கற்றதும் பெற்றதும் - நான் வியந்த சுஜாதா

தமிழில் பலரை நான் வாசித்திருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்தாளரளவுக்கு யாரையும் ரசித்திருக்கவில்லை, காரணம் அந்த எழுத்துகள் என்னை என்னுள் ஏற்படுத்திய இரசாயண மாற்றங்கள். அந்த அற்புத எழுத்தாளர் எழுதிய கதைகளை வாசித்த என்னுள் இன்னும் கணேஷ், வசந்த், ஜீனோ, மெக்சிகோ சலவைக்காரி என்னும் கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கு இவ்வாறுதான் என நினைக்கிறேன். நம்மை விட்டு சுஜாதா பிரிந்து சனிக்கிழமையுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன

இவர் கதை, நாடகம், திரைப்படம், கட்டுரை என பல விடயங்களை தொட்டு சென்றிருந்தாலும், அதில் எதிலுமே குறைவைக்காமல் வாசகனை திருப்திபடுத்தியிருக்கிறார். தமிழில் விஞ்ஞான உலகை புனைத்து கதை எழுதும் திறமை இவர் அளவுக்கு யாரிடமும் இருக்கவில்லை என்றே கூறலாம். 

80களின் பிற்பகுதியில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் “எதிர் காலத்தில் கையில் தூக்கி கொண்டு செல்ல கூடிய தொலைபேசி கண்டுபிடிக்கப்படும், அது  கண்டுபிடிக்கப்பட்ட பின் மனிதனின் ப்ரைவசி இல்லாமல் போய்விடும்” என கூறியிருந்தார். இவ்வாறு எதிர் காலத்தில் விஞ்ஞானவுலகில் நடக்க கூடிய விடயங்களை எதிர்வுகூறுவதில் இவருக்கு நிகர் இவரே.

இவரது கதைகளை வாசித்த பலருக்கு மெக்சிகன் சலவைக்காரி ஜோக் என்பது பிரபலமாகவிருக்கும், ஆனாலும் இதுவரை யாருக்குமே இந்த ஜோக் என்னவென்று தெரியாது, கணேஷ் வசந்த் என்னும் பாத்திரங்களை தனது கதைகளில் பயன்படுத்தி அவர்களை பிரபல்யமாக்கிய இவரது கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. சங்கர், மணிரத்தினம் எனும் பிரபல இயக்குனர்களின் வலது கரமாக இருந்த சுஜாதாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய அடியாக அமைந்தது என்றால் மிகையில்லை. தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய சினிமாவாக அமையவிருக்கும் எந்திரன் படம் சுஜாதாவின் கதை என்று கூறப்படுகிறது, அப்படி அமைந்தால் மகிழ்ச்சியே.. 

ஆனாலும் தமிழ் சினிமா சுஜாதா என்னும் மாபெரும் எழுத்தாளனுக்கு செய்யக் கூடிய உதவி என்னவென்றால் அவரது கதைகளை படமாக்குகிறேன் என ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை வெளியிட்டு அந்த எழுத்துகளை கொலை செய்யாமலிருப்பதேயாகும். தயவு செய்து அந்த எழுத்துக்களை எழுத்துக்களாகவே வாழ விடுங்கள், படமாக்குகிறேன் என சுஜாதாவின் எழுத்துகளை அசிங்கப்படுத்தாதீர்கள். அவரது கதைகளை படமாக்கியதில் விக்ரம் எனக்கு பிடித்த படம், ஆனந்த தாண்டவம் திரைப்படம் பிடிக்காமல் போனதற்கு பிரிவோம் சந்திப்போம் நாவல் ஏற்படு்த்திய அனுபவத்தை திரைப்படம் தராமல் போனதாயிருக்கலாம்.

சுஜாதா என்னும் ரங்கராஜன் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரை தொகுப்புக்கள் வாசிக்க வாசிக்க இனிமையானவை, இளமையானவை, குறும்பானவை. கற்றதும் பெற்றதும் தொடர் நின்ற பின்னர் ஆனந்த விகடனை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் இன்றும் நேரம் கிடைதால் பழைய ஆனந்த விகடன் சஞ்சிகை எடுத்து கற்றதும் பெற்றதும் வாசிப்பேன், எத்தனை முறை வாசித்தாலும் புதிய அனுபவத்தை தரக்கூடிய வல்லமையை அக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.

இவரும் பிரபல இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் சுஜாதாவாகும்.

சுஜாதா இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருந்தால் இன்னும் பல விடயங்களை எழுதியிருப்பார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.. 

சுஜாதா என்னும் எழுத்தாளரின் எழுத்துக்களில் நான் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம்...



12 Responses
  1. Subankan Says:

    நீங்கள் குறிப்பிடுவது போல நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன சொல்ல?


  2. ஜனநாயகக் கடமைகளை முடித்துவிட்டேன்...
    உண்மையைச் சொன்னால் வாசிப்புக்கும் எழுத்துக்கும் நிறையத் தூரம்....

    அதனால் பீற்றர் விடாமல் கழன்று கொள்கிறேன்... :)


  3. Bavan Says:

    ///பிரபல இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் சுஜாதாவாகும்///

    ஓ... அப்படியா? எனக்கு உங்கள் மூலம் தான் அறிந்தேன்..;P

    //நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்//

    அதே அதே. ஆனால் இப்போதுதான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் சுஜாதாவுடன் ஆரம்பித்ததால் தொடர்ந்து படிக்கிறேன் என்று நினைக்கிறேன்..;)

    சுஜாதா பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா...;)


  4. சுஜாதாவை வாசித்தவர்கள் , அந்த வாசிப்பை நிறுத்த முடியாது .. அப்படி வாசித்து வந்தவர்களால் எழுதாமல் இருக்கவும் முடியாது ..
    உங்களை மாதிரியே நானும் ஒரு ஏக்க பதிப்பு இட்டுள்ளேன் ... வாசகனையும் எழுத வைப்பவர்.


  5. யோகா பார்த்தீர்களோ தெரியாது நானும் வாத்தியாரைப் பற்றி பதிவிட்டிருந்தேன்.

    //80களின் பிற்பகுதியில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் “எதிர் காலத்தில் கையில் தூக்கி கொண்டு செல்ல கூடிய தொலைபேசி கண்டுபிடிக்கப்படும், அது கண்டுபிடிக்கப்பட்ட பின் மனிதனின் ப்ரைவசி இல்லாமல் போய்விடும்” என கூறியிருந்தார். இவ்வாறு எதிர் காலத்தில் விஞ்ஞானவுலகில் நடக்க கூடிய விடயங்களை எதிர்வுகூறுவதில் இவருக்கு நிகர் இவரே.//

    அட இது மட்டுமா சொர்க்கத் தீவு என நினைக்கிறேன் அதில் ஹீரோ போன் செய்தவுடன் அழைப்பு கிடைக்கும் வரை இசை கேட்பதை எழுதியிருப்பார். அதுதான் இப்ப இருக்கே

    //மெக்சிகன் சலவைக்காரி ஜோக் என்பது பிரபலமாகவிருக்கும், ஆனாலும் இதுவரை யாருக்குமே இந்த ஜோக் என்னவென்று தெரியாது//

    இப்ப சில இணையத்தளங்களில் அப்பெயரில் ஒரு ஜோக் உலவுகிறது. கொஞ்சம் வல்கரானதுதான் வாத்தியார் அத்தியா சொன்னார் எனத் தெரியாது

    //ஆனந்த தாண்டவம் திரைப்படம் பிடிக்காமல் போனதற்கு பிரிவோம் சந்திப்போம் நாவல் ஏற்படு்த்திய அனுபவத்தை திரைப்படம் தராமல் போனதாயிருக்கலாம்.//

    பிரிவோம் சந்திப்போம் அப்படியே ஆனந்த தாண்டவாமாகி இருந்தது. சுஜாதாவின் கதையை சிதைக்காமல் அப்படியே எடுக்கிறேன் என்ற அதீத ஆர்வக்க் கோளாறோ தெரியவில்லை. சினிமாவுக்கான திரைகதையாக்கற் உத்தி சரியாய் அமைய வில்லை.மாற்றங்கள் என்ன அந்த அப்பா சித்தி மேட்டர் மட்டும்தானே அப்புறம் திரையில் மதுமிதாவை பார்க்க முடியவில்லை
    விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்தீர்களா கொஞ்சமாய் மதுமிதா கண்ணுக்குள் வந்தார்.

    யோகா பின்னூட்டம் பெருசா இருந்தா மன்னிச்சிருங்க எப்பையாவது நமக்கு interest உள்ள விடயத்தைப் பற்றிய பதிவில்தான் இப்படி பின்னூட்டமெல்லாம் போட முடியும்.


  6. archchana Says:

    எனக்கும் சுஜாதாவின் எழுத்துக்கள் பிடிக்கும்.ஒன்று இரண்டு தவிர எல்லாமே படித்திருக்கிறேன்.
    ஜீனோ வாசித்துவிட்டு உடன் எங்கள் நாய்க்கு பெயர் மாற்றம் செய்துவிட்டது நினைவிற்கு வருகிறது.
    அறிவியலில் மட்டுமில்லை ஈழத்தமிழர் நிலை பற்றியும் சுஜாதா எதிர்வுகூறியது 100 % சரியானதே.


    //நீங்கள் குறிப்பிடுவது போல நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன சொல்ல?//

    இதற்கு மட்டுமில்லை. எல்லாவற்றிலும் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்


  7. Unknown Says:

    சுஜாதா ஒரு கடல்


    கற்றதும் பெற்றதும் நாம் சுஜாதாவிடமிருந்து அதிகம்


    அது சரிங்க
    அந்த மெச்சிக்கோ சலவைக்காரி ஜோக்
    கழுதை மேட்டர் தானே .


  8. சுஜாதாவுக்காக மட்டுமே ஆனந்த தாண்டவம் படத்துக்கு முதல் நாளே சென்றிருந்தேன், படம் முடிந்து வரும்போது தோன்றியது, "நல்லவேளை தலைவர் இந்தப் படத்தப் பார்க்கவில்லை"


  9. நானும் கங்கோன் வகையை சார்ந்தவன் எப்பவாவது இருந்திட்டு கண்ணில் படுபவற்றை வாசிப்பதுண்டு.. அண்மையில் தான் புத்தகக் கண்காட்சியொன்றில் சுஜாதாவின் மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பாக அறிந்து கொண்டேன்.....


  10. KANA VARO Says:

    சுஜாதாவினுடைய கதைகள் வாசித்திருக்கின்றேன். பெரிதாக அல்ல.. எனவே அவர் பற்றி சொல்ல முடியாது. சாண்டில்யன், கல்கி போன்றோரின் சரித்திர தொடர்களை வாசிப்பதிலேயே நாட்கள் போய் விட்டன.


  11. This comment has been removed by the author.

  12. DREAMER Says:

    வருங்காலத்தில் பல தலைமுறையினர் வியக்கப்போகும் அற்புதமான எழுத்தாளரைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி..!

    -
    DREAMER