பாடசாலையில் மதக்கல்வி தேவையா?

டிஸ்கி -  இது யாரையும் புண்படுத்தும் பதிவல்ல, என் மனதிற்கு தோன்றியதை பதிவிடுகிறேன், முக்கியமான விடயம் நானும் ஒரு கடவுளை நம்பும் ஆத்திகன்.



சைவ மதத்தை பின்பற்றும் நான், தீவிரமாக கடவுளை வணங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன், சமயம் பற்றிய கல்வியை பாடசாலையில் விருப்பத்தோடு கற்றுள்ளேன். மதத்தை பற்றி கற்கும் போது பாடசாலையில் எனது மதமான இந்து மதத்தை கற்றேன், மேலும் எனது பள்ளி ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் சிறிதளவு கிறிஸ்வத அறிவும் கிடைத்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது இச்சமயக்கல்வி மாணவர்களிடம் சிறிய வயதிலே பிரிவினையை தூண்டி விடுவதாக தோன்றுகிறது. இன்று உலகலாவிய ரீதியில் ஏற்படும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் மதங்களும் ஒரு முக்கிய காரணம், மனிதர்களிடம் அன்பை வளர்க்க வேண்டிய மதமே மனிதர்களிடம் பிரிவினையை தூண்டுகிறது என்றால், அம்மதம் மக்களுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்து.

இதை நான் மற்றோருக்கு கூறும் போது, என்னை ஒரு மதத்துவேசியாகவே பார்க்கிறார்கள், காரணம் இங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும். நான் கடவுளை நம்புபவன், ஆனால் நான் வணங்கும் இந்து கடவுள்தான் உலகத்தில் ஒரே கடவுள் மற்றைய எல்லா மதங்களும் பொய் என கூறவில்லை, இன்னுமொரு முக்கியமான விடயம் எனக்கு
மற்றைய மதங்களை விமர்சிக்க தார்மீக ரீதியில் உரிமையுமில்லை, காரணம் அவற்றை விமர்சிக்க கூடியளவுக்கு நான் அந்த மதங்களை கற்றவனல்ல, எனது வீட்டை சுத்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

“எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.

திருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன், சற்று பெரிய வயது வந்ததன் பின்னரே சமயக்கல்வியை விட வாழ்க்கைக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன்,

மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.

தலைப்பில் உள்ளவாறு “மதக்கல்வி பாடசாலையில் தேவையா?” என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமானது, காரணம் சிறிய வயதில் மூளைக்கு செலுத்தப்படும் விடயம் கடைசி வரை அழியாது, ஆனால் இதில் இன்னாரு விடயமும் உள்ளது, நமது மதம் பற்றி எமக்கு அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.

அதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், இப்படி கற்றுக் கொடுப்பதால் எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் இது மத ஒற்றுமையை வளர்க்கும் எனவும் நினைக்கிறேன், மேலும் சமயத்தை பரீட்சைக்கு என படிக்காமல் வாழ்க்கைக்கு என படிக்கும் நிலை வர வேண்டும் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டுங்கள், எனது கருத்து பிழை எனில் அதையும் தெரிவியுங்கள்.



43 Responses
  1. Subankan Says:

    பாடசாலைகளில் சமயக்கல்வி தேவைதான். ஆனால் அது அனைத்து சமயங்களும் ஒன்றே என்பதையும் சேர்த்தே கற்பிக்கவேண்டும்.


  2. தேவை தான் ஆன தேவையில்ல என்பது என் கருத்து


  3. Unknown Says:

    //திருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன்//

    இது தான் பிரச்சினை யோ...

    ஒரு சமயத்தை உயர்த்துவதற்காக மற்றைய மதற்களை கொடுமைக்காரர்களாக காட்டுகிறார்கள். அதனால் சிறுவயதிலேயே ஒரு துவேஷம் வருகிறது...

    எனக்கொரு சின்ன சந்தேகம்,
    பாடசாலையில் நாத்திகர்களே இருக்கமாட்டர்களா? பாடசாலையில் ஏன் நாத்திகம் கற்பிக்கப்படுவதில்லை?
    மதங்கள் உண்டென்றால் நாத்திகமும் உண்டு.
    மதங்கள் இல்லையென்றால் நாத்திகமும் இல்லை.

    மதங்கள் கற்பிக்கப்படின் ஓர் அளவோடு இருத்தல் வேண்டும்.
    செங்கல்ல பொன் கல்லா மாத்தினது எண்டு 10 வயசுப் பிள்ளைக்கு படிப்பிச்சா அந்தப் பிள்ளை எப்ப யதார்த்தத்திற்கு வரும்?
    எப்போது உண்மையை அறியப்போகிறது?

    என்னைப் பொறுத்தவரை மதபோதனைகள் தேவையில்லை.
    அப்படி மதபோதனை வேண்டுமானால் மதஎதிர்ப்பையும் ஒரு பாடமாக நடத்தல் வேண்டும்.

    இல்லை மதங்கள் தேவை என்றால் அவற்றை ஓர் அளவோடு கற்பியுங்கள்.

    ஆனால் கவலை என்னவென்றால் இங்கு பலரும் மதங்களையும் ஆன்மிகத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
    மதங்களால் தான் மனஅமைதி ஏற்படுத்த முடியும் என்பது முட்டாள்தனம்.
    மதங்கள் வேறு, மனஅமைதி வேறு...

    அருமையான பதிவு யோ அண்ணா.
    அற்புதமான இந்தப் பதிவுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

    (குறிப்பு: அனானிகள் யாராவது வந்து குழப்படி செய்யலாம். தயவசெய்து கணக்கிலெடுக்காதீர்கள்.)


  4. Anonymous Says:

    //எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.//

    பலே!!!!

    //மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.//

    இத தான் நான் கத்தி கத்தி லோஷன் அண்ணாவின்ட ஒரு ஆக்கத்தில் சொல்ல வெளிக்கிட்டன். யப்பா... அந்த மதவாதியள் என்னை ஒரு வழி பண்ணிட்டார்கள்.

    இன்னும் ஒரு கூத்து என்ன என்றால். பரத நாட்டியத்தில் பரிசுத்தமான சிவனை வணங்குகிறேன் என்டு வரும். அதை வேத பிள்ளையள் எழுத மாட்டினம். எக்ஸாம்-இல் வந்தால் கூட எழுத மாட்டினம். என்ன கோதாரி என்டு இருக்கும். இந்தியாவில் கூட மத கல்வி இல்லை.

    அனாலும் எனக்கு இந்து சமயம் மனிசனா இரு என்டு சொல்லி தந்த நினைவு. மனிசனா வாழ விடுறாங்களே.

    //பாடசாலைகளில் சமயக்கல்வி தேவைதான். ஆனால் அது அனைத்து சமயங்களும் ஒன்றே என்பதையும் சேர்த்தே கற்பிக்கவேண்டும்//

    I 2nd in.

    //அனானிகள் யாராவது வந்து குழப்படி செய்யலாம்//
    செய்யலாம் இல்லை. நல்ல கும்ம போறான்கள். வாழ்த்துக்கள் சகோதரா.

    P.S:- அருமை ஆனா ஆக்கம். கண் கலங்கிடுச்சு... நக்கல் இல்லை. உண்மையா தான் சொல்லுறன். யப்பா உண்மையை சொல்ல கூட யோசிக்க வேண்டி இருக்கு


  5. நல்ல பதிவு நண்பரே.. சிந்திக்க வேண்டிய விடயத்தை நன்றாக அலசியுள்ளீர்கள்.

    //மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.//

    சரியான கருத்து. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.


  6. Anonymous Says:

    எனதருமை கும்மியடிக்கும் கட்சித் தொண்டர்களே... புல்லட் போண்டி கணக்க உங்கள் கட்சிக்காரர் ஒருவரைப் பற்றி கதைக்கிறார்... கொஞ்சம் கும்முங்கோவன்.. பெண் பாவம் பொல்லாதது.. சொல்லிப்போட்டன்...

    Sorry for spamming :-(


  7. சமயம் சமூகக்கல்வி வரலாறு புண்ணாக்கு புனஸ்காரம் போன்றவற்றை படித்ததுக்கு பேசாமல் ஏதாவது வாத்தியத்தையோ இல்லை மொழியையோ பழகியிருக்கலாம்.. சுத்த வேஸ்ட்டு..

    உந்த பாடங்கள் வளர்ந்த பிறகு தேவைப்பட்டால் விரும்பினாக்கள் தேடிப்படித்துக்கொள்ளுவாங்கள்தானே? சும்மா அநியாய நேரம்.. எங்க சொல்லுங்க பாப்பம் பண்டுகாபய மன்னன்க்கு தேவநம்பிய தீசன் என்ன முறை? அப்பர் பிள்ளைய உயிர்ப் பிக்க பாடின பாட்டு என்ன?

    அப்பற்ற பாட்டை பாடி செத்துப்ுபோன எல்லாம் கோழியை எழுப்ப நான் ட்ரை பண்ணியிருக்கிறன்... எல்லாம் சமய வாத்தி விட்ட புருடாவ நம்பி..ஆனா அவன் பாட்டு பாடினா செத்த கருவாடும் எழும்பி துண்டைக்காணம் துணியக்காணம் எண்டு ஓடும்.. அவ்வளவு ராகபத்தியம் பயபுள்ளைக்கு.. அது வேற கதை


  8. Unknown Says:

    //அப்பற்ற பாட்டை பாடி செத்துப்ுபோன எல்லாம் கோழியை எழுப்ப நான் ட்ரை பண்ணியிருக்கிறன்... எல்லாம் சமய வாத்தி விட்ட புருடாவ நம்பி..ஆனா அவன் பாட்டு பாடினா செத்த கருவாடும் எழும்பி துண்டைக்காணம் துணியக்காணம் எண்டு ஓடும்.. அவ்வளவு ராகபத்தியம் பயபுள்ளைக்கு.. அது வேற கதை //

    ஹா ஹா...
    புல்லட் அண்ணா எண்டா புல்லட் அண்ணா தான்....


  9. //மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும்//

    இதற்கு எந்த ஆதாரமுமில்லை!
    மேலும் மதவாதிகள் அனைவரும் ஒழுக்க சீலர்கள் கிடையாது!


  10. //எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.//

    இது ரைட்டு!


  11. //மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும்//

    அப்படியா?...

    Turkey 95%
    Malta 95%
    Cyprus 90%
    Romania 90%
    Greece 81%
    Portugal 81%
    Poland 80%
    Italy 74%
    Ireland 73%
    Croatia 67%
    Slovakia 61% %
    Spain 59%
    Austria 54%
    Lithuania 49%
    Switzerland 48%
    Germany 47%
    Luxembourg 44%
    Hungary 44%
    Belgium 43%
    Finland 41%
    Bulgaria 40%
    Iceland 38%
    United Kingdom 38%
    Latvia 37%
    Slovenia 37%
    France 34%
    Netherlands 34%
    Norway 32%
    Denmark 31%
    Sweden 23%
    Czech Republic 19%
    Estonia 16%

    இந்த நாடுகளில் மேலுள்ள வீதமானோர் மட்டும்தான் கடவுளை நம்புகின்றனர்

    மிச்ச ஆட்களெல்லாம் என்ன ஒழுக்கம் கெட்டா திரிகிறார்கள்?

    எவ்வளவு நாள்தான் மதவாதிகள் இந்த பிற்போக்குத்தனமான கருத்தை கூறிக்கொண்டிருப்பார்கள்.

    நிறைய வாசியுங்கோ. கடவுள், மதம் பற்றி உங்களுக்குள்ளயே கேள்விகள் கேளுங்கோ... நமட்டுச் சிரிப்போட, ஙொய்யாலே இதயா இவ்வளவு காலமும் நம்பீட்டிருந்தோம் என்று இயற்கைக்கு வராட்டிப் பாருங்கோ.

    கடவுள் நம்பிக்கையின்மை (அந்ததாள் இருந்தாத்தான), மதங்கள் இல்லாமை போன்றன மட்டும்தான் உலகை சரியான வழிக்குக் கொண்டு செல்லும்.


  12. //அதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், //

    யோ,,, இங்க உங்களை நினைச்சா சந்தோசமாக் கிடக்கது..

    நானும் இதையேதான் வலியுறுத்துவது.

    பதினெட்டு வயதுக்குமுன்னர் மதக்கல்வி இருக்கக்கூடாது. வளர்ந்து அவனவன் விரும்பினதுக்குப் போகட்டும்... அப்பிடி இல்லையெண்டா, சின்ன வயசில இருந்து எல்லா மதமும் படிப்பிக்கவேணும்...

    அடிச்சுச் சொல்லுறன் சின்னவயசில இந்து, பௌத்தம், இஸ்லாம், கிருஸ்தவம் எண்டு எல்லாத்தையும் படிப்பிச்சா,,, எவனும் கடவுளை நம்பமாட்டான்.. சுத்த புலுடா எண்டு வடிவா விளங்கும்..

    நல்ல பதிவு யோ


  13. உண்மையோ பொய்யோ விழுமியப்பண்புகள் என்பது ஆன்மிகம் பாற்பட்டது என்ற கருத்தே பல பேரிடம் நிலவி வருகிறது. ஆக திடீரென ஆன்மீகக் கல்வியை இல்லாமற் செய்தல் என்பது சாத்தியமில்லை. எனவே பாடத் திட்டத்தை தயார் செய்பவர்கள் மதத் துவேஷத்தை தூண்டாத வகையிலான விடயங்களை தெரிதல் முக்கியமானதாகும். அப்பரை சமணர் கொடுமை படுத்தியதை சொல்பவர்கள் ஏனோ பல சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதை மறந்து போகின்றனர்.
    சமயம் படித்து மூலச் சலவைக்குள்ளானவர்களால் நான் பெரும் பாடு பட்டிருக்கிறேன் பாடசாலையில்


  14. Unknown Says:

    //அடிச்சுச் சொல்லுறன் சின்னவயசில இந்து, பௌத்தம், இஸ்லாம், கிருஸ்தவம் எண்டு எல்லாத்தையும் படிப்பிச்சா,,, எவனும் கடவுளை நம்பமாட்டான்.. சுத்த புலுடா எண்டு வடிவா விளங்கும்.. //

    ஹா ஹா... 150 வீதம் உண்மை....
    எல்லாத்தையும் படிப்பிச்சா ஒருத்தனும் ஒண்டையும் நம்பமாட்டான்......


  15. @ Subankan

    ஆமாம் சுபாங்கன், ஆனால் இப்போது இருக்கும் மதக்கல்வி இன்னும் கொஞ்சம் சீர்திருத்தப்பட்டு போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறேன், மேலும் இதை ஒரு பரீட்சைக்கான பாடமாக படிக்க கூடாது என்பதும் என் கருத்து


  16. @ ஜெட்லி

    ஆமாம் ஜெட்லி நானும் இதே கருத்தையே கொண்டிருக்கிறேன்.


  17. @ கனககோபி

    சரியாக தான் சொல்லியிருக்கிறீர்கள் கோபி, கடவுளை நம்புபவர்களை ஊக்குவிக்கும் நமது சமூகம், நாத்திகரை சமூக விரோதியாக பார்ப்பது கண்டிக்கத்தக்கது, எப்போ மதம் என்பது அன்பை மட்டுமே போதிக்கும் என்னும் நிலை வருகிறதோ அன்றுதான் எமது இதற்கு விடிவுகாலம், பார்க்கலாம்..


  18. @ கனககோபி
    அனானிகளாலே தொல்லையில்லை, ஆனால் கடைசியாக நான் எழுதிய பதிவுகளில் இந்த பதிவிற்கே மிக குறைந்த தமிழிஷ் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன, இந்த பதிவு ஹிட் ஆகாததன் காரணம், சமயக் கோட்பாடுகளை எதிர்த்து எழுதியதோ தெரியவில்லை


  19. @ Mukilini
    நன்றி, நான், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்த மாதிரி இங்கு யாரும் எதிர்கருத்து கூற வரவில்லை,

    ஏன் எதிர்க்கவில்லை எனவும் தெரியாது.

    மனிதனாக வாழ சமயம் கற்று கொடுத்தால் அது நலமே


  20. Admin Says:

    நல்ல பதிவு யோகா.. மதக் கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளில் தேவையற்றது. முன்னர் தேவையாக இருந்திருக்கலாம். மதக்கல்வியினை கற்பிக்கும் நேரம் இன்றைய இன்றைய காலத்துக்கு ஏற்ற நல்ல விடயங்களை கற்பிக்க முடியும். பாடசாலையில் பாடமாக இருந்தால்தான் மதத்தை ஒருவன் நம்புவான். அறிந்து கொள்வான் என்பதில்லை.


  21. @ சுப.நற்குணன்

    நன்றி நண்பரே, உங்களது வருகைக்கும் பின் தொடர்கைக்கும்..


  22. @ முகிலினி
    நேற்று சற்று நேரம் போதாமையால் கும்மிக்கு வர முடியவில்லை


  23. Admin Says:

    //வால்பையன் said...
    //மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும்//

    இதற்கு எந்த ஆதாரமுமில்லை!
    மேலும் மதவாதிகள் அனைவரும் ஒழுக்க சீலர்கள் கிடையாது!//
    அப்படி சொல்லமுடியாது நல்ல மதவாதிகள் பலர் இருக்கின்றனர். ஆனால் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர்தான். மதத்தை சீரழிக்கின்றனர்


  24. Admin Says:

    மதம் என்பது ஒரு மனிதனை நல்வளிப்படுத்துகின்றது அதற்காக பாடசாலையில் ஒரு பாடமாக்கப்படவேண்டுமேன்பதில்லை. கடவுள் இருக்கின்றார். நாம் மதங்களை பின்பற்ற வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது திணிக்கப்படக்குடாது. பாடசாலையில் இது திணிக்கப்படுகின்றது.

    மதத்தினை பின்பற்றுவதா இல்லையா என்பது அவரவர் விருப்பம். எண்கள் மதவாதிகளும் மதம் வளர்க்கவேண்டும் என்பதிலே ஆரம்பகாலன்களிலே செய்த வேலைகள்தான் இந்த மதக் கல்வி.


  25. @ புல்லட்
    சரியாக சொன்னீங்க புல்லட், எத்தனையோ தேவையான விடயங்களை படித்திருக்க வேண்டிய வயதில், தேவையில்லாமல் இதையெல்லாம் படித்து எங்களது காலத்தை வீணடித்தது அநியாயம் என்றே தோன்றுகிறது, ஏனென்றால் இன்று இந்த பாடங்களை படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை அதிகமே.. வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்பிக்கும் நிலைக்கு நமது கல்விமுறை மாற வேண்டும்.


  26. @ கனககோபி
    ஆமாம் கோபி எதையும் நகைச்சுவையாகவும் ஆணியடித்தாற் போலவும் சொல்வதில் புல்லட் சூரர் தான்


  27. @ வால்பையன்

    ஆமாம் வால், மதவாதிகள் அனைவரும் ஒழுக்கசீலர் கிடையாது, ஒழுக்கசீலர் அனைவரும் மதவாதிகளும் கிடையாது என்பதுதான் எனது கருத்துமாகும்.


  28. @ கவிக்கிழவன்

    நன்றி கவிக்கிழவரே வருகைக்கும் எனது கருத்தை ஆதரித்ததற்கும்..


  29. @ மதுவதனன் மௌ. / cowboymathu

    நன்றி மது வருகைக்கும் ஆதாரத்துடன் எனது கருத்தை நிரூபித்ததற்கும், எங்களது படிப்பறிவற்ற மக்களின் நடத்தைகளை ஒழுங்குபடுத்த கொண்டுவந்ததே இம்மதம் பற்றிய கல்வி என நினைக்கிறேன், ஆனால் இன்று மதவாதிகளினால் தான் உலகத்தில் அதிகம் பிரச்சினைகள் ஏற்படுவது என்னும் போது அந்த மதமே தேவையில்லை என நினைக்கிறேன்..


  30. @ மதுவதனன் மௌ. / cowboymathu

    ////அடிச்சுச் சொல்லுறன் சின்னவயசில இந்து, பௌத்தம், இஸ்லாம், கிருஸ்தவம் எண்டு எல்லாத்தையும் படிப்பிச்சா,,, எவனும் கடவுளை நம்பமாட்டான்.. சுத்த புலுடா எண்டு வடிவா விளங்கும்../////

    உண்மைதான் மது


  31. Subankan Says:

    //அனானிகளாலே தொல்லையில்லை, ஆனால் கடைசியாக நான் எழுதிய பதிவுகளில் இந்த பதிவிற்கே மிக குறைந்த தமிழிஷ் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன, இந்த பதிவு ஹிட் ஆகாததன் காரணம், சமயக் கோட்பாடுகளை எதிர்த்து எழுதியதோ தெரியவில்லை
    //

    சமயக்கருத்துக்களை எதிர்த்து எழுதியதால் என்பதைவிட சமயக்கருத்துக்களில் ஆர்வமுடையவர்கள் குறைந்துவருகிறார்கள் என்பதும் காரணமாகிருக்கலாம்.


  32. @ தர்ஷன்
    ஆமாம் தர்ஷன், நாங்களெல்லாம் கடவுள் விடயத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம், கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து விடுபடுவோம், அடுத்த தலைமுறைக்கு மூடநம்பிக்கையை நாம் கொண்டு செல்லாதிருப்போமே..


  33. @சந்ரு

    ஆமாம் சந்ரு. நீங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்கள் என நான் நினைத்தேன், நீங்களும் எமது பக்கமா நன்றி


  34. ////சந்ரு said...
    அப்படி சொல்லமுடியாது நல்ல மதவாதிகள் பலர் இருக்கின்றனர். ஆனால் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர்தான். மதத்தை சீரழிக்கின்றனர்////

    ஆமாம், ஆனால் ஒரு கிண்ண பாலை கெடுக்க ஒரு துளி விஷம் போதுமே, அதனால்தான் சமயக்கல்வி வேண்டாம் என்கிறேன் சந்ரு..


  35. ////Subankan said...

    சமயக்கருத்துக்களை எதிர்த்து எழுதியதால் என்பதைவிட சமயக்கருத்துக்களில் ஆர்வமுடையவர்கள் குறைந்துவருகிறார்கள் என்பதும் காரணமாகிருக்கலாம்.////

    அப்படி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே சுபாங்கன்


  36. Admin Says:

    மதம் எனும் பெயரால் எதனை சொன்னாலும் நம்பும் எமது சமுகம் திருந்தும்வரை. மூட நம்பிக்கை இல்லாதொளியப்போவதில்லை.


  37. @சந்ரு

    ஆமாம் சந்ரு. எம்மக்களிடம் மதத்தை வைத்து எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்னும் நிலை அகல வேண்டும்...


  38. Unknown Says:

    //யோ வொய்ஸ் (யோகா) said...
    அனானிகளாலே தொல்லையில்லை, ஆனால் கடைசியாக நான் எழுதிய பதிவுகளில் இந்த பதிவிற்கே மிக குறைந்த தமிழிஷ் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன, இந்த பதிவு ஹிட் ஆகாததன் காரணம், சமயக் கோட்பாடுகளை எதிர்த்து எழுதியதோ தெரியவில்லை //

    வாக்குகளை விடுங்கய்யா...
    எத்தனையோ பதிவுகளை நகைச்சுவைக்காகவும், மற்றவர் இரசிக்கவுமே எழுதுகிறோம்...
    எப்போதாவது இருந்துவிட்டு நல்ல பதிவுகளை, சமூக குறையாட்டுக்களை சுட்டிக்காட்டி எழுதுவதில் ஒன்றுமே இல்லை.......

    தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.....


  39. //கனககோபி said...

    வாக்குகளை விடுங்கய்யா...
    எத்தனையோ பதிவுகளை நகைச்சுவைக்காகவும், மற்றவர் இரசிக்கவுமே எழுதுகிறோம்...
    எப்போதாவது இருந்துவிட்டு நல்ல பதிவுகளை, சமூக குறையாட்டுக்களை சுட்டிக்காட்டி எழுதுவதில் ஒன்றுமே இல்லை....
    தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.....////

    ஆமாம் கோபி இனி வாரத்துக்கு ஒன்றாவது இப்படி பட்ட விடயங்களை எழுத வேண்டும் என நினைக்கிறேன்.


  40. This comment has been removed by the author.

  41. கருத்துச் சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் நான் இப்பதிவை இட விரும்புகிறேன்.

    நாம் எல்லோரும் சமயக் கல்வியைப் படித்தவர்கள் தான்!
    சமயக் கல்வி விரோதத்தை ஒருபோதும் வளர்க்கவில்லை!
    நாம் அன்பை அறிந்து கொண்டோம் - பாடசாலைகளில்தான் பல வேற்று சமயத்தவர்களோடு பழகினோம்! அவர்களது பழக்க வழக்கங்களைப் புரிந்து கொண்டோம்! மற்றவர்களையும் அறிந்து புரிந்து பழகிக்கொண்டோம்!

    மனதைப் பக்குவப் படுத்துவதுதான் சமயம் - பகையை வளர்க்குமானால் அது மதமே!

    எமக்குப் போதித்த அன்றைய ஆசிரியர்களின் பக்குவமான வழிகாட்டலும் இங்கு குறிப்பிடத் தக்கது!


  42. This comment has been removed by the author.

  43. கலை Says:

    இதே கருத்தையே நாஉம் கொண்டிருக்கிறேன். மனிதனுக்காக மதம் என்பதுபோய், மதத்துக்காக மனிதன் என்ற நிலை எப்போது வந்துவிட்டதோ, அப்போதே இந்த மதங்கள் களையப்பபட வேண்டியவை ஆகிவிட்டன. 'மனிதம்' என்ற மதமே விரும்பப்படும் மதமாக மாற வேண்டும். ஆனால், மாறுமா? மாற விடுவார்களா என்பதுதான் கேள்வி :(. ஆனால் தொடரும் தலைமுறைகள் இதை சரியாக உணர்ந்து கொண்டால் முடியும்.
    இது தொடர்பான எனது இரு பதிவுகள், நேரம் கிடைத்தால் பாருங்கள். http://kalaiarasy.com/2005/05/religion-human/
    http://kalaiarasy.com/2007/09/religion/