கற்றதும் பெற்றதும் - நான் வியந்த சுஜாதா
தமிழில் பலரை நான் வாசித்திருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்தாளரளவுக்கு யாரையும் ரசித்திருக்கவில்லை, காரணம் அந்த எழுத்துகள் என்னை என்னுள் ஏற்படுத்திய இரசாயண மாற்றங்கள். அந்த அற்புத எழுத்தாளர் எழுதிய கதைகளை வாசித்த என்னுள் இன்னும் கணேஷ், வசந்த், ஜீனோ, மெக்சிகோ சலவைக்காரி என்னும் கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கு இவ்வாறுதான் என நினைக்கிறேன். நம்மை விட்டு சுஜாதா பிரிந்து சனிக்கிழமையுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன
இவர் கதை, நாடகம், திரைப்படம், கட்டுரை என பல விடயங்களை தொட்டு சென்றிருந்தாலும், அதில் எதிலுமே குறைவைக்காமல் வாசகனை திருப்திபடுத்தியிருக்கிறார். தமிழில் விஞ்ஞான உலகை புனைத்து கதை எழுதும் திறமை இவர் அளவுக்கு யாரிடமும் இருக்கவில்லை என்றே கூறலாம்.
80களின் பிற்பகுதியில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் “எதிர் காலத்தில் கையில் தூக்கி கொண்டு செல்ல கூடிய தொலைபேசி கண்டுபிடிக்கப்படும், அது கண்டுபிடிக்கப்பட்ட பின் மனிதனின் ப்ரைவசி இல்லாமல் போய்விடும்” என கூறியிருந்தார். இவ்வாறு எதிர் காலத்தில் விஞ்ஞானவுலகில் நடக்க கூடிய விடயங்களை எதிர்வுகூறுவதில் இவருக்கு நிகர் இவரே.
இவரது கதைகளை வாசித்த பலருக்கு மெக்சிகன் சலவைக்காரி ஜோக் என்பது பிரபலமாகவிருக்கும், ஆனாலும் இதுவரை யாருக்குமே இந்த ஜோக் என்னவென்று தெரியாது, கணேஷ் வசந்த் என்னும் பாத்திரங்களை தனது கதைகளில் பயன்படுத்தி அவர்களை பிரபல்யமாக்கிய இவரது கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. சங்கர், மணிரத்தினம் எனும் பிரபல இயக்குனர்களின் வலது கரமாக இருந்த சுஜாதாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய அடியாக அமைந்தது என்றால் மிகையில்லை. தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய சினிமாவாக அமையவிருக்கும் எந்திரன் படம் சுஜாதாவின் கதை என்று கூறப்படுகிறது, அப்படி அமைந்தால் மகிழ்ச்சியே..
ஆனாலும் தமிழ் சினிமா சுஜாதா என்னும் மாபெரும் எழுத்தாளனுக்கு செய்யக் கூடிய உதவி என்னவென்றால் அவரது கதைகளை படமாக்குகிறேன் என ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை வெளியிட்டு அந்த எழுத்துகளை கொலை செய்யாமலிருப்பதேயாகும். தயவு செய்து அந்த எழுத்துக்களை எழுத்துக்களாகவே வாழ விடுங்கள், படமாக்குகிறேன் என சுஜாதாவின் எழுத்துகளை அசிங்கப்படுத்தாதீர்கள். அவரது கதைகளை படமாக்கியதில் விக்ரம் எனக்கு பிடித்த படம், ஆனந்த தாண்டவம் திரைப்படம் பிடிக்காமல் போனதற்கு பிரிவோம் சந்திப்போம் நாவல் ஏற்படு்த்திய அனுபவத்தை திரைப்படம் தராமல் போனதாயிருக்கலாம்.
சுஜாதா என்னும் ரங்கராஜன் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரை தொகுப்புக்கள் வாசிக்க வாசிக்க இனிமையானவை, இளமையானவை, குறும்பானவை. கற்றதும் பெற்றதும் தொடர் நின்ற பின்னர் ஆனந்த விகடனை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் இன்றும் நேரம் கிடைதால் பழைய ஆனந்த விகடன் சஞ்சிகை எடுத்து கற்றதும் பெற்றதும் வாசிப்பேன், எத்தனை முறை வாசித்தாலும் புதிய அனுபவத்தை தரக்கூடிய வல்லமையை அக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.
இவரும் பிரபல இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் சுஜாதாவாகும்.
சுஜாதா இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருந்தால் இன்னும் பல விடயங்களை எழுதியிருப்பார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..
சுஜாதா என்னும் எழுத்தாளரின் எழுத்துக்களில் நான் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம்...