கிரிக்கட்டோ கிரிக்கட்..... (தொடர் பதிவு)

எரிந்தும் எரியாமலும் எழுதும் பதிவெழுதும் பவனின் பதிவில் என்னையும்  இப்படி பதிவெழுத யாராவது அழையுங்கள் என பின்னூட்டினேன், மாலையில் வந்து பார்த்தால் நமக்கொரு அடிமை சிக்கிட்டான்என ஐந்தறை (மணிக்கே) பெட்டியில் பதிவழுதும் சுபாங்கனும்,  இட்டிலி போய் அல்லது கன் கொன் என பதிவெழுதும் கோபியும் என்னை இத்தொடர்பதிவை தொடர அழைத்திருக்கிறார்கள். கிரிக்கட் எப்போதுமே எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் விருப்பத்துடன் இத்தொடர் பதிவை எழுதுகிறேன்.


இத்தொடர் பதிவின் விதிகள்
§  உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

§  தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

§  குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.


1.பிடித்த கிறிக்கற் வீரர்? அரவிந்த டீ சில்வா
   இவருக்கு மற்றைய முன்னணி வீரர்களை போல் போட்டிகள் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் இன்றைக்கு பேட்டிங் சாதனைகள் அனைத்தும் இவர் வசமாகியிருக்கும். நான் கண்ட மிக சிறந்த மெட்ச் வின்னர், இதற்கு சிறந்த உதாரணம் 1996 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் 3 விக்கட்டுகள், 2 கேட்சுகள்அவுட் ஆக எந்த சந்தர்ப்பத்தையும் எதிரணிக்கு வழங்காமல் பெற்ற சதம் என்பவற்றின் மூலம் இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்ததை கூறலாம்.

2.பிடிக்காத கிறிக்கற் வீரர்? ஹர்பஜன் சிங்
  எனது பதிவுகளை வாசித்தவர்களுக்கு, ஹர்பஜன் சிங்கை நான் எந்த அளவுக்கு வெறுக்கிறேன் என தெரியும்.

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்? வெள்ளை மின்னல் அலன் டொனால்ட், ஆகிப் ஜாவேட் மற்றும் இயன் பிஷப்.
சிறுவயதில் கிரிக்கட் விளையாடையில் இவர்களது பாணியில் பந்து வீச எவ்வளேவோ முயன்றிருக்கிறேன்.  ஆகிப் ஜாவேட் மாதிரி ஹெயார் ஸ்டைல் எல்லாம் செய்து பந்த வீசியிருக்கிறேன்.

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்? ஆஷிஸ் நேரா, ஸ்ரீ சாந்த்
மைதானத்தில் மற்றைய வீரர்களுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவதில் இவர்களை அடித்து கொள்ள ஆளேயில்லை, அவ்வளவுக்கு கனவான் வீரர்கள்..

5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்? முரளி மற்றும் வோர்ன்
கலக்கல் மன்னர்கள், என்ன செய்தாவது விக்கட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். பெயிலியர் ஆன சந்தர்ப்பங்கள் மிக குறைவு.

6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்? பிடிக்காத வீரரும் ஒரு சுழல் பந்து வீச்சாளர்தான்அவரில்லாமல் பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்ஸ்.
காலுக்கு பின்னால் பந்து வீசி பொறுமையை சோதிப்பதில் மன்னன்.

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அரவிந்த டீ சில்வா மற்றும் ரிக்கி பொண்டிங்.
எல்லா விதமான ஷொட்களையும் மிக அழகாக அடிக்க கூடியவர்கள், அதிலும் முக்கியமாக எனது விருப்ப ஷொட்களான புல் மற்றும் ஹுக் ஷொட் அடிப்பதில் விண்ணர்கள் (வின்னர்களும் தான்)

8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அப்துல் ரசாக்
அவர் துடுப்பெடுத்தாடும் பாணி அசிங்கமாக இருப்பதால், முரளியை விட அசிங்கம் என கூறவில்லை, ஆனால் முரளியை துடுப்பாட்ட வீரராக யாரும் நினைப்பதில்லை என்பதால் எனது தெரிவு ரசாக்.

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்சனத் ஜயசூரிய மற்றும் பிரையன் லாரா
இவங்க அடிக்க தொடங்கினால் சும்மா அதிரும். நீண்ட காலமாக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள், மிக சிறந்த மெட்ச் வின்னர்கள்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்? கௌதம் காம்பீர்
இவர் எல்லா பந்துக்கும் நடந்து வந்து அடிக்கும் டெக்னிக் எனக்கு பிடிக்காமையினாலாகும்.

11.பிடித்த களத்தடுப்பாளர்? ஜொன்டி ரோட்ஸ் மற்றும் ரிக்கி பொண்டிங்
மின்னல் வேகத்தில் களத்தடுப்பில் ஈடுபடுவதால் இவர்களை பிடிக்கும், இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாமவையும் ரொம்ப பிடிக்கும்.

12.பிடிக்காத களத்தடுப்பாளர்? நுவன் சொய்சா மற்றும் அவிஸ்க குணவர்தன
பீல்டிங்கா? அது ஒரு தின்பண்டமா என கேட்பவர்கள்

13. பிடித்த ALL-ROUNDER? குளுஸ்னர், பிளின்டொப் மற்றும் அன்ஜலோ மெத்தியுஸ்
கஷ்டமான நேரங்களில் அணிக்கு கை கொடுப்பவர்கள்

14.பிடித்த நடுவர்சைமன் டௌபல், டிக்கி பேர்ட் மற்றும் பில்லி பாடன்
வீரர்களோடு மிகவம் சுமுகமாக நடப்பவர்கள் மற்றும் இரண்டாமவர் மைதானத்தில் உள்ள ரசிகாகளை கவருவதில் மன்னர்.

15.பிடிக்காத நடுவர்? டெரல் ஹெயார் 
காரணம் துவேஷத்தை கிரிக்கட்டில் காட்டியமையினால்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்ரிச்சி பேனோ, பில் லாரி, டேனி மொரிசன் மற்றும் இயன் செப்பல்
எந்த அணிக்கும் சார்பாக இல்லாமல் வர்ணனை செய்வதால் இவர்களை பிடிக்கும்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்ரவி சாஸ்திரி மற்றும் ரஞ்சித் பொணான்டோ
தங்கள் நாட்டு வீரர்களை மட்டும் உயர்த்தி பேசுவதில் மன்னாகள்

18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்

18.பிடிக்காத அணி? இந்தியா
சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி? இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளையும் விரும்பி பார்ப்பேன்

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி? பிடிக்காத போட்டி என எதுவுமேயில்லை எல்லா கிரிக்கட் போட்டிகளையும் ரசிப்பேன்.

22.பிடித்த அணித்தலைவர்மார்க் டெயிலர் மற்றும் ஷேன் வோன்
இப்போதைய அவுஸ்திரேலிய அணியை பலமான அணியாக மாற்றியதில் மார்க் டெயிலருக்கு முக்கிய பங்குண்டு. ஷேன் வோன் மிக சில போட்டிகளுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்கு தலைமைதாங்கினார், மிக சிறந்த தலைவராக வேண்டியிருந்தவர் ஆனால் அவரது நடத்தை காரணமாக நிரந்தர தலைமைப்பதவி கிடைக்கவில்லை, அவுஸ்திரேலியா இழந்த மிக சிற தலைவர் ஷேன் வோன் ஆகும்.

23.பிடிக்காத அணித்தலைவர்? மொஹம்மட் அசாருதீன் 
காசுக்காக தாய் நாட்டை காட்டி கொடுத்தவர், ஹன்சி குரோன்யே என்ற மிக சிறந்த வீரரை சூதாட்டத்திற்கு தூண்டியதும் இவர் செய்த மிகப் பெரிய பிழை.

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)
TEST -ரசித்து சுவைக்க
ODI - அளவுச் சாப்பாடு
T20 - அவசர ருசிக்கு
மூன்றுமே பசியாற்றினால் போதும்.

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? சனத் ஜயசூரிய, ரொஷான் மகானாம
வேகம், விவேகம், அதிரடி, நிதானம் கலந்த ஜோடி... 

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என யாருமில்லை.

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்? முரளிதரன், லாரா, சச்சின்
நீண்ட காலத்திற்கு இவர்களது சாதனைகள் இவர்களை பற்றி பேசும்.

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)? முரளிதரன்
எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் சாதித்து காட்டிய வீரர்

29. சிறந்த கனவான் வீரர் ? லாரா மற்றும் கோட்னி வோல்ஷ்
மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்

30. நான் பார்த்து வியந்த வீரர்கள்? சனத் ஜயசூரிய, ஷேவாக் மற்றும் அப்ரிடி
இவங்க தொடங்க மாட்டாங்க தொடங்கிட்டா அப்புறம் நிறுத்த மாட்டாங்க..


இத்தொடரை தொடர 
நான் அழைப்பது: கிரிக்கட் பதிவுகளுக்கு பெயர் போன 2 பிரபல பதிவர்கள்
(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

இங்கு நான் எழுதியது முற்றிலும் எனது சொந்த கருத்தாகும் யாரையும் புண்படுத்த எழுதவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

  ரொம்ப நாளாக பதிவு எழுதும் பார்மை இழந்து இருந்த எனக்கு இத்தொடர்பதிவை எழுதியதன் பின்னர் இனி கொஞ்சம் எழுதலாம் என தோன்றியிருக்கிறது, எழுத தூண்டியமைக்கு சுபாங்கனுக்கும் கோபிக்கும் நன்றி.




நூடுல்ஸ்

ஏ. ஆர். ரகுமான் நேற்று 2 கிராமி விருதுகளை வாங்கிய செய்தி கேட்டு மகிழ்வடைந்தேன், மனுஷனுக்கு “ஸ்லம்டோக் மில்லியனர்” எத்தனை விருதுகளை வாங்கி கொடுத்து விட்டது? சென்ற வருடம் வாங்கி குவித்த விருதுகளுக்கு மேலதிகமாக இந்த வருடமும் கிராமி விருதுகளை வாங்குவதன் மூலம் இந்த வருடத்திற்கான விருது கணக்கையும் தொடக்கி வைத்து விட்டார், மேலும் இந்திய அரசு இந்த வருடம் பத்மபூஷண் விருது வழங்கி இவரையும், மேஸ்ட்ரோ இளையராஜாவையும் கௌரவித்துள்ளது.


எத்தனை எத்தனை விருதுகள் வந்தாலும் மனுஷன் என்ன ஒரு அடக்கமாக இருக்கிறார், இதற்குதான் “நிறைகுடம் என்றைக்கும் தளம்பாது” என முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களோ?


====================================================

“தமிழ் படம்” படம் பற்றிய விளம்பரங்கள், இணைய பதிவுகள் ரொம்ப நல்லாயிருக்கு படம் பார்க்க ஆசையை தூண்டியிருக்கிறது, ஆனாலும் படம் கிட்டிய எந்த தியேட்டர்களிலம் வெளியாகவில்லை. எத்தனையோ மொக்கை படங்களை முதல் நாளே வெளியிடும் தியேட்டர்கள் ஏனோ இந்த படத்தை வெளியிடவில்லை?


ஏற்கனவே இவ்வகையான ஆங்கில படங்களான ஸ்கேரி மூவியின் பல பாகங்கள், ஹொட் ஷொட் 1 மற்றும் 2 பார்த்து வயிறு குழுங்க சிரித்திருக்கிறேன், இன்றும் ஹொட்ஷொட் 2 அடிக்கடி நண்பர்களோடு பார்த்து ரசிப்போம்.


====================================================

கிரிக்கட்டில் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை மொங்கு மொங்கென்று மொங்கிவிட்டது, அதிலும் கடைசிப் போட்டியில் அப்ரிடி பந்தை கடித்து தன் மீதிருந்த நல்ல பெயரை கெடுத்து கொண்டார், சர்வதேச ரீதியில் நான் மதித்திருந்த முக்கிய இரண்டு வீரர்களான அப்ரிடி மற்றும் ஷேவாக் இருவரும் பல ரசிகர்கள் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை கெடுத்து கொண்டனர், இருவரும் நல்ல அதி திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் ஜென்டில்மேன் கிரிக்கட்டர்களா என கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.


====================================================

தமிழ் மொழியின் சக்தி என கூறிக் கொள்ளும் இலங்கையின் முன்னனி வானொலிகளில் ஒன்று இப்போது தமிழ் மொழியை டமில் மொழியாக உச்சரித்து அதன் ரசிகர்களை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் எழில் வேந்தன் அண்ணா, லோஷன், செந்தூரன், ராம்பிரஸன் போன்றவர்களது அழகு தமிழுக்காக அந்த வானொலியை 24 மணிநேரமும் கேட்டிருக்கிறேன்,ஆனால் இன்று இந்திய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைபோல் (இந்திய அறிவிப்பாளர்கள்தான் இங்கு வேலை செய்வதாக கேள்வி) டமில் பேசி எங்களை நேயர்களை கொல்கிறார்கள், முன்னர் அழகாக தமிழ் பேசிய ஒரு அறிவிப்பாளினியும் இப்போதெல்லாம் இந்திய தொலைக்காட்சி சாயிலில் வானொலியில் பேசுகிறார்,


சக்தியில் ஏனிந்த மாற்றம்? இலங்கையில் திறமை வாய்ந்த அறிவிப்பாளர்கள் இல்லையா?


====================================================

ரோட்டோரக்கடையில் வாங்கிய விண்டோஸ் எக்ஸ் பீயை பாவித்து வந்த நான் உபுண்டு லினக்சுக்கு மாறி பார்த்தேன், பிரமிக்கத்தக்க மாற்றம், விண்டோசை விட அதிக வேகம், இணைய வேகம் சிறப்பாக இருக்கிறது, சகலவிதமான ஹார்ட்வெயார்களுக்கும் ஆதரவு தருகிறது, உபுண்டு லினக்ஸ் இவ்வளவு சிறப்பாக இருக்குமென நினைத்து பார்க்கவேயில்லை. ஆரம்பத்தில் வீடியோ பார்க்க, எம்பீ3 கேட்க சிறிது சிரமப்பட்டேன், இப்போது அதுவும் சரியாகிவிட்டது.


எனக்கு இந்த இயங்கு தளத்தில் உள்ள ஒரே பிரச்சினை தமிழ் யுனிக் கோட் தட்டச்சு செய்வது தான், காரணம் நான் தமிழில் தட்டச்சுவது பாமினி எழுத்துருவிற்கு அமைவாக என்பதால் சிறிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.


அதற்கு தீர்வாக பதிவர் சயந்தன் பதிவர் மு.மயுரனை தொடர்பு கொள்ள சொன்னார், அவரும் பாமினி எழுத்துருவை கொண்டு தட்டச்ச சில வழிகளை சொல்லித்தந்தார், லினக்சில் நான் இன்னும் கத்துக்குட்டியாக இருப்பதால் அதை முழுமையாக நிறுவ இயலவில்லை, எனினும் லினக்ஸ் எனக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.