நூடுல்ஸ்
பொதுவாக நடிகராக அஜித் என்பவரை எனக்கு பிடிக்காது, ஆனால் அந்த மனுஷனின் உள்ளதை உள்ளபடி பேசும் குணம் பிடித்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி ஜால்ரா போடும் நடிகர்களுக்கு மத்தியில் அல்டிமேட் ஸ்டார் ஒரு வித்தியாசமான மனிதர், ஆனானப்பட்ட ரஜனியே ஜெயலலிதாவை பற்றி “இவங்க ஆட்சி தொடர்ந்தால் இனி தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என கூறிவிட்டு கலைஞருக்கு அடுத்து ஜெயலலிதா முதல்வரானதும் ஜெயல்லிதாவின் துணிச்சலை கண்டு வியப்பதாக அவர் முன்னாலே மேடையில் பேசி அந்தர் பல்டி அடித்ததை பலர் பார்த்திருப்பர்.
இன்று அரசியலுக்கு வருவேன், இல்லை வரமாட்டேன், அடுத்த சனிக்கிழமை வருவேன், இப்போதைக்கு வருவதாக இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், என் கையில் எதுவுமேயில்லை என பேட்டி கொடுத்து பம்மாத்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகர்களுக்கிடையில் அஜித் வித்தியாசமான மனிதராக தெரிகிறார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எது நடந்தாலும் அடுத்த்தாக கலைஞருக்கு பட்டமளிப்பு விழா அல்லது பாராட்டு விழா என அவ்வளவு பேரும் கலைஞரை பற்றி மேடையில் ஜால்ரா அடிப்பதை போலில்லாமல் மனதில் பட்டதை கூறியிருக்கிறார். இதனால் அஜித்துக்கு ஒரு ரசிகன் கூடியிருக்கிறான் (நான் என்னை சொன்னேன்)
ஓரு சின்ன சந்தேகம் – இவ்வளவு பேர் தன்னை புகழுவதை எப்படி இந்த மனுஷன் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறதோ?
இன்னொரு சின்ன சந்தேகம் – சினிமாவுக்கு கதை எழுதுவது, சினிமா நடிகர்களை சந்திப்பது, சினிமா விழாக்களில் கலந்து கொள்வது, பட்டம் வாங்கி சேர்த்து கொள்வது, சினிமா நடிகர்களின் சின்ன வீட்டு பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர் 6 கோடி பேரை ஆளுவதற்கு முதல்வருக்கு நேரமிருக்கிறதா?
------------------------------------------------------------------------------------------------------
ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கட் போட்டி ஒன்றை கொஞ்சமாக பார்க்க வாய்ப்பு கிடைத்த்து, இந்திய தென்னாபிரிக்க ஒரு நாள் போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் இல்லாதது பரபரப்பை குறைக்கும் என நினைத்து தான் பார்த்தேன். ஆனால் எனக்கு செம திரில் போட்டி ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த்து, ஆனாலும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அதிஷ்டம் தென்னாபிரிக்காவுக்கு இருக்கவில்லை எனப்படுகிறது,
1. 1. இந்தியாவின் 50வது ஓவரில் ஆஷிஸ் நெஹ்ராவின் துடுப்பில் படாத பந்து விக்கட்டில் படுகிறது, ஆனால் அவர் ஆட்டமிழக்கவில்லை. காரணம் பெயில்ஸ் கீழே விழவில்லை மாறாக அந்த பந்து எல்லைக்காட்டை தாண்டி இந்திய அணிக்கு 4 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கிறது.
2. 2. 49வது ஓவரில் ஆறு நான்கு ஓட்டங்களாக வாரி கொடுத்த நெஹ்ரா கடைசி பந்தை அகலபந்திற்கான எல்லையை நோக்கி வீசுகிறார், ஆனால் அது அகலப்பந்தாக அறிவிக்கபடவில்லை, கட்டாயம் இந்தியா துடுப்பெடுத்தாடியிருந்தால் அது அகலப்பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
3. 3. 50வது ஓவரில் லங்கவெல்ட் அடித்த பந்து எல்லைக்கோடு வரை செல்லும் போது சச்சின் கீழே விழுந்து அதை தடுக்கிறார், ஆனால் நடுவருக்கு அது 4 ஓட்டமா இல்லையா என சந்தேகம், ஆனால் இந்தியாவின் அதிர்ஷமாக அதை கிட்டிய கோணத்தில் எந்த கேமராவும் படமெடுக்கவில்லை, சந்தேகத்தின் பயனை இந்தியாவிற்கு நடுவர் வழங்கினார்.
இதில் ஏதாவது ஒரு நிகழ்வு கொஞ்சம் மாறுபட்டிருந்தால் இந்தியா ஒரு ஓட்டத்தால் வென்ற இப்போட்டியின் முடிவு மாறியுமிருக்கலாம்.
மீண்டும் ஒரு சந்தேகம் – கடைசி நேரத்தில் மைதானத்தில் பந்து தடுக்க ஷேவாக்கை காணவில்லை, ஒரு வேளை பந்தை மைதானத்திற்கு வெளியே காலால் உதைத்து அனுப்பிவிடுவார் என்னும் பயத்தில் அவரை தோனி ரெஸ்ட் ரூமிலே இருக்க சொல்லி விட்டாரோ?
எனது மொபிடெல் (மொபைல் ப்ரோட்பேண்ட் இணைய) இணைப்பை விட்டு வேறு இணைப்பிற்கு செல்ல்லாம் என நினைக்கிறேன், காரணம் மொபிடெல்லில் அறிமுகப்படுத்தப்படும் சலுகைகள் அனைத்தும் அரசாங்க ஊழியர்களுக்கே வழங்கப்படுகிறது. எங்களை போன்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை அவர்கள் கணக்கில் எடுப்பதேயில்லை, இவ்வளவுக்கும் நான் மொபிடெல்லின் ஒரு பழைய வாடிக்கையாளர், ஆனால் என்னைவிட புதிதாக மொபிடெல்லில் இணையும் அரசாங்க ஊழியர்களுக்கு அதிக பயன்கள் வழங்கப்படுகிறது, இது எங்களை போன்ற பழைய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் அநீதியாகவே பார்க்கிறேன். ஆனால் புதிதாக எந்த கனெகஷக்கு போவது என தீர்மானிக்க இயலாமலிருக்கிறேன்
இவ்வாரம் எங்களை விட்டு பிரிந்த இலங்கை தமிழ் கலையுலகின் பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு எனது அஞ்சலிகள். கடைசியாக “இருக்கிறம்” ஏற்பாடு செய்த அச்சுபதிவு சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் கொஞ்சம் பேச கிடைத்த்து. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பதிவர்கள் சார்பில் வேண்டி கொள்கிறேன்.
எதிர்வரும் 27ம் திகதி எழுத்தாளர் சுஜாதா எம்மை விட்டு பிரிந்து இரண்டு வருடமாகிறது. அவர் தமிழ் எழுத்துத்துறையில் ஏற்படுத்திவிட்டு சென்ற இடைவெளி இன்னும் யாராலும் நிரப்பப்படாமலே இருக்கிறது. யாராலும் அந்த இடத்தை முழுமையாக நிரப்ப முடியும் என நினைக்கவும் முடியாது, காரணம் அவரை போல் சகல விடயங்களையும் பற்றி தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுபவர்கள் ரொம்பவே குறைவு. சுஜாதா பற்றி இந்த வாரம் ஒரு பதிவெழுத நினைத்திருக்கிறேன், பார்ப்போம் நேரம் கிடைத்தால் கட்டாயம் எழுத வேண்டும்.
”விண்ணைத்தாண்டி வருவாயா“ ரிலீசாக போகிறதாம் எப்படியும் முதல் வாரத்திலே பார்த்துவிட வேண்டும் இந்த படத்தை நான் விரும்பி பார்க்க விருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது, அது ஆஸ்கார் விருது வென்ற பின்னர் ஏ.ஆர். ரகுமானின் இசையில் தமிழில் வெளிவரும் முதல் படம் என்பதாலாகும்.