Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

”அன்புள்ள்ள ........................ ” கடிதங்கள்

”அன்புள்ள அம்மா....”, ”அன்புள்ள அப்பா.....”, ”அன்பின் காதலிககு....” என எழுதப்ப(ட்ட)டும் கடிதங்கள் இப்போது எங்கே போய்விட்டன? கடிதம் எழுதும் கலையை நாம் இழந்து விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலையே! இன்று வியாபார ரீதியாக மட்டுமே கடிதம் எழுதப்படுகிறது. மற்றபடி கடிதங்கள் ரொம்ப குறைவு.

நானெல்லாம் சிறிய வயதில் எனது அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி எழுதி பழகியவன். அந்த நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. எனது பாடசாலை காலத்தில் 3 மாதத்திற்கு பிறகு வரும் ஒரு மாத கால விடுமுறையில்தான் வீட்டுக்கு சென்று பெற்றோரோடு இருக்கலாம். மற்றைய காலங்களில் தாத்தா வீட்டில் இருந்தபடி பாடசாலை செல்லும் வாழ்க்கைதான். அந்த காலத்தில் எனது அம்மா அப்பாவோடு நான் தொடர்பு கொண்டது கடிதங்களில்தான். அவற்றில் மறக்க முடியாத ஒரு விடயம் நான் எழுதும் கடிதங்களில் உள்ள எழுத்துப்பிழைகளை எனது தந்தை சிகப்பு பேனையால் திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி வைப்பார். எனது எழுத்து பிழைகளை நான் குறைத்து கொள்ள இதுவும் ஒரு காரணம். அந்த கடிதங்கள் தாங்கி வந்தது வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல. பாசம், கண்டிப்பு போன்றவற்றையும்தான்...

மேலும் வகுப்பில் பல மாணவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதி கொடுத்துள்ளேன். பள்ளி நண்பர்களுக்கு வரும் காதல் கடிதங்களில் மேலே ஏதாவது ஒரு காதல் பாடல் இடம் பெற்றிருக்கும் நாங்களும் அதே போல் எதிர்பாடல் ஒன்று எழுத வேண்டும். இதற்காக பாட்டு புத்தகங்கள் எல்லாம் வாங்கி பாடல் தேடுவோம். இன்றைய மாணவர்களிடம் இந்த மாதிரி கடிதக் காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று கடிதங்கள் அழிந்து போனதற்கு தொலைபேசி பேச்சுக்கள், குறுஞ் செய்திகள், மின்னஞ்சல்கள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் அவை எதுவுமே கடிதம் கொண்டு வந்த உணர்ச்சியை கொண்டு வருமென்று நான் நினைக்கவில்லை. தபால்காரனிடம் கடிதத்தை எதிர் பார்த்து காத்திருப்பது இனிமையான அவஸ்த்தை. அவை வைரமுத்து “காதலித்து பார்” கவிதையில் ”தபால்காரன் தெய்வமாவான்” இன்னொரு கவிதையில் ”காதலர்கள் இல்லா விட்டால் தபால் இலாகா நஷ்டபட்டுவிடும்” எனவும் கூறியிருப்பார், ஆனால் இது இந்த காலத்திற்கு பொருந்தாது. பிரசித்தி பெற்றவர்களது கடிதங்கள் ஏலத்தில் விடப்பட்டதை பார்த்து சின்ன வயதில் ”ஏன் இதை எல்லாம் ஏலம் விடுகிறார்கள்” என யோசித்திருக்கிறேன். ஆனால் இன்று யோசிக்கும் போது கடிதங்கள் எவ்வளவு உணர்வு மயமானவை என தோன்றுகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு தகவல் பரிமாற்றம் உடனுக்குடன் கிடைக்க போகிறது. இதனால் இவர்கள் இழக்க போகும் முக்கிய விடயங்களில் ஒன்று இந்த உணர்வுகளை காட்டும் கடிதப் போக்குவரத்து. எவ்வளவுதான் தொலைபேசியில் நேரில் கதைத்தாலும் எழுதுவதில் காட்டும் உணர்வுகளை எழுத்தில் காட்ட இயலாதென்பதே என் நிலைப்பாடு.

இனியாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதம் எழுதுவோம். அதன் உணர்வுகளை பாதுகாப்போம்.