Showing posts with label புதன் நூடுல்ஸ். Show all posts
Showing posts with label புதன் நூடுல்ஸ். Show all posts

நூடுல்ஸ் (04-11-2009)

இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு பண்ணிய சந்திப்பை என் போன்ற பலர் பதிவர் சந்திப்பென்று நினைத்து சென்று கொஞ்சம் ஏமாற்றமடைந்து திரும்பினோம். முதலாவது பதிவர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் மனதில் ஏற்பட்ட ஆனந்தமே இம்முறை எம்மை அந்நிகழ்வுக்கு எடுத்து சென்றது என்பது மறுக்கவியலாத உண்மை. 


இருக்கிறம் தனது இருப்பை வெளிகாட்ட ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்காக விடுமுறை தினத்திலே கிட்டத்தட்ட 400 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணிக்கு பயணிக்க தொடங்கிய நான் இரவு 10.45 மணியளவில் எனது அறையை வந்தடைந்தேன். சில ஏமாற்றங்களை தந்தாலும் முகம் தெரியா பதிவர்கள் பலரை நேரில் கண்டு பேச கிடைத்த வாய்ப்பு கிடைத்ததை மறுக்க இயலாது. முதலாவது பதிவர் சந்திப்பில் அறிமுகமான வந்தி, லோஷன், ஆதிரை போன்றோரையும். அந்நிகழ்வில் முகமறிந்த மன்னார் அமுதன், மருதமூரான், கௌபோய் மது, சுபானு போன்றோரை கண்டு கதைக்க கிடைத்தது. மேலும் கீர்த்தி, நாச்சியாதீவு பர்வீன் (பெயர் சரி என நினைக்கிறேன்), இறக்குவானை நிர்ஷன், கனககோபி, சுபாங்கன், அருண்பிரசாத், சந்ரு, வரோ, பண்டாரவளை புனாகலையிலிருந்து ஒரு நண்பர் இன்னும் பல நண்பர்களை (பலரது பெயர்கள் நினைவுக்கு வரவில்லை மன்னிக்கவும்) சந்திக்க கிடைத்தது. இவர்களது நட்பு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.


======================================================
நேற்று அப்ரிடி நியுசிலாந்தோடு விளையாடிய ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மனுஷன் நேற்று போல் பொறுப்பாக விளையாண்டால் அவரை அடிக்க ஆளே கிடையாது. ஒரு காலத்தில் நான் அப்ரிடியின் அதிரடிக்காக தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். கம்ரான் அக்மலும் எந்த இடத்தில் விளையாண்டாலும் கலக்குறார். 


அவுஸ்திரேலியா அணியில் எத்தனை பேருக்கு காயம் வந்தாலும் புதிதாக வரும் வீரர்கள் கலக்குகிறார்கள். என்னதான் அடிவாங்கினாலும் சிங்கம் சிங்கம்தான். சச்சின், தோனி இல்லாத இந்திய அணியும் சங்கக்கார, தில்ஷான், மகேல இல்லாத இலங்கை அணியும் நினைத்தே பார்க்க முடியாது, ஆனால் அவுஸ்திரேலியா புதிதாக அணிக்குள் கொண்டு வரும் அனைவரும் சீனியர் வீரரை போல் ஆடுகின்றனர். இது அவர்களது உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பு எவ்வளவு உறுதியானது என காட்டுகிறது. 


மேற்கிந்திய அணி கிறிஸ் கெயிலின் தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்க்க போகிறது வரவேற்க படவேண்டிய ஒன்று. இவ் அணி தாங்கள் முன்வைத்த கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள்தான் என இத்தொடரில் நிருபிக்க வேண்டியிருக்கிறது.


======================================================
பதிவர் சந்திப்புக்கு சென்று திரும்புகையில் இன்னொரு விடயம் நடந்தது. பஸ்ஸில் எனது பக்கத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். நானும் பொழுது போகாவிடின் அவளுடன் கடலை போடலாம் என நம்பி (வடிவேலு மாதிரி வாசிக்க வேண்டும்) இருந்தால் பஸ் பயணத்தை தொடங்கி சிறிது நேரத்தில் அவள் நன்றாக தூங்கிவிட்டாள். அப்படியே நானும் தூங்கிவிட்டேன் கேகாலை நகருக்கு அண்மையில் பஸ் போய் கொண்டிருக்கையில் நான் விழித்து கொண்டேன். எனது தோளில் சாய்ந்து யாரோ தூங்கி கொண்டிருந்தார்கள். அப்புறம் பார்த்தால் அந்த பெண் ஏதொ ரொம்பவே நெருங்கியவருடைய தோளில் தூங்குவது போல் எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு எழுப்புவோமா, வேண்டாமா என யோசனை கடைசியில் எழுப்பவில்லை. கடைசியில் பேராதனை வரும் போது அவள் முழித்து கொண்டாள். எனது தோளில் தூங்கியதை கண்டு மன்னிப்பு கேட்டாள். நானும் பெரிய மனிதர் போல் மன்னித்து விட்டேன். கண்டியை பஸ் நெருங்குகையில் அவள் பஸ்ஸை விட்டு இறங்கி விட்டாள்.


"அடடா வடை போச்சே...”


======================================================
போன வாரம் ”வடை போச்சே ” என லோஷன் கூறிய கவிதை பலருக்கும் பிடித்தமானதால் இவ்வாரம் எனது நண்பனொருவன் நடுராத்திரியில் என்னை எழுப்பி அலைபேசிய கவிதை


“பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக் காய்ச்சலை”

======================================================


விஜய் படம் போட்டால் “இருக்கிறம்” சஞ்சிகை நன்றாக விற்பனையாகிறதாக அச்சுவலை சந்திப்பில் அச்சஞ்சிகை சார்பில் சொல்லப்பட்டது. நானும் ஒரு விஜய் படம் போடுகிறேன் பார்க்போம் இந்த பதிவுக்கு அதிக வாக்குகள் கிட்டுகிறதா என???????







நூடுல்ஸ் (28-10-2009)

சென்ற முறை பதிவர் சந்திப்புக்கு பின்னர் எல்லாரிடமும் அதிகரித்த பதிவுகளின் எண்ணிக்கை இப்போ மீண்டும் குறைந்து விட்டன. திங்கட்கிழமை சந்திப்புக்கு பின்னர் மீண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணலாம்.
=============================================================
இலங்கை கிரிக்கட் அணியின் இந்திய சுற்றுலாவிற்கான அணிவிபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. சென்ற வாரம் உள்ளுர் போட்டியில் சதமடித்து தனது கழகத்துக்கு வெற்றி பெற்று தந்த மஹ்ருப்க்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடதக்கது. சனத் ஜயசூரிய இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிடின் அணியில் அவரது இடம் பறிபோக வாய்ப்புள்ளது. எப்போதும் இந்தியாவோடு சிறப்பாக விளையாடும் சனத் இம்முறையும் சாதிப்பார் என எண்ணலாம்.


அடுத்த முக்கிய மாற்றம் ஒரு நாள் அணிக்குள் மீண்டும் தில்ஹார பெர்ணான்டோ வந்துள்ளது. எனினும் சங்கக்கார இவரை டெஸ்ட் அணிக்குள் சேர்க்க முயற்சித்து பயனளிக்கவில்லையாம். ஒரு முறை சர்வதேச ஒலிபரப்பாளர் போட்டியொன்றில் இவரை உலகத்தில் மிக சிறந்த “ஸ்லோ போல்” வீசும் வேகப்பந்துவீச்சாளர் என கூறியதும் எனது பக்கத்திலிருந்த நண்பன் ஏன் உலகத்திலே மிக சிறந்த நோபோல் வீச்சாளரும் இவரே என கூறியது நினைவுக்கு வருகிறது. இம்முறையாவது மனுஷன் நோபோல் போடாமல் பந்து வீசுவாரா என பார்ப்போம் ?


எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது ரொம்ப குறைவு. அப்போதெல்லாம் வாரத்திற்கு 3,4 நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகும். அப்படி காட்டப்படும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடகி ராணி ஜோசப்பின் பாடல்கள் பார்க்க நேரிடும். அவர் பாடுவதை பார்த்து பார்த்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.  காலப்போக்கில் அவரது பாடல்களை பார்ப்பது குறைந்து போனது. சென்றவாரம் அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கவலையடைந்தேன். எங்களை இசையால் மகிழ்வித்த அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


=============================================================


சென்ற வாரம் ஆதவன் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். சூர்யாவிடம் வாரணம் ஆயிரம், அயன் படங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் குருவியில் விஜய் பறப்பதை விமர்சித்த அளவுக்கு சூர்யா பறப்பதை யாரும் விமர்சிக்கவில்லை. காரணம் என்ன வென்று தெரியவில்லை


=============================================================


சக பதிவர் டாக்டர் ஜீவராஜின் அவர்களின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2009) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.  எமது பதிவர்கள் சார்பில் ஜீவராஜ், அருணா தம்பதிகளின் திருமணத்திற்கு எமது முற்கூட்டிய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். 


=============================================================


இன்று வெற்றியின் விடியலில் லோஷன் கூறிய கவிதையொன்று கேட்டு சிரித்தேன்.   விடியல் கேட்காதவர்களுக்கு கவிதை இதோ..


நாம் காதலிக்க ஆரம்பித்த பின்
 உன் தங்கையை பார்த்தேன்
"அடடா வடை போச்சே"


=============================================================
டிஸ்கி - ஆதவன் படம் பார்ப்பதை விட அயன் படத்தை மீண்டும் பார்க்கலாம்





சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன் விற்பனைகூடமொன்றிற்கு விஜயம் செய்த வினக்சின் தந்தை லினஸ் கட்டை விரலை காமித்து என்ன சொல்ல வருகிறார்?



புதன் நூடுல்ஸ்

திங்கள்தான் இதை எழுதுவோம் என இருந்தேன், ஆனாலும் நிலாமதி அக்கா தேவதையை அனுப்பி வைத்ததாலும் கார்க்கி பாவா அழகு, கடவுள், பணம், காதல் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நண்பர் மருதமூரான் பள்ளி காலத்துக்கு அழைத்து சென்றதாலும் இன்று தான் எழுத கிடைத்தது.

---------------------------------------------------
---------------------------------------------------
இலங்கை இந்தியா அணிகளுக்கிடையில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இலங்கை அணி ரசிகனான எனக்கு சற்று கவலைதான் (கவலையில் போட்டி முடிந்த பின் பரிசளிப்பை பார்க்கவில்லை, தூங்கி விட்டேன்). ஆனாலும் இரண்டாவதாக பிரேமதாச மைதானத்தில் துடுப்பெடுத்தாடும் அணிகள் 200 ஓட்டங்களை நெருங்குவதே கடினமான விடயமாக கருதுகையில், இலக்கை விரட்டி போட்டிக்கு விறு விறுப்பை கொடுத்த இலங்கை வீரர்கள் பாராட்டுக்குறியவர்கள். இந்திய அணி வெற்றி பெற்றாலும் 44 ஒவர் வரை வெற்றி இரு அணிக்கு இடையிலும் மாறி மாறி பென்டுலம் ஆடியது,

பெங்களுரில் கமராமேனை அடித்து பெருமை சேர்த்த ஹர்பஜன் இன்னும் விட்டிருந்தால் மைதானத்தில் இலங்கை வீரர்களை அடித்து வீழ்தியிருப்பார். ஹர்பஜன், இசாந்த் சர்மா, நேஹ்ரா, பதான் போன்றோர் விளையாடும் வரையில் ICC யால் வழங்கப்படும் கண்ணியமான அணி என்ற விருது இந்தியாவுக்கு கிடைக்காது. இவ்வளவுககும் சச்சின், டிராவிட் போன்ற கண்ணியமான வீரர்கள் அந்த அணியில் தான் இருக்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

இலங்கை தோற்றது கவலையாக இருந்தாலும், ஆனானப்பட்ட ரோஜர் பெடரரே யு எஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் தோற்றுதானே விட்டார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன். இது உங்களுக்கு தெரிந்த செய்தி தான் ஆகவே இத்தொடர் பற்றிய வேறு சில தகவல்கள்.

இத்தொடரை நேரில் சென்று ரசித்தவர்கள் 721,059 பேர் இது சென்ற வருட 720,227 பேர் என்னும் எண்ணிக்கையை விட சற்று அதிகம். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சாதனை வரவு 61,554 மேலும் ஒரு வாரத்துக்கான அதிகளவு பார்வையாளர் சாதனை வரவான 423,427 என்னும் எண்ணிக்கையும் இத்தொடரிலே அமைந்தது (நீ என்ன கேப்டனா புள்ளி விபரம் சொல்லுறியே என கேட்க கூடாது)

ரபேல் நடால் ரோஜர் பெடரர் என இரு நட்சத்திரங்களும் இம்முறை கவிழ்ந்து விட்டன. (வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு). சென்ற வாரம் நான் ரிக்கி பொன்டிங்கை கலாய்த்து தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை உசுப்பி விட்டதால் சிங்கம் நேற்று அடித்து நொறுக்கி ஒரு சதத்தை பெற்று அவுஸ்திரேலியாவை வெற்றி பெற செய்து விட்டது. (சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்)
---------------------------------------------------
---------------------------------------------------

பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா?

தினமும் சில வானொலிகளில் காலையில் இன்றைய பலன்கள் பற்றி கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. சிலருக்கு இவற்றில் நம்பிக்கை இருந்தாலும் என்னை போல் பல பேர் காலையில் இதை கேட்பதில் ஆர்வமில்லை. (இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விடுவேன்). வானொலி போன்ற அறிவியல் ஊடகங்களில் ஜாதகம் போன்ற விடயங்கள் கதைப்பதை தவிர்த்து அறிவியல் சம்பந்தமான பல விடயங்களை செய்யலாமே?

உபரி தகவல் - இதே வானொலி வார இறுதியில் ஜோதிடம் சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியையும் செய்கிறார்கள்.

---------------------------------------------------
---------------------------------------------------

ஸ்ருதிஹாசனின் இசையில் உன்னைபோல் ஒருவன் பாடல்கள் கேட்டேன் பிரமாதம் என கூற முடியாவிட்டாலும், பரவாயில்லை எனலாம். அடுத்தடுத்த ஆலபங்களில் இன்னும் அதிகமாக பிரகாசிப்பார் என நினைப்போம். சில நேரம் படம் வந்த பின் பாடல்கள் ஹிட் ஆகலாம். சில பாடல்கள் படங்களில் பார்த்த பின் மனதை விட்டு அகலாதவை.

---------------------------------------------------
---------------------------------------------------
தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினைகள் பற்றி சந்ரு, வந்தியத்தேவன், கனககோபி போன்றோர் தங்களது பதிவுகளில் எழுதியமைக்கு நன்றி. வாழ்வுக்காக போராடும் இந்த மக்கள் தொடர்பாக பதிவர்கள் சிந்தித்தது அவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கும் என்பது ஐயமில்லை

---------------------------------------------------
---------------------------------------------------
யாழ்தேவி திரட்டியின் இந்த வார நட்சத்திர பதிவர் வந்தியத்தேவனுக்கு யோ வாய்ஸ் சார்பில் வாழ்த்துக்கள். சென்ற வார நட்சத்திர பதிவர் தங்க முகுந்தனுக்கும் வாழ்த்துக்கள். (சும்மா விட முடியுமா ரெண்டு பேரையும்  தொடர் பதிவுகளில் மாட்டி விட்டுருக்கோமில்ல).
யாழ்தேவி திரடை்டியில் இணைந்த பின் எனது தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன்.
---------------------------------------------------
---------------------------------------------------
என் காதலியின் படத்தை கீழே போட்டிருக்கிறென். பார்த்தவர்கள் எங்களின் ஜோடி பொருத்தத்தை பின்னூட்டவும்.