சிரியம் தான், ஏனென்றால் அணித்தெரிவில் அரசியல் விளையாடும் நாடு பாகிஸ்தான்...

ரொம்பவே ஏமாற்றியவர்கள்
இலங்கை
01. அஜன்த மென்டிஸ்
ஏற்கனவே முரளியோடு விளையாடும் போது விக்கட்டுகளை அள்ளி குவித்தவர், எனவே முரளி இல்லாத போது சும்மா கலக்குவார் என எதிர்பார்த்த போது ஹேரத் அணிக்கு கை கொடுக்க இவர் கைவிரித்து விட்டார்.

02. திலான் சமரவீர
ஏற்கனவே முடிந்த பாகிஸ்தான் சுற்று பயணத்தில் இரட்டைசதங்கள் அடித்து தூள் கிளப்பினார். இங்கும் அந்த மாதிரி ஏதாவது செய்வார் என பார்த்திருந்தோம். கடைசி டெஸ்ட் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

03. சமிந்த வாஸ்
மிகச்சிறந்த வீரர் கடைசி போட்டியில் விளையாடும் போது மிகவும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தால், காலை வாரிவிட்டார். இவரை அணிக்கு சேர்க்காதது நியாயமாகவே படுகிறது.


ரொம்பவே ஏமாற்றியவர்கள்
பாகிஸ்தான் அணி

எல்லாரும் யுனிஸ் கானை ஏமாற்ற யுனிஸ் கான் எல்லாரையும் ஏமாற்றி விட்டார். தனியாக குறிப்பிட்டு இவர்தான் ஏமாற்றினார் என கூறமுடியாது. ஏனென்றால் எல்லாரும் சொதப்பலாகவே விளையாடினார்கள், முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொஹம்மட் யுசூப் மற்றும் ஊமர் குல்..

பொதுவாக பாகிஸ்தான் அணி இந்த தொடர் முழுவதும் பின்னடைவவை சந்தித்தற்கு காரணிகளாக நான் காண்பவை

01. அணித்தெரிவு
விக்கட் எடுக்ககூடிய பந்து வீச்சாளரான கனோரியாவுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்காமை.

02. போராட்ட குணம் இல்லாத தலைவர்
சிறிதும் போராட்ட குணமற்ற தலைவராக இருக்கும் யுனிஸ்கான் எந்த நேரமும் சிரித்து கொண்டிருப்பது எரிச்சலாக இருக்கிறது. ஏதோ வடிவேலு நகைச்சுவை போல இருக்கிறது.

03. பொறுப்பற்ற ஆட்டம்
நன்றாக விளையாடி கொண்டிருந்த யுனிஸ்கான் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ஆட்டமிழந்து, அதை தொடர்ந்து சகல விக்கட்டுகளும் விழுந்து போட்டியை தோற்றமை நினைவிருக்கலாம். இதேபோல் தான் முதலாம் போட்டியில் சல்மான் பட் தனது விக்கட்டை இழந்து போட்டியையும் இழந்தனர்.

இலங்கை அணியின் புதிய தலைவர் வெற்றிகளோடு தனது கணக்கை தொடங்கியுள்ளார். அவரது வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.


1 Response
  1. Admin Says:

    நல்லதொரு இடுகை...

    தொடருங்கள் வாழ்த்துக்கள்...