இலங்கை பதிவர்களை காணவில்லை

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதும் ஒரு சிலரை தவிர மற்றவர்களும் ஏதோ ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவையும் எழுதுகின்றனர். 

“என்ன கொடுமை சார்” சொல்வதை போல் யாரையும் எழுத நிர்பந்திக்க முடியாவிடினும் பதிவுலகத்தை விட்டு கொஞ்ச காலம் விலகியிருக்க எண்ணியிருந்தால், அந்த கொஞ்ச காலம் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து, பதிவெழுதும் எண்ணமே கைவிட்டு போய்விடலாம் என்ற அனுபவம் தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது. 

எல்லா பதிவர்களும் இப்படி யோசித்து ஒதுங்கியிருந்தால், பல பதிவர்களை நாம் இழக்கவேண்டியிருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்துள்ளது. சமீபத்தில் இலங்கை பதிவர்கள் நல்ல போர்மில் இருந்த கால கட்டமாக நான் நினைப்பது, பதிவர் சந்திப்புகளிற்கு முன்னரும், பின்னருமான கால கட்டங்களாகும். 

பதிவர்கள் சிலரோடு கதைத்த போது இன்னுமொரு சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்குமென அவர்களும் நினைக்கிறது புரிகிறது. ஆக மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு யாராவது ஏற்பாடு செய்தால், இழந்த போர்மை பலரும் பெறலாம் என நினைக்கிறேன், ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது?”. யாராவது ஒரு பதிவர் தொடங்கி வைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். யாராவது ஒரு பதிவர் முன்வரலாம். முன் வந்தால் ஏற்கனவே சந்திப்புகளை ஏற்பாடு செய்த குழு அவர்களுக்கு உதவுமென நினைக்கிறேன்.

முன்னைய இரண்டு சந்திப்புகளையும் தொடர்புபடுத்திய பதிவர் வந்தியத்தேவன் இப்போது இலங்கையில் இல்லாமையினால் அந்த தொடர்புபடுத்தும் பொறுப்பை சின்ன வந்தி விரும்பினால் செய்யலாம் என நினைக்கிறேன். கோபியை நான் ஏற்பாடு செய்ய சொல்லவில்லை, தொடர்புபடுத்த (Coordinator) விரும்பினால் நல்லாயிருக்குமென நினைக்கிறேன். நான் இணைந்து சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்பினாலும் நான் இருப்பது கண்டியில் என்பதாலும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலிருப்பதாலும் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.

இப்போதைக்கு சந்திப்பு நடாத்த இயலாவிட்டாலும், இரண்டாவது சந்திப்பில் கௌபோய் மது சொல்லியபடி “கூகுல் குழும அரட்டையில்”   ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். 

யாராவது ஏற்பாடு செய்யுங்களேன், சந்திப்போம்.

பி.கு. - இன்று பிறந்த நாளை கொண்டாடும் மூத்த பதிவர் கவிஞர் மேமன் கவி ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்



சுறாவும் பதிவலகும்

சுறா வி.ஐ.பி காட்சிக்கு ஒரு டிக்கட் கிடைத்துள்ளது, ஆனாலும் இதற்காக மட்டும் கொழும்பு சென்று பார்த்துவிட்டு வருவது இப்பிசியான காலகட்டத்தில் எனக்கு கடினம் என்பதால் செல்லவில்லை. 




ஆனாலும் எப்படியும் இந்த வாரமே படத்தை பார்த்துவிட வேண்டும் காரணம், வழமையாக விஜய் படம் வந்தால் பதிவுலகம் விஜய் பற்றிய பதிவுகளை போட்டு நிரப்பி படத்தை விமர்சிக்கிறேன் என முழு கதையையும் சொல்லிவிடுவார்கள். எங்களது வீட்டில் அம்மா மற்றும் சிறு வாண்டுகள் அனைவருக்கும் ரஜனி படத்திற்கு பிறகு விஜய் படம் பார்க்கதான் கொள்ளைப்பிரியம். அவர்களுடன் சென்று பார்க்க வேண்டும். எனக்கும் விஜய் படம் பெரிய ஏமாற்றத்தை தந்ததில்லை காரணம் விஜய் படத்திற்கு உலக தர படத்தை பார்க்கும் எதிர்பார்ப்போடு நான் செல்வதில்லை. கமல் படத்திற்கு செல்லும் போது நான் விஜயிடம் எதிர்பார்ப்பதை அங்கு தேடுவதில்லை.


ஆனாலும் 75 வீதமான பதிவுகள் நாளை முதல் விஜயை திட்டி வெளிவரும். பலவற்றில் விஜய் என்பவரை விமர்சிப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருக்கும். 


பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும், ஆதவனில் சூர்யாவின் சாகசங்களை ரசித்தவர்களும், அசலில் அஜித்தின் ஹீரொயிசத்தை ரசித்த பலரும் குருவியில் விஜய் சண்டை போடுவதை விமர்சித்திருப்பர், காரணம் விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக. காரணம் பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.

பி.கு.
பதிவுகளை வாசிக்கும் விஜய் ரசிகனான எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியவை, இவை யோசித்து பார்க்கும் போது உண்மையாகவே தெரிகிறது.

பி.பி.கு
நான் விஜய், அஜித், கமல், ரஜனி யாருடைய ரசிகனுமில்லை, எனக்கு எல்லாரது படமும் பிடிக்கும். நான் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கு மட்டும் தீவிர ரசிகன் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.




நூடுல்ஸ் (ஐயம் பெக்)

தேர்தல், பண்டிகை விடமுறை முடிந்து பழையபடி எல்லாரும் தமது வேலைகளுக்கு திரும்பி விட்டனர். புது அரசாங்கம், புது அமைச்சர்கள் என நாடு பழைய மாதிரியே பயணிக்கிறது. கொஞ்ச காலமாக எனது இணைய தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பதிவு எழுதாவிடினும் அநேகமாக எல்லாரது பதிவுகளையும் வாசித்து வந்தேன். சிலவற்றுக்கு பின்னூட்டமும் இட்டேன், இனி அடிக்கடி பதிவுகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு மாதிரி ஐ.பி.எல் காய்ச்சல் முடிந்து விட்டது, நான் அதிகமாக ஐ.பி.எல்லை பார்க்கவில்லை, காரணம் எனக்கு 20-20 கிரிக்கட் போட்டிகளை பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் கிடையாது, அதிலும் பணம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்கமாக கொண்ட இத்தொடர் பற்றிய நல் அபிப்பிராயம் சுத்தமாக கிடையாது எனலாம். நான் ஏற்கனவே ஐ.பி.எல் என்னும் கிரிக்கட் வியாபரம் பற்றி கூறியதை எதிர்த்தவர்கள் இப்போது லலித் மோடியை பதவியிலிந்து நீக்கிய விடயம் அறிந்ததும் வாயடைத்து போய் இருக்கின்றனர், ஆனாலும் இப்போது பலர் லலித் மோடியை விமர்சிப்பதற்கான முக்கிய காரணம் பொறாமை ஆகும். பல ஐ.பி.எல் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததாக வெளிவரும் செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அப்படி எந்த வீரராவது பணம் வாங்கி போட்டியை விட்டு கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர்கள் யாராக இருந்தாலும் வாழ்நாள் கிரிக்கட் விளையாட முடியாமல் தடை செய்யப்பட வேண்டும். ஐபிஎல் கிரிக்கட் விளையாட்டில் ”புக்கிகள்” போட்டி முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக வெளிவரும் தகவல்களை ஐசிசி விசாரித்து அவற்றுக்கு தடை கொண்டு வரவேண்டும்.


20-20 உலக கிண்ணம் தொடங்க இருக்கிறது, ஏதாவது அதிர்ஷம் உள்ள அணி கோப்பையை கைப்பற்றும். ஆனாலும் இலங்கை வென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் யார் கிண்ணத்த கைப்பற்றுவர் என????

-----------------------------------------------------------------------------------------------------------------------

”வந்தி”யில்லாத இலங்கை பதிவுலகும், ”லோஷனி”ல்லாத விடியலும் ரொம்பவே போரடிக்கின்றன. மாலை வேளைகளில் மழை வந்து வெளியே போக விடாமல் செய்வதால், இப்போதெல்லாம் நான் அதிகமாக பாட்டு கேட்பதிலேயே எனது பொழுதுதை களிக்கின்றேன். “விண்ணைத்தாண்டி வருவாயா” மற்றும் ”பையா” பாடல்கள் அதிகமாக கேட்ட பாடல்களாகும். ”ராவண்” (தமிழ்) பாடல்களை கேட்க ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். முதல் காரணம் பாடல்களுக்கு இசையமைப்பு நம்ம தல ரகுமான். இரண்டாவது காரணம் இயக்குனர் மணிரத்தினம். இவர் இசையமைப்பாளர்களிடம் எப்படி சிறந்த பாடல்களை வாங்குவது என்னும் கலையை நன்றாக கற்றவர். அன்றைய அஞ்சலி, நாயகன், மௌனராகமாகட்டும் இன்றைய ஆய்த எழுத்து, குருவாகட்டும் மணிரத்தினத்தின் பட பாடல்கள் என்றுமே சோடை போனதில்லை.

”அடடா மழைடா, அடை மழைடா” பாடல் ”என் காதல் சொல்ல நேரமில்லை” என நா. முத்துக்குமார் எம்மை கவி மழையில் நனைய வைத்து விட்டார். தாமரை, நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களை எப்போதும் ரசிக்கலாம். இன்றைய தலைமுறையின் மனம் கவர் பாடலாசிரியர்கள் இவர்களேயாகும். 
-----------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை. இப்போது வரோ, சதீஷ் , பவன் போன்ற சிலரே அடிக்கடி எழுதுகின்றன. தமிழக பதிவர்களும் சங்கம் அமைக்க போய் தமக்குள் தர்க்கம் ஏற்படுத்தியது கவலையான விடயம். காரணம் தமக்குள் பொறாமை இல்லாத ஒரே குழுவாக நான் பார்ப்பது பதிவர்களையாகும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பதிவர்கள் வேறுபடாமலிக்க வேண்டும். அதுதான் பதிவுலகிற்கு நல்லதாகும்
-----------------------------------------------------------------------------------------------------------------------

ம்ம்ம். அமீர்கான் மச்சமுள்ள மனுஷன்

அடிக்கடி எழுதலாம் என்னும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றன