Showing posts with label சக்தி டீவி. Show all posts
Showing posts with label சக்தி டீவி. Show all posts

நூடுல்ஸ் (21-10-2009)

தீபாவளி முடிந்து எல்லாரும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். நான் தீபாவளி முடிந்தது என்று குறிப்பிட்டது எல்லாரும் கொண்டாடி முடித்து விட்டார்கள் என்றல்ல. என்னைப்போல் பலபேர் விடுமுறைக்கு வீடு சென்று வந்துவிட்டார்கள் என்பதைதான். எனக்கு இம்முறை தீபாவளி ஆனந்த தாண்டவம் மற்றும் தசாவதாரம் திரைப்படங்களை பார்த்ததோடு முடிந்துவிட்டது. சுஜாதாவின் ”பிரிவோம் சந்திப்போம்” நாவலை வாசித்திருந்த நான் இந்த படத்தை பார்க்க விரும்பியிருந்தேன் அது கடந்த வாரமே சாத்தியமாயிற்று. கதை வாசித்த போது இருந்த அனுபவம் படம் பார்க்கும் போது இருக்கவில்லை என்பது உண்மைதான். தசாவதாரம் படம் மீண்டும் பார்த்தேன். ஒளிப்பதிவுக்காக எத்தனை முறை படம் பார்த்தாலும் அலுக்காது.


================================================================


இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியினரின் 11 வருட நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத போது முதலில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியதற்கு நன்றிகள். சக்தியின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் சக்தியுடனேயே இருந்தனர் என்பது கண்கூடு.  சக்தி ஆரம்பிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளித்தமைக்கு எனக்கு ஒரு பொக்கட் ரேடியோ பரிசாக கிடைத்தது நன்றாக நினைவிருக்கிறது. அந்த பாடசாலை நாட்களில் அந்த வானொலி பெட்டி 24 மணிநேரமும் எங்களது அறையில் பாடி கொண்டிருந்தது. மீண்டுமொருமுறை சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு உங்களது ஆங்கில பெயர்கள், தமிழ் உச்சரிப்புகள், நிகழ்ச்சியின் தரம் போன்றவற்றை கவனிக்காவிடின் இப்போதிருக்கும் ரசிகர்கள் இன்னும் எதிர்காலத்தில் குறைய இடமிருப்பதையும் கூறிக் கொள்கிறேன்.


================================================================


ருபெல்லா தடுப்பு மருந்து இலங்கையில் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. தடுப்பு மருந்து அளிப்பது நோய் வராமல் தடுக்க என்றிருக்கும் நிலையில் அந்த மருந்தால் உயிர் போவது எவ்வளவு கொடுமையான விடயம். அரச இயந்திரம் ஒழுங்காக தொழிற்பட்டு இந்த பிரச்சினை களையபட வேண்டும். சுகாதார அமைச்சர் கூறியபடி இந்த மருந்துகளை இலங்கைக்கு விற்கும் ’ஸ்ரீராம்’ நிறுவனம் தான் உலக நாடுகள் பலவற்றிற்கு இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த பிரச்சினை எழவில்லையா?


================================================================


சம்பியன்ஸ் லீக் எதிர்பார்த்த வரவேற்பு அடையாமல் போனதற்கு நான் சென்ற வாரம் கூறியபடி ஆடுகளங்களும் ஒரு காரணம் 150 ஓட்டங்களையாவது துரத்தி பிடித்தால்தான் இவ்வகையான கிரிக்கட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் வருவர். ஆனால் இந்த மைதானங்களில் பந்து மேலெழும்பாமல் ஐந்தாம் நாள் டெஸ்ட் ஆடுகளம் போல் இருப்பது ரசிகர்களது எண்ணிக்கையை குறைக்கிறது. மேற்கிந்திய அணிகள் உலக கிரிக்கட்டில் தோற்பதையும் ட்ரினிடாட் அன்ட் டுபேக்கோ அணியினர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் காட்டிய விளைாயட்டையும் பார்க்கும் போது மேற்கிந்திய அணியின் வீழ்ச்சிக்கு பிழையான தெரிவே காரணம் என நினைக்க வேண்டியுள்ளது.


================================================================


சனிக்கிழமை ஆதவன் படம் பார்க்க போக இருந்த நான் வெள்ளியிரவு நண்பர்கள் பலரது மூஞ்சிப்புத்தக ஸ்டேசில் படம் சரியில்லை என்பதை பார்த்து எனது முடிவை மாற்றிக் கொண்டேன். இப்போ நண்பர்கள் சொல்வதை கேட்கும் போது முதல் நாள் கூட்டத்தில் அடிபட்டு விசில்களுக்கு மத்தியில் படத்தை பார்க்க இருந்த நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.


================================================================